Published:Updated:

நிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்!

சரயு நதி
பிரீமியம் ஸ்டோரி
News
சரயு நதி

சோம்நாத் டு ராமர் கோயில்

சோம்நாத் கோயில் கட்டப்பட்ட வரலாற்றுக்குப் போகும் முன், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அரசியல் நிகழ்வைத் திரும்பிப் பார்ப்போம்.

2017, நவம்பர் இறுதியில் குஜராத் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, சோம்நாத் கோயிலுக்குச் சென்றார் ராகுல் காந்தி. இதை முன்வைத்து குஜராத் ஜூனாகட் மாவட்டத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, ராகுல் காந்தியைக் கடுமையாக விமர்சித்தார். `1950-51களில் இந்தக் கோயிலைக் கட்டுவதற்கு ராகுலின் தாத்தா நேரு எதிர்ப்பு தெரிவித்தார். சர்தார் வல்லபபாய் படேல் இல்லையென்றால், இந்த சோம்நாத் கோயில் எழுப்பப்பட்டிருக்காது. இந்த வரலாற்றை மறந்து, அரசியலுக்காக உங்கள் தாத்தா எதிர்ப்பு தெரிவித்த கோயிலுக்கு நீங்கள் விஜயம் செய்திருக்கிறீர்கள். இதை குஜராத் மக்கள் மறக்க மாட்டார்கள்' என்றார் மோடி.

சோம்நாத் கோயில் கட்டப்பட்டபோது அப்படி என்ன நடந்தது?

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கஜினி முகமது படையெடுப்பால் சோம்நாத் கோயில் சிதைக்கப்பட்டது என்கிறது வரலாறு. சுதந்திரத்துக்குப் பிறகு அந்தக் கோயிலைப் புனரமைக்க முடிவுசெய்தார் அப்போது மத்திய அமைச்சரவையில் இருந்த (1952-53) கே.எம்.முன்ஷி. இவர் ஏற்கெனவே சோம்நாத் கோயில்குறித்து நாவல் எழுதியவர்; குஜராத் மக்களிடையே பிரபலமானவர். கோயில் புனரமைக்கும் திட்டத்துக்கு வல்லபபாய் பட்டேலின் ஒப்புதலையும் அவர் பெற்றார். 2017, நவம்பரில் எந்த ஜூனாகட்டில் மோடி பேசினாரோ, அதே ஜூனாகட்டில் 1947, நவம்பரில் பிரமாண்டமான கூட்டத்தில் வல்லபபாய் படேல் சோம்நாத் கோயில் புனரமைப்புத் திட்டத்தை அறிவித்தார்.

நிலம் நீதி அயோத்தி 5: பா.ஜ.க-வின் கோயில் அரசியல்!

சுதந்திரத்துக்குப் பிறகு ஜூனாகட் நவாப்பாக இருந்த முகமது மொகபத் கஜினி (1911-1948), பாகிஸ்தானுடன் ஜூனாகட் இணைவதைத்தான் விரும்பினார். ஆனால், குஜராத் மக்களில் சுமார் 90 சதவிகிதம் பேர் இந்துக்கள். எனவே, இனவாத வன்முறைகள் நேரிடலாம் என்பதால், சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய அரசு அதை ஏற்கவில்லை. பிறகு, ஜூனாகட் இந்தியாவுக்கு என தீர்மானமாகும்போது நடந்த ஒரு கூட்டத்தில்

தான் படேல் இந்தத் திட்டத்தை அறிவித்தார்.

தொடர்ந்து டெல்லி சென்ற வல்லபபாய் படேல், காந்தியிடம் இந்தத் திட்டத்தைத் தெரிவிக்கிறார். காந்தி, `நல்ல திட்டம்தான். ஆனால், அரசு இதில் தலையிடக் கூடாது. பொது மக்களிடம் பணம் வசூலித்து இந்தக் கோயிலைப் புனரமைக்கலாம்' என்றார். காந்தியிடம் பேசிவிட்டு நேருவிடமும் இந்தத் திட்டம்குறித்து தெரிவிக்கிறார் படேல். 1950, டிசம்பர் 15-ம் தேதி படேல் மறைந்துவிட, அதன் பிறகான காலத்தில் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த

கே.எம்.முன்ஷி இந்தத் திட்டத்தை முன்னெடுத்து நடத்துகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மீண்டும் இந்து - முஸ்லிம் பிரச்னைகள் எழுப்பப்படலாம் எனக் கருதிய நேரு, இந்தக் கோயில் விஷயத்தில் முழுமனதுடன் ஒத்துழைக்கவில்லை. இதை, பல புத்தகங்களில் இருக்கும் தகவல்கள்மூலம் அறிய முடிகிறது. 1951, மே 2-ம் தேதி முதலமைச்சர்களுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார் நேரு. அதில் `இந்தக் கோயில் விழாவை அரசாங்கம் நடத்தவில்லை' என்பதை உறுதிபடச் சொல்கிறார்.

