Published:Updated:

அட பாவிகளா! - களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல்

கொரோனா ஊழல்
பிரீமியம் ஸ்டோரி
News
கொரோனா ஊழல்

ஒருசில இடங்களில் தினக்கூலிகளின் சம்பளத்திலேயே ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் கமிஷனையும் ஆய்வாளர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கில் பெரு முதலாளிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை எல்லோரும் வருமானமின்றி வாடி வதங்கிக்கிடக்க, அதிகாரத்திலிருக்கும் அரசியல் வி.ஐ.பி-க்கள் மற்றும் அதிகாரிகள் காட்டில் மட்டும் இப்போதும் பணமழை பொழிகிறது. களப்பணியில் ஆரம்பித்து, கவச உடை கொள்முதல் வரை அனைத்திலும் ஊழல் தாண்டவமாடுவதாகக் குவியும் புகார்கள் பற்றி ஜூ.வி டீம் களமிறங்கி விசாரித்ததில் கிடைத்தவை அத்தனையும் அதிர்ச்சி ரகம்.

களப்பணியில் ஊழல்

கொரோனா வைரஸ் தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர் வசிக்கும் வீட்டைச் சுற்றிச் சராசரியாக ஐந்து கி.மீ சுற்றளவிலுள்ள அனைவருக்கும் பரிசோதனை நடத்தப் படுகிறது. இதற்கான களப்பணியில் ஒரு செவிலியர், ஓர் அங்கன்வாடி ஊழியர், ஒரு தினக்கூலி ஊழியர்கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுதான் வீடு வீடாகச் சென்று கொரோனா சோதனை செய்து கணக்கெடுக்கிறது. இவர்களில் தினக்கூலி ஊழியருக்கு நாள் ஊதியமாக 385 ரூபாய் வழங்கப்படுகிறது. இதில்தான் முறைகேடு வெடித்திருக்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘‘ஓர் ஊராட்சி ஒன்றியத்துக்கு 30 பேர் வீதம், தமிழகத்திலுள்ள 385 ஊராட்சி ஒன்றியங்களில் ஏறத்தாழ 11,500 பேரை தினக்கூலிகளாக வேலைக்கு எடுத்துள்ளனர். இவர்களுக்கு அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை ஆய்வாளர்கள்தான் பொறுப்பு. பல இடங்களில், 30 பேரை எடுக்க வேண்டிய இடத்தில் 15 பேரைத்தான் வேலைக்கு எடுக்கிறார்கள். தங்கள் உறவினர்கள், தெரிந்தவர்களின் பெயர்களைப் பட்டியலில் எழுதி அவர்களின் வங்கிக்கணக்கு விவரங்களைக் கொடுத்து போலி பில் போடுகிறார்கள்.

ஒருசில இடங்களில் தினக்கூலிகளின் சம்பளத்திலேயே ஒரு நாளைக்கு 100 ரூபாய் வீதம் கமிஷனையும் ஆய்வாளர்கள் சுருட்டிக் கொள்கிறார்கள். இதை எதிர்த்தால் அடுத்த நாள் வேலை இருக்காது என்பதால், யாரும் எதிர்த்துக் கேள்வி கேட்பதில்லை. இந்தக் கொள்ளை தமிழகமெங்கும் அரங்கேறுகிறது’’ என்கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

அட பாவிகளா! - களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல்

‘‘சென்னை உள்ளிட்ட மாநகராட்சிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், ஏறத்தாழ 21,000 பேர் தினக்கூலிகளாக கொரோனா பரிசோதனை களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மட்டும் ஒரு மாதத்துக்குச் சராசரியாக 13 கோடி ரூபாய் பறிக்கின்றனர்’’ என்கின்றன சுகாதாரத்துறை வட்டாரங்கள்.

சானிடைஸர் ஊழல்

ஐசோபுரொபைல் ஆல்கஹால், கிளிசரால், ஹைட்ரஜன் பெராக்சைட் ஆகியவற்றைக் கொண்டுதான் சானிடைஸர் தயாரிக்கப்படுகிறது. இதை நமது அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள மருந்தியல்துறைகளிலேயே தயாரிக்க முடியும். திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியில் இப்படித்தான் தயாரித்து விநியோகிக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல், ஒரு லிட்டர் 500 ரூபாய் வீதம் 2,000 லிட்டர் சானிடைஸரைத் தனியாரிடம் அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இதற்காக 6.28 கோடி ரூபாய் செலவழித்துள்ளனர். உண்மையில், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் சோப்புத் தண்ணீரைத்தான் சானிடைஸராகப் பயன்படுத்துகிறார்கள். அப்படியெனில், கொள்முதல் செய்ததாக பில் போடப்பட்ட சானிடைஸர்கள் எங்கே போயின?

