Published:Updated:

என் கடன் கடன் சேர்த்து வைப்பதே!

எப்படி மீளப்போகிறது தமிழகம்?
பிரீமியம் ஸ்டோரி
எப்படி மீளப்போகிறது தமிழகம்?

எப்படி மீளப்போகிறது தமிழகம்?

என் கடன் கடன் சேர்த்து வைப்பதே!

எப்படி மீளப்போகிறது தமிழகம்?

Published:Updated:
எப்படி மீளப்போகிறது தமிழகம்?
பிரீமியம் ஸ்டோரி
எப்படி மீளப்போகிறது தமிழகம்?
யிர்க்கடன்களிலிருந்து மகளிர் சுய உதவிக்குழு கடன்வரை தள்ளுபடிகளை அள்ளித் தெளித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால் அந்தத் தமிழக அரசுக்கு இருக்கும் கடனோ 4,56,660 கோடி ரூபாய். 2021-22 நிதியாண்டில் இந்தக் கடனளவு ரூ.5.7 லட்சம் கோடியாக அதிகரிக்கும் என்றும் நிதியமைச்சர் ஓ.பி.எஸ் தெரிவித்திருக்கிறார். உத்தேசமாக தமிழகத்தின் மக்கள்தொகை 7.8 கோடி என்றால் நம் ஒவ்வொருவரின் தலையிலும் 73,000 ரூபாய் கடன்.

வளர்ந்து வரும் ஒரு மாநிலம், தம் வளர்ச்சியின் நிலைக்கேற்ப கடன் வாங்கலாம். 15-வது நிதிக்குழு, ‘ஒரு மாநிலம் அதன் உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் 29 சதவிகிதம் கடன் வாங்கலாம்’ என்று நிர்ணயித்திருக்கிறது. “நாங்கள் தமிழகத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 26.69 சதவிகிதம்தான் கடன் பெற்றிருக்கிறோம்” என்று சப்பைக்கட்டு கட்டுகிறார் நிதியமைச்சர். அடுத்து எந்த அரசு அமைந்தாலும் கஜானா காலி, கடன் சுமை அதிகம் என்ற நிலைதான்.

வெங்கடேஷ் ஆத்ரேயா, ஜெயரஞ்சன், நாகப்பன், ஹக்கீம்
வெங்கடேஷ் ஆத்ரேயா, ஜெயரஞ்சன், நாகப்பன், ஹக்கீம்

ஏன் அதிகரித்தது கடன்?

2011-12 இடைக்கால பட்ஜெட்டை அப்போதைய நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தபோது, 439 கோடி ரூபாய் உபரி வருவாயாக இருந்தது. வணிக வரிகள், ஆயத்தீர்வை எனப் பலவிதங்களில் மாநிலத்துக்கு வருவாய் கிடைத்தது. அப்போது தமிழகத்தின் கடன் 1.18 லட்சம் கோடி. அதற்காகக் கட்டப்பட்ட வட்டி ரூ.9,233.4 கோடி. இப்போது ஓ.பி.எஸ் சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டில் கடன் 4.56 லட்சம் கோடி. இதற்காகக் கட்டப்போகும் வட்டி 35,000 கோடிக்கும் மேல். 41,417.3 கோடி வருவாய்ப் பற்றாக்குறை வேறு. கொரோனா நெருக்கடி, நிர்வாகக் குளறுபடி, ஊழல் எனப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தமிழகம் இப்படியான இக்கட்டில் தேங்கி நிற்க மத்திய அரசும் முக்கிய காரணம் என்று கைநீட்டுகிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரியில் 67 சதவிகிதம்... அதாவது மூன்றில் இரண்டு பங்கு, சரக்கு மற்றும் சேவை வரி. இது பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் ஒரேமாதிரி விதிக்கப்படுகிறது. மாநில அரசுகள் பெரும்பாலும் நிதி விஷயத்தில் மத்திய அரசைச் சார்ந்தே இருக்கின்றன. ஆனால், மாநில அரசுகளின் கருத்தைக் கேட்காமலே மத்திய அரசு பல விஷயங்களில் முடிவெடுக்கிறது. மாநில அரசுகளுக்கு நியாயமாகக் கிடைக்கவேண்டிய பங்கையும் தரமறுப்பதால் மாநிலங்களின் நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கிறது.

என் கடன் கடன் சேர்த்து வைப்பதே!

பறிபோகும் மாநிலங்களின் பங்கு

“ஜி.எஸ்.டி வந்தபிறகு மாநிலங்களுக்கு வரி வசூலிக்கும் உரிமை பறிபோய்விட்டது. இப்போதுள்ள நிலைமையின் படி மது, பெட்ரோல், டீசல், புகையிலை... இவற்றுக்குத்தான் மாநிலங்கள் வரி விதிக்க முடியும். பெருமுதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு பல சலுகைகளை வழங