`என்னுடைய சகாக்களில் சிலர்கூட தங்கள் சொந்த விருப்பங்களாலும் தகுதிகளாலும் அந்தப் பணியுடன் தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையே மதச்சார்பற்றதன்மைதான். அந்தப் பண்பை பாதிக்க முற்படும் எந்த ஒன்றுடனும் சேர்ந்துகொள்வதிலிருந்து தங்களைத் தாங்களே விலக்கி, கட்டுப்பாடு விதித்துக்கொள்ள வேண்டியது கட்டாயம். இந்தியாவில் இன்றைய தினம் துரதிருஷ்டவசமாக பல வகுப்புவாதப் போக்குகள் பணியாற்றிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு எதிராக நமது காவல்நிலைகளில் விழிப்புடன் நிற்கவேண்டும். மதச்சார்பற்ற, வகுப்புவாதம் அல்லாத லட்சியத்தை எல்லா காலங்களிலும் அரசாங்கங்கள் உயர்த்திப் போற்றவேண்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்' என எழுதுகிறார்.

சரயு நதி
சரயு நதி

1951-ல் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், சோம்நாத் புதிய கோயிலின் திறப்பு விழாவை தலைமைவகித்து நடத்த முடிவு செய்கிறார். அதற்காக நேருவுக்குக் கடிதம் அனுப்புகிறார் அவர். அதற்கும் பதில் கடிதம் எழுதுகிறார் நேரு. `சோமநாதர் ஆலயத்தில் மாபெரும் வசீகரமான திறப்பு விழாவுடன் உங்களை இணைத்துக் கொள்வது என்ற தங்களின் கருத்தை நான் விரும்பவில்லை. இதைத் தெரிவிப்பதற்கு மன்னிப்புக்கோருகிறேன். ஓர் ஆலயத்துக்குச் சென்று பார்வையிட்டுத் திரும்புவது என்பது மட்டுமே அல்ல அது. துரதிருஷ்டவசமாக பல தொடர் விளைவுகளை எதிர்கொள்ளப்போகும் முக்கியத்துவமிக்க ஒரு விழாவில் பங்கேற்பது என்பது அப்படிப்பட்டதல்ல. குறிப்பிட்ட ஒரு மதத்தினரின் கோயில் விழாவில் நீங்கள் கலந்து கொள்வது நிறைய தாக்கங்களை ஏற்படுத்தும்' என, தொலைநோக்குப் பார்வையுடன் குறிப்பிடுகிறார் நேரு.

குஜராத்தின் பத்திரிகைகள் சிலவும் குடியரசுத் தலைவர் மதரீதியான ஒரு விழாவில் கலந்து கொள்வது பற்றி விமர்சித்து எழுதியிருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் புறக்கணித்து ராஜேந்திர பிரசாத் அந்த விழாவில் கலந்து கொள்கிறார்.

முன்ஷி, பிற்பாடு காங்கிரஸிலிருந்து விலகி பாரதிய ஜன சங்கத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அதுவே இன்றைய பா.ஜ.க-வாக உருமாறியிருக்கிறது. நேரு குறிப்பிட்டாரல்லவா, ‘துரதிருஷ்டவசமாக பல தொடர் விளைவுகளை எதிர்கொள்ளப்போகும் நிகழ்வு’ என்று, அப்படித்தான் ஆனது.

இன்றைய ராமர் கோயில் விவகாரத்துக்கு அடித்தளமிட்ட அத்வானியின் ரத யாத்திரை, 1990-ம் ஆண்டில் சோம்நாத் கோயிலிலிருந்துதான் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் மீண்டும் 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடிப்பு நடந்தது. அந்தக் கலகங்களின் வரிசைத் தொடர் 2002-ம் ஆண்டில் குஜராத் இனப்படுகொலை வரை சென்றது.

சோம்நாத் கோயில் என்ற விஷயத்தைவைத்து குஜராத்தில் காலூன்றிய பா.ஜ.க, அதே மாடலை ராமர் கோயிலிலும் பின்பற்ற நினைக்கிறது. இதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள இந்துக்கள் மனதில் `ராமர் சென்டிமென்ட்'டைப் புகுத்தி ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியில் இறங்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காகத்தான் ராமர் கோயில் அறக்கட்டளையில் மோடியும் அமித் ஷாவும் இருக்கவேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கோருகிறது. அறக்கட்டளையில் அவர்கள் பங்கேற்கலாமா என்று என் மனதில் எழுந்த கேள்விக்காக, சோம்நாத் கோயிலில் இன்றைய அறங்காவலர்கள் யார் என்று பட்டியலைப் பார்த்தேன்.