அட பாவிகளா! - களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல்

மாஸ்க் ஊழல்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு முன்பு, தனியார் நிறுவனமான வீனஸின் என்.95 மாஸ்க் ஒன்றின் விலை 115 ரூபாயாக இருந்தது. அரசு நினைத்திருந்தால், இதுபோன்ற மற்ற தனியார் நிறுவனங்களிடம் பேசி, என்.95 மாஸ்க்குகளை 70 ரூபாய் அடக்க விலையில் கொள்முதல் செய்திருக்க முடியும். ஆனால், 260 முதல் 350 ரூபாய் வரை விலைவைத்து 8,000 மாஸ்க்குகளை வாங்கியிருக்கிறது அரசு. இதிலும் ஐந்து மடங்கு ஊழல்!

இதுபோல, வெறும் மூன்று ரூபாய்க்கு சந்தையில் விற்கப்பட்ட மூன்றடுக்குச் சாதாரண மாஸ்க்குகள் 19 ரூபாய் வரையில் அரசால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதற்காக 4.48 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. கமிஷனைக் கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவிலும் ஊழல்

தனி வார்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஒரு நாள் உணவுக்கு 800 ரூபாய் வீதம் செலவழிப்பதாக மருத்துவமனைத் தரப்பில் சொல்கிறார்கள். பல இடங்களில் 1,090 ரூபாய்க்கு பில் போட்டிருக்கிறார்களாம். `பதினான்கு நாள்கள் நோயாளிகளை மருத்துவமனையில் வைத்திருந்தால், 15,000 ரூபாய் செலவு’ என்கிறது சுகாதாரத்துறையின் கணக்கு. இதுபோல எத்தனை நபர்களின் பெயர்களில் கணக்கு எழுதப்பட்டு, எவ்வளவு செலவானது போன்ற தகவல்களைச் சுகாதாரத்துறை சொல்ல மறுக்கிறது.

தனிமைப்படுத்துதலில் முறைகேடு

கொரோனா வார்டுகளில் பணியாற்றிய அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் 14 நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள முதற்கட்டமாக 60 கோடி ரூபாய் நிதியை அரசு ஒதுக்கியுள்ளது. இதில் மருத்துவமனை நிர்வாகத்துக்குத் தேவையான நிதியை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ரிலீஸ் செய்வார்கள். தங்கவும் உணவுக்காகவும் ஒரு நாளைக்கு ரூ.3,000 வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. `போதிய பணியாளர் இல்லை’ என்று ஏழு நாள்கள் மட்டுமே அவர்களைத் தனிமைப்படுத்துகின்றனர். ஆனால், 14 நாள்கள் ஓட்டலில் தங்கவைத்ததாக பில் போடப்படுகிறதாம். ஆளுந்தரப்புக்கு நெருக்கமாக இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர்கள் தைரியமாக இந்த முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.

பணி நியமனத்தில் ஊழல்

கொரோனா பணிக்காக 39 அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், லேப் டெக்னீஷியன்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 2,260 பணியாளர்களைத் தற்காலிக வேலைக்கு சுகாதாரத்துறை எடுத்துள்ளது. மே 15-ம் தேதி இதற்கான கடிதத்தை மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டு, மே 27-ம் தேதியிலிருந்து பணி நியமன ஆணைகளைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். பத்தாயிரம் ரூபாய் சம்பளம் உள்ள ஒரு லேப் டெக்னீஷியன் வேலைக்கு ஒரு லட்ச ரூபாய் லஞ்சம் கைமாறியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. `எப்படியாவது உள்ளே நுழைந்துவிட்டால், பிறகு வேலையை நிரந்தரமாக்கிக்கொள்ளலாம்’ என்ற நம்பிக்கையில் பணியாளர்கள் பலரும் பணத்தைக் கொடுத்து பணியில் இணைந்திருக்கிறார்களாம்.

இரண்டு நிறுவனங்கள் யாருடையவை?

`பி.பி.இ கிட்’ எனப்படும் கவச உடையின் தோராய சந்தை விலை 290 ரூபாய் என்று மார்ச் 24-ம் தேதி சுகாதாரத்துறை வெளியிட்ட அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே பி.பி.இ கிட் உடைகளை `1,500 ரூபாய்க்குக் கொள்முதல் செய்யலாம்’ என்று மற்றோர் அரசாணையில் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு அரசாணைகளிலும் முன்னுக்குப் பின் முரணாக அரசே தொகைகளை மாற்றிக் குறிப்பிட்டுள்ளது.

அட பாவிகளா! - களப்பணி முதல் கவச உடை வரை... கொரோனா ஊழல்

காலால் அழுத்தி இயக்கும் 1,900 சானிடைஸர் கருவிகளைப் புதிதாகக் கொள்முதல் செய்திருக்கிறார்களாம். அதன் மார்க்கெட் விலை அதிகபட்சம் 800 ரூபாய். ஆனால், 1,800 ரூபாய் என்ற விலையில் வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல். இந்த முறைகேட்டின் பின்னணியில் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஒருவர் பெயரை அதிகாரிகள் முணுமுணுக்கிறார்கள். அவர்தான் இப்போது சுகாதாரத்துறையில் ராஜநடை போட்டு வருகிறாராம்.

கொரோனா தடுப்புப் பணிகளுக்காக மேற்கொள்ளப்படும் டெண்டர்களில், ‘டெண்டர் டிரான்ஸ்பரன்சி தேவையில்லை’ என அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த அதிகாரத்தை வைத்துக்கொண்டு அனைத்து மட்டங்களிலும் முறைகேடு அரங்கேறுவதாக சுகாதாரத் துறையிலுள்ள நேர்மையான அதிகாரிகள் கொதிக்கிறார்கள். பெரும்பாலான டெண்டர்கள், எழும்பூர் மான்டியத் சாலையிலும், வேளச்சேரி யிலும் உள்ள இரண்டு நிறுவனங்களிடம்தான் சென்றுள்ளதாம். ஓர் ஊரின் பெயரில் செயல்படும் இந்த இரு நிறுவனங்களையும் துறை மேலிடத்துக்கு நெருக்கமானவர்தான் நடத்துவதாகக் கூறப்படுகிறது. `இந்த நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட டெண்டர்களைக் கணக்கெடுத்தாலே ஊழல் அம்பலமாகிவிடும்’ என்கிறார்கள்.

‘கொரோனா காலத்தில் மேற்கொள்ளப்பட்ட டெண்டர்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ என்று பிரதமர் அலுவலகத்துக்கும், ஆளுநருக்கும் கடிதம் எழுதியுள்ள சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கண்ணன், ‘‘கொரோனா டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றிருப்பது வெட்டவெளிச்ச மாகியுள்ளது. `முறைகேட்டில் ஈடுப்பட்டவர்களை நோய்ப்பரவல் தடுப்புச் சட்டம், அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்’’ என்றார்.

இறுதியாக, அரசுத் தரப்பின் விளக்கமறிய, துறையின் அமைச்சரான விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோரைத் தொடர்புகொண்டோம். ‘‘கொரோனா ஊரடங்கு குறித்தான ஆய்வுக் கூட்டங்களில் பிஸியாக இருப்பதால் தற்போது பேச முடியாது’’ என அவர்களின் உதவியாளர்களிடமிருந்து பதில் வந்தது. அரசுத் தரப்பிலிருந்து இந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கிடைக்கும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

சுகாதாரத்துறையில் ஆனந்த நடனம்!

தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவைக்கழகத்தின் ஒப்பந்த ஊழியராக இருப்பவர் டிப்ளோமா பட்டதாரியான ஆனந்தன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஒப்பந்த ஊழியராக வந்தமர்ந்த ஆனந்தன்தான் சுகாதாரத்துறையில் `நம்பர் த்ரீ’ என்கிறார்கள். டெண்டர்களுக்கான விதிமுறைகளை உருவாக்கி, அதற்கேற்ப நிறுவனங்களை ஒப்பந்தத்துக்கு வடிகட்டுவதுதான் ஆனந்தனின் பணியாம். தற்போது கொரோனா சம்பந்தமான டெண்டர்களை இவரே கையாள்வதாகவும், மேலிடம் கைகாட்டும் கம்பெனிகளுக்கு ஏற்றவாறு விதிமுறைகளை உருவாக்கி, டெண்டர்களை அளிப்பதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு மேலதிகாரியான உமாநாத் எதுவும் செய்ய முடியாமல் கைகளைப் பிசைந்துகொண்டிருப்பதாக மருத்துவப் பணிகள் சேவைக் கழகத்தின் ஊழியர்கள் புலம்புகிறார்கள்.

புகார்கள் குறித்து விளக்கமறிய ஆனந்தனைத் தொடர்புகொண்டோம். நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவர் தரப்பில் பேசியவர்கள், ‘‘டெண்டர் கிடைக்காத விரக்தியில் இருக்கும் சில தொழிலதிபர்கள் தவறான தகவலைப் பரப்புகிறார்கள். டெண்டரிலுள்ள டெக்னிக்கல் விஷயங்களை மட்டும்தான் ஆனந்தன் கவனிக்கிறார். மற்றபடி யாருக்கு டெண்டர் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் அவர் தீர்மானிப்பதில்லை. அவரின் சேவையைக் கருதித்தான் அரசே மூன்றாண்டுகள் கன்சல்டன்ட்டாக வைத்துள்ளது’’ என்றனர்.