Published:Updated:

``தமிழர்களுக்குச் செய்கிற பச்சைத் துரோகம்!" - ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சீறும் சீமான்

ஜெ.பிரகாஷ்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

சீமான்
சீமான்

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு நாள்தோறும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இதற்காக, எதிர்க்கட்சியினரும், விவசாயிகளும் தொடர்ந்து போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். தவறும்பட்சத்தில், அதற்கு எதிராகத் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

ஹைட்ரோ கார்பன்
ஹைட்ரோ கார்பன்

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் சுட்டுரையில், 'மீத்தேன், ஹைட்ரோ கார்பன் என எதுவும் காவிரிப் படுகையில் எடுக்க மாட்டோம்' என நாடாளுமன்றத்தில் கூறினார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

இன்றைக்கு அந்த வாக்கை மீறிக் காவிரிப் படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதித்திருப்பது என்பது தமிழர்களுக்கு மத்திய அரசு செய்கிற பச்சைத் துரோகம்.
சீமான்
விவசாயிகள் எதிர்ப்பு
விவசாயிகள் எதிர்ப்பு

நிலத்தைப் பிளந்து நீரியல் விரிசல் முறையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கிற இந்தத் திட்டம் முழுமையாகச் செயற்படுத்தப்பட்டால், தமிழகத்தில் வேளாண்மையும், சுகாதாரமான சுற்றுச்சூழலும் முற்றுமுழுதாக அழியும் பேராபத்து நிகழும்.

இன்றைக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகக் களப் போராட்டங்களும், கருத்தியலும் தமிழகம் முழுக்க வீரியம் பெற்றிருக்கிற இந்த நிலையிலும்கூடக் காவிரி டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதித்தது ஏற்கவே முடியாத பெருங்கொடுமை.

சீமான்
சீமான்

எனவே, தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய தமிழக அரசு மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தர வேண்டுமெனவும், தமிழர்களின் உணர்வுக்கும், உரிமைக்கும் மதிப்பளித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மத்திய அரசு தமிழர்கள்மீது தொடுத்திருக்கும் நிலவியல் போருக்கு எதிராக வரலாறு காணாத அளவுக்குப் போர்க்களமாகத் தமிழகம் மாறும்" என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.