சோம்நாத் கோயிலின் அறங்காவலர்கள் குழுவில் இருக்கும் சில பெயர்கள்: நரேந்திர மோடி, லால் கிருஷ்ண அத்வானி, அமித் ஷா, கேஷுபாய் பட்டேல்...

*****

ராம ஜென்ம பூமி ந்யாஸிலிருந்து வெளியே வந்து இரவில் நகரை வலம்வந்தோம். ஓர் இடத்தில் முழுக்கவே பெண்கள் அமர்ந்திருக்க ஒருவர் புராணக்கதை சொல்லிக்கொண்டிருந்தார். ''கணவனை நிம்மதியுடனும் அன்புடனும் பார்த்துக்கொள்வது மனைவியின் தலையாயக் கடமைகளில் ஒன்று. கணவனைத் துன்புறுத்தும், அவன் மனம் கோணும் வகையில் நடந்துகொள்ளும் பெண்களை, எமதர்ம ராஜா எண்ணெய்ச் சட்டியில் போட்டு வறுத்தெடுப்பார்” என்று பேசிக்கொண்டிருந்தார். அனைவரும் உச்சுக்கொட்டியபடி கேட்டுக்கொண்டிருந்தனர்.

புராணக் கதை சொல்லும் சாது
புராணக் கதை சொல்லும் சாது

அயோத்தியில் மட்டுமே சிறிதும் பெரிதுமாக 20,000-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருப்பதாக வாய்மொழியாகச் சொல்கிறார்கள். ஆனால் ஒரு சாதுவிடம் பேசியபோது, “அவ்வளவெல்லாம் இருக்காது. 7,000 கோயில்கள் இருக்கலாம்” என்றவர், உபரித் தகவலாக “அவற்றில் குறைந்தது 15 கோயில்கள் ‘இந்த இடம்தான் ராமர் பிறந்த இடம்’ எனச் சொல்லும்” என்றார்.

அயோத்தியை நோக்கி மத்திய பாதுகாப்புப் படை போலீஸார் நிரம்பிய வாகனங்களும், உத்தரப்பிரதேச போலீஸார் நிரம்பிய வாகனங் களும் வந்துகொண்டிருந்தன. `மீண்டும் பாதுகாப்பை பலப்படுத்துகிறார்களோ!' என எண்ணி ஒரு காவலரிடம் விசாரித்தேன்.

“நவம்பர் 12. கார்த்திகா பூர்ணிமா. சரயு நதிக் கரையில் ‘சரயு ஸ்நான்’ எனப்படும் மிகப்பெரிய விழா நடைபெறும். அயோத்தியின் மிகப்பெரிய விழா இதுதான். ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கூடுவார்கள்” என்றார் காவலர்.

சோம்நாத் கோயில் என்ற விஷயத்தைவைத்து குஜராத்தில் காலூன்றிய பா.ஜ.க, அதே மாடலை ராமர் கோயிலிலும் பின்பற்ற நினைக்கிறது.

தீர்ப்புக்காக மட்டுமன்றி, சரயு ஸ்நானுக்காகவும் அயோத்தியின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தன. பாதுகாப்பு இரட்டிப்பாக இருந்தது. நகருக்கு வெளியிலேயே வாகனங்களை நிறுத்த வசதிசெய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று சரயு நதியில் குளித்துவிட்டு, அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று வழிபடுகிறார்கள். அன்றைய தினம் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் வட்டமிட்ட படியே இந்த நிகழ்வைப் பார்வையிட்டார்.

தீர்ப்பின் காரணமாக கூட்டம் குறைவுதான் என்றார்கள். பல வருடங்களாக இந்த விழாவுக்கு வரும் பொதுமக்களில் சிலரிடம் பேசியபோது, “அயோத்தி தீர்ப்புக்குப் பிறகு வரும் விழா என்பதால், இந்த வருடத்தில் இது முக்கியமான நிகழ்வு'' என்கிறார்கள்.

ஃபைஸாபாத் அரசு மருத்துவமனைகளில் ஆண்களுக்கு தனி மருத்துவமனையும், பெண்களுக்கு தனி மருத்துவமனையும் இருக்கிறது.ஃபைஸாபாத் பெயர் அடிக்கப்பட்டு அயோத்தி என்று இருக்கும் ஆண்கள் மருத்துவனையில் சிலரிடம், `‘1992 பாபர் மசூதி இடிப்பின்போது பணியில் இருந்த யாரையேனும் சந்திக்க முடியுமா?'' என்று கேட்டேன். நீண்ட தேடலுக்குப் பிறகு, அகஸ்டின் ஹாபில் பற்றிக் கேள்விப்பட்டேன். அவருக்கு வயது 69. பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். 1992 டிசம்பர் 6-ம் தேதி, சம்பவத்தின்போது இந்த மருத்துவமனை வார்டின் தலைமைச் செவிலியர் அவர்தான்.

அவரைத் தேடிச் சென்றேன்.

(களம் தொடரும்)