அரசியல்
அலசல்
Published:Updated:

ரகசிய சந்திப்பு... சுற்றுப்பயணம்... தீர்ப்பு... அ.தி.மு.க திக் திக் திக்!

ஓ.பன்னீர்செல்வம், சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா

சசிகலாவைச் சந்தித்ததன் தொடர்ச்சியாக, அடையார் கற்பகம் அவென்யூவிலுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனையும் சந்தித்தார் பன்னீர்

‘கபடி’ ஆட்டத்தில், குறிப்பிட்ட மணித்துளிகளில் ஆட்டத்தை முடிக்கவேண்டிய விதி இருக்கிறது. அந்த நேரத்துக்குள்ளாக எதிராளியைக் குழப்பி வீழ்த்துவது, பிடியிலிருந்து திமிறி வெளியேறி கோட்டைத் தொடுவது என சுவாரஸ்யங்கள் ‘திக் திக் திக்’ காட்சிகளாக அரங்கேறும். ‘அ.தி.மு.க கபடி’யிலும் அதுதான் நடக்கிறது. ஜூலை 11-ம் தேதி நடந்த கட்சிப் பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றப் படியேறியிருக்கிறார் பன்னீர்செல்வம். அதேசமயம், சுற்றுப் பயணம் செய்து கட்சிக்குள் தன்னை வலிமையாக நிலைநிறுத்தப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. இதற்கிடையே, யாரும் எதிர்பாராத ரகசிய சந்திப்புகளும் நடந்தேறியிருக்கின்றன. விரைவில் வெளிவரவிருக்கும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, அ.தி.மு.க-வின் எதிர்காலத்தையே மாற்றியமைக்கக் காத்திருக்கும் நிலையில், கட்சிக்குள் நடக்கும் இந்தக் கபடி, தொண்டர்களை ‘திக் திக் திக்’ பதற்றத்தில் வைத்திருக்கிறது!

ஹபிபுல்லா ரோடு ரகசிய சந்திப்பு!

ஜூன் 14-ம் தேதி, அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில்தான் ஒற்றைத் தலைமை விவகாரம் எழுப்பப்பட்டது. கட்சிக்குள் தன் பிடி தளர்வதை பன்னீரும் உணர்ந்திருந்தார். அதற்குப் பிறகுதான், சசிகலா - பன்னீர் இருவரும் ஒரு நேர்க்கோட்டுக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். அ.தி.மு.க-வின் எதிர்காலம் குறித்து இருவரும் ரகசியமாகச் சந்தித்துப் பேசியதாகவும் கூறுகிறது பன்னீருக்கு நெருக்கமான வட்டாரம்.

நம்மிடம் பேசிய பன்னீர் ஆதரவு நிர்வாகிகள், “ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில்தான், பன்னீர் மீது தண்ணீர் பாட்டில் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. நீதிமன்றத்தின் உத்தரவால், அந்தப் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையாக எடப்பாடி உருவெடுக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில தினங்களில், சசிகலாவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர் ஒருவர் பன்னீரைச் சந்தித்தார். அவரிடம், ‘சின்னம்மாவை நான் எதிர்த்தது அப்போதைய காலச் சூழல். கட்சிநலனுக்காக அவங்களோட ஆதரவு இப்ப நமக்குத் தேவை. எல்லாரும் ஒண்ணா சேர்ந்து பயணிப்பதற்கு எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை’ என்று வெளிப்படையாகவே போட்டு உடைத்தார் பன்னீர். அந்தப் பத்திரிகையாளர் மூலமாக விஷயம் சசிகலா காதுக்கும் கொண்டுசெல்லப்பட்டது. அதற்குப் பிறகுதான், தி.நகர் ஹபிபுல்லா ரோட்டிலுள்ள சசிகலாவின் வீட்டில் பன்னீரும் சசிகலாவும் சந்தித்தனர். அவரோடு கட்சி நிர்வாகிகள் சிலரும் போயிருந்தோம். சசிகலாவைப் பார்த்தவுடன் நெக்குருகிவிட்டார் பன்னீர்.

ரகசிய சந்திப்பு... சுற்றுப்பயணம்... தீர்ப்பு... அ.தி.மு.க திக் திக் திக்!

‘கட்சியை இப்படிப் பண்ணிட்டாங்களேம்மா...’ எனத் தழுதழுத்த குரலில் பன்னீர் கூறவும், ‘கவலைப்படாதீங்க பன்னீர். எல்லாத்தையும் சரி செஞ்சுடலாம். அன்னிக்கு எடப்பாடியை முதல்வராக நான் அறிவிச்சப்போ, தங்கமணியும் வேலுமணியும்தான் கோவிச்சுக்கிட்டு கேட் வரைக்கும் ஓடுனாங்க. டாக்டர் வெங்கடேஷ்தான் விரட்டிப் பிடிச்சு அவங்களைத் திருப்பி அழைச்சுட்டு வந்தாரு. சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார்னு யாருக்குமே என் முடிவுல விருப்பமில்லை. ஆனா, எல்லாரையும் நான்தான் சமாதானம் செஞ்சேன். இன்னைக்கு, அவங்க எல்லாரும் எடப்பாடியை ஆதரிக்குறாங்க. எவ்வளவு நாளைக்குன்னு பார்ப்போம். நீங்க கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கிற வேலையைப் பாருங்க’ என்று தைரியமூட்டினார். சட்டரீதியாக முன்வைக்கவேண்டிய வாதங்கள் குறித்து இருவரும் பேசினார்கள். ஜூன் மாத இறுதியில் இவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பிறகு, இருவரும் போனில் அவ்வப்போது பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

சசிகலாவைச் சந்தித்ததன் தொடர்ச்சியாக, அடையார் கற்பகம் அவென்யூவிலுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனையும் சந்தித்தார் பன்னீர். அப்போது, ‘ஒற்றைத் தலைமையாக எடப்பாடி உருவாகிவிட்டால், உங்களைக் கட்சியிலிருந்தே நீக்கிவிடுவார். அப்படி நடக்கும் பட்சத்தில், அவரைக் கட்சியிலிருந்து நீங்கள் நீக்குங்கள். போட்டி நியமனங்களைச் செய்யுங்கள்’ என தினகரன்தான் பன்னீருக்கு ஐடியா கொடுத்தார். அவர் சொன்னபடியே, ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழுவில், பன்னீர், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரைக் கட்சியிலிருந்து நீக்கினார்கள். பதிலுக்கு எடப்பாடியை நீக்கினார் பன்னீர். கடைசிப் பொதுக்குழுக் கூட்டம் முடிந்த பிறகுகூட, பன்னீரும் தினகரனும் சந்தித்துக்கொண்டனர். எடப்பாடி எதிர்ப்பு அரசியலால், சசிகலா - பன்னீர் - தினகரன் மூவரும் நெருங்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், கட்சி நிர்வாகிகள் பெரும் பகுதி எடப்பாடிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், இவர்களின் இந்த நெருக்கம் எந்த அளவுக்குக் கள நிலவரத்தை மாற்றப்போகிறது என்பது தெரியவில்லை” என்றனர்.

ரகசிய சந்திப்பு... சுற்றுப்பயணம்... தீர்ப்பு... அ.தி.மு.க திக் திக் திக்!

அடுத்தடுத்த சுற்றுப்பயணம் - பிஸி திட்டத்தில் பன்னீர் - எடப்பாடி!

எடப்பாடிக்குப் போட்டியாக, தங்கள் பங்குக்கும் ஒரு பொதுக்குழு நடத்த பன்னீர் தரப்பில் திட்டமிடப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால், பன்னீர் பர்ஸைத் திறக்காததும், பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு இல்லாததாலும், போட்டிப் பொதுக்குழுவைத் திட்டமிட்டபடி நடத்த முடியாமல் போயிருக்கிறது. இதற்காக மாற்று ஏற்பாடு ஒன்றையும் திட்டமிட்டிருக்கிறாராம் பன்னீர்.

முன்னாள் அமைச்சரும், பன்னீர் ஆதரவாளருமான கட்சி சீனியர் ஒருவர், “இதுவரை அமைப்புரீதியாக 45 மாவட்டங்களுக்குப் புதிய செயலாளர்களை நியமித்திருக்கிறார் பன்னீர். மீதமிருக்கும் 30 மாவட்டங்களுக்கும் செயலாளர்களை நியமித்து, வார்டு வரை புதிய நிர்வாகிகளை நியமிக்க முடிவெடுத்திருக்கிறோம். குறைந்தது ஒரு லட்சம் நிர்வாகிகளை நியமிக்கத் திட்டமிடப்பட்டிருக்கிறது. இந்த நியமனங்கள் முடிந்ததும், செப்டம்பரிலிருந்து மிகப்பெரிய அளவில் பொதுக்கூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும். இதற்கான சுற்றுப்பயணத் திட்டத்தைத் தயாரித்திருக்கிறார் பன்னீர்.

முக்குலத்தோர் சமூக அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து, பன்னீருக்கு ஆதரவு திரட்டும் பணியில் தேனி மாவட்டச் செயலாளர் சையது கான் ஈடுபடுகிறார். சமூகரீதியிலான இந்த முன்னெடுப்பை ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட பிற சமூக நிர்வாகிகள் ரசிக்கவில்லை. ‘கொங்கு, வடமாவட்ட நிர்வாகிகளையும் நாம் ஒருங்கிணைத்தால்தான் பலமாக முடியும்’ என்று அவர்கள் அட்வைஸ் செய்தனர். அதன் விளைவாக, சென்னை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய ஏழு மாவட்டங்களில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார் பன்னீர். நீதிமன்றத்தில் வழக்குகள், தேர்தல் ஆணையத்தில் மனு எனக் கட்சியின் எதிர்காலம் பல இடங்களிலும் கேள்விக்குறியாகியிருப்பதால், சின்னம் என்னவாகப்போகிறது என்பது தெரியவில்லை. இந்தச் சூழலில், அனைத்துச் சமூகங்களுக்குமான தலைவராகத் தன்னை முன்னிறுத்தத் தயாராகிறார் பன்னீர்” என்றனர்.

எடப்பாடி தரப்பும் அதிரடிச் சுற்றுப்பயணத்துக்குத் தயாராகிறது. ஏற்கெனவே, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் என வடமாவட்டங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தி எடப்பாடி தடாலடித்திருந்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடந்த பொதுக்கூட்டத்திலும் திரளாகக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். அடுத்ததாக, தென்மாவட்டங்களில் எடப்பாடி சுற்றுப்பயணம் செய்வதற்குத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அடங்கிய குழுதான் இந்தத் திட்டத்துக்கு அச்சாரம் போட்டிருக்கிறது.

பா.ஜ.க ‘டபுள் கேம்...’ உஷார் எடப்பாடி!

தென்மாவட்ட அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “தென்மாவட்டங்களில் பன்னீர் - சசிகலா - தினகரனுக்குத்தான் ஆதரவு இருப்பதுபோல ஒரு மாய்மாலத்தை பன்னீர் தரப்பினர் உருவாக்குகிறார்கள். அதை உடைப்பதற்காகத்தான் திருச்செந்தூரிலிருந்து தன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கவிருக்கிறார் எடப்பாடி. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் கட்சிப் பொதுக்கூட்டங்களில் அவர் பங்கேற்கவிருக்கிறார். இரண்டாம்கட்டச் சுற்றுப்பயணமாக, திருப்பரங்குன்றத்தில் தொடங்கி டெல்டா மாவட்டங்களில் ரவுண்ட் அடிக்கவிருக்கிறார்.

அ.தி.மு.க உள்விவகாரத்தில் பா.ஜ.க ‘டபுள் கேம்’ ஆடுவது எடப்பாடிக்கு நன்றாகத் தெரியும். கவுண்டர் சமூகத்தின் அடையாளமாக இன்றைக்கு எடப்பாடி மாறியிருக்கிறார். அவர் இடத்தைப் பிடித்தால் மட்டுமே, தனக்கென ஒரு சமூக வாக்குவங்கியை பா.ஜ.க தலைவர் அண்ணாமலையால் கொங்கு மண்டலத்தில் உருவாக்கிக்கொள்ள முடியும். டெல்லியும் அப்போதுதான் அவரை மதிக்கும். அதற்காக, ‘டபுள் கேம்’ உத்தியைக் கையிலெடுத்திருக்கிறார் அண்ணாமலை. தன்னை டெல்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமர் முன்னிலையில் அண்ணாமலை சிறுமைப்படுத்தியதை எடப்பாடி இன்றுவரை ஜீரணிக்கவில்லை. அதுபோல, தொட்டதற்கெல்லாம் தி.மு.க-வைப் பதம்பார்க்கும் அண்ணாமலை, இதுவரை முதல்வரின் மருமகன் சபரீசன் குறித்துப் பெரிதாக எதுவும் பேசியதில்லை. இவையெல்லாம் எடப்பாடிக்குச் சந்தேகத்தை வரவழைத்திருக்கின்றன. தன்னை அரசியல்ரீதியாக வீழ்த்த பா.ஜ.க - தி.மு.க மறைமுக டீல் போட்டுவிட்டதாகவும் அவர் சந்தேகிக்கிறார்.

சிவசேனாவுக்கு நிகழ்ந்தது, நாளை அ.தி.மு.க-வுக்குள் நிகழ்வதற்கு ரொம்ப நேரமாகிவிடாது. முன்னாள் அ.தி.மு.க அமைச்சர்கள்மீது சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறைகளில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாளைக்கே சின்னத்தை முடக்கி, கட்சியைச் சின்னா பின்னமாக்கவும் பா.ஜ.க தயங்காது என்பது எடப்பாடிக்குத் தெரியும். அதனால்தான், தனக்கென ஒரு வாக்குவங்கியைத் தமிழகமெங்கும் உருவாக்க எத்தனிக்கிறார். நீதிமன்றங்கள் மற்றும் பா.ஜ.க-வால் அ.தி.மு.க-வுக்குச் சிக்கல் எழுந்தால், அப்போது தொண்டர்களிடம் எழும் அனுதாபத்தைத் தனதாக்கிக்கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி. இந்தச் சுற்றுப்பயணங்களெல்லாம் அந்தத் திட்டத்தின் ஒரு பகுதிதான்” என்றனர் விரிவாக.

‘திக் திக்’ தீர்ப்பு!

இதற்கிடையே, ‘அ.தி.மு.க-வின் ஜூலை 11 பொதுக்குழு செல்லாது’ என அறிவிக்கக் கோரி, உயர் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார் பன்னீர். இந்த வழக்கு ஆகஸ்ட் 10-ம் தேதி, நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, ‘பொதுக்குழு தொடர்பாக மட்டும் விவாதியுங்கள். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்’ என்று ஆரம்பத்திலேயே ‘திக் திக்’ பரபரப்பைப் பற்றவைத்துவிட்டார் நீதிபதி. பன்னீர் தரப்பில், வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன், ஸ்ரீராம் ஆகியோர் ஆஜராகினர். மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், எஸ்.ஆர்.ராஜகோபால், நர்மதா சம்பத் ஆகியோர் எடப்பாடிக்கு ஆதரவாக வாதிட்டனர். நீதிமன்றத்தில் இரண்டு நாள்கள் வாதம், பிரதிவாதம் சூடு பறந்தது.

ரகசிய சந்திப்பு... சுற்றுப்பயணம்... தீர்ப்பு... அ.தி.மு.க திக் திக் திக்!

நம்மிடம் பேசிய அ.தி.மு.க வழக்கறிஞர்கள், “பொதுக்குழு நடத்துவதற்கு 15 நாள்களுக்கு முன்பாக நோட்டீஸ் கொடுக்க வேண்டும்; ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழுவுக்கு அழைக்க முடியும்’ என இரண்டு விஷயங்களைத்தான் பன்னீர் தரப்பு நீதிமன்றத்தில் முன்வைத்தது. ஆனால், ‘ஜூலை 11-ம் தேதி நடந்தது சிறப்புப் பொதுக்குழு. அதற்கு நோட்டீஸ் அனுப்பவேண்டிய தேவையில்லை. மேலும், ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவிலேயே, ஜூலை 11-ம் தேதி பொதுக்குழு நடத்த முடிவுசெய்யப்பட்டுவிட்டது’ என்கிற வாதம் எடப்பாடி தரப்பில் முன்வைக்கப்பட்டது. தவிர, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவில்லை. அதனால்தான், தலைமைக் கழக நிர்வாகிகள் பெயரில் அழைப்பு விடுக்கப்பட்டது என்கிற வாதத்தையும் எடப்பாடி தரப்பு முன்வைத்தது.

‘ஜெயலலிதாதான் நிரந்தரப் பொதுச்செயலாளர் எனச் சொல்லிவிட்டு, ஏன் இடைக்காலப் பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினீர்கள்... பொதுக்குழுக் கூட்டம் விதிமுறைக்கு உட்பட்டுத் தான் நடந்ததா?’ என்கிற கேள்வியையெல்லாம் நீதிபதி கேட்டார். ஆகஸ்ட் 12-ம் தேதி மாலைக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்களைச் சமர்ப்பிக்கச் சொல்லியிருக்கிறது நீதிமன்றம். இரண்டு வார காலத்துக்குள், பொதுக்குழு விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருப்பதால், இன்னும் சில நாள்களில் தீர்ப்பு வெளியாகிவிடும். பொதுக்குழு செல்லும் அல்லது செல்லாது என எந்தத் தீர்ப்பு வந்தாலும், அதை எதிர்த்து எதிர்த்தரப்பு மேல்முறையீடு செல்வது நிச்சயம். ஆனால், அந்த இடைப்பட்ட காலத்துக்குள் ஒரு ‘கபடி’ ஆட்டம் அ.தி.மு.க-வுக்குள் களைகட்டும். யார் அவுட், யார் ஜெயிக்கப்போகிறார்கள் என்பது தீர்ப்பின் அடிப்படையிலேயே இருக்கப்போகிறது” என்றனர்.

‘‘நீதிமன்றத் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்தால், கட்சி கலகலத்துவிடும். எடப்பாடி பக்கமிருப்பவர்கள் தங்கள் பக்கம் வந்துவிடுவார்கள். ‘பொதுக்குழு விவகாரத்தை உயர் நீதிமன்றத்திலேயே பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு, மீண்டும் அவர்கள் உச்ச நீதிமன்றம் சென்றாலும் எதுவும் நிற்காது’’ என்று காற்றிலேயே கணக்கு போடுகிறது பன்னீர் தரப்பு. அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு அமைந்துவிட்டால், தங்கள் அரசியல் கணக்கையும் தொடங்க சசிகலா, தினகரன் இருவரும் ஆளுக்கொரு ‘சாக்பீஸ்’ உடன் காத்திருக்கிறார்கள். அதேநேரத்தில், எதையும் சமாளிக்கும் முடிவுக்கு வந்துவிட்டார் எடப்பாடி. சுற்றுப்பயணம், ஆர்ப்பாட்டம், போராட்டம் எனத் தனக்கென ஒரு கோட்டையை எழுப்பும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகும்போது, அந்தக் கோட்டையின் சிப்பாய்கள் மாற்று முகாமுக்கு ஓடுவார்களா அல்லது காத்து நிற்பார்களா என்பது தெரிந்துவிடும். அதுவரையில், அ.தி.மு.க-வுக்குள் திக் திக் திக்!