Published:Updated:

`என் நரம்புகளில் ரத்தம் ஓடும்வரை போராடுவேன்!' - `டைம்ஸ்' பட்டியலில் இடம்பிடித்த 82 வயது பில்கிஸ்

டைம்ஸ் இதழின் பட்டியலில் இடம்பிடித்த 82 வயதான பில்கிஸ்
டைம்ஸ் இதழின் பட்டியலில் இடம்பிடித்த 82 வயதான பில்கிஸ்

டிசம்பர் மாதக் குளிரையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் போராட்டத்தில் ஈடுபட்ட பில்கிஸ், போராட்டத்தில் பங்குபெற்ற பல பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரம்.

கொரோனா தொற்று ஆரம்பித்த டிசம்பர் 2019-ல் தான் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய அரசால் இயற்றப்பட்டது. இந்தச் சட்ட திருத்தத்துக்கு இஸ்லாமிய சமூக மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இந்திய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

பிரதமர் மோடி இந்தச் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்த நாள் முதல், காலை 8 முதல் நள்ளிரவு வரை, டெல்லி ஷாஹின்பாக் பகுதியில் மற்ற போராட்டக்காரர்களுடன் இணைந்து இந்தச் சட்ட திருத்தத்தை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட இரும்புப் பெண்மணி 82 வயது பில்கிஸ். டைம்ஸ் நாளிதழ் வெளியிட்ட 2020-ல் உலக செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் பில்கிஸ்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: எளிதானப் புரிதலுக்கு விகடனின் சிறப்புக் கவரேஜ்!

ஒவ்வொரு வருடமும் டைம்ஸ் நாளிதழ் உலக அளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களின் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான 100 செல்வாக்கு வாய்ந்த நபர்களின் பட்டியலில், பில்கிஸ் இடம்பெற்றிருப்பது அவருடைய போராட்டத்துக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதப்படுகிறது.

டிசம்பர் மாதக் குளிரையும் பொருட்படுத்தாது அல்லும் பகலும் போராட்டத்தில் ஈடுபட்ட பில்கிஸ், போராட்டத்தில் பங்குபெற்ற பல பெண்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரம். களத்தில் இவர் எழுப்பிய போராட்டக் குரல், மற்றவர்களுக்கும் உத்வேகமாக அமைந்தது. "என் நரம்புகளில் ரத்தம் ஓடும்வரை போராடுவேன். அப்போதுதான் இந்த நாட்டின் குழந்தைகளும் உலகமும் நீதி மற்றும் சமத்துவம் நிறைந்த காற்றை சுவாசிக்க முடியும்" என்று இப்போது கூறியிருக்கிறார், இந்த 82 வயது எனர்ஜி.

Protest site at Shaheen Bagh, in New Delhi
Protest site at Shaheen Bagh, in New Delhi
AP Photo/Altaf Qadri

இதழாளர் ரானா ஆயூப், ''பில்கிஸ் இந்த அங்கீகாரத்துக்கு உரியவர். இவர் மூலம், கொடுங்கோலை எதிர்ப்பதற்கான சக்தியின் வலிமையை உலகம் அறியும்'' என்று இதழில் எழுதியுள்ளார். பில்கிஸ் தன் தன்னம்பிக்கையாலும் போராட்ட குணத்தாலும் பல்லாயிரம் பெண்களுக்கு முன்மாதிரியாகிவிட்டார். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் போராட்டத்துக்குத் தற்போது தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அவரின் மனோதிடத்தில் மாற்றமில்லை.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கூகுள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை, பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, பேராசிரியர் ரவீந்திர குப்தா ஆகியோரும் உலக அளவில் செல்வாக்கு வாய்ந்த 100 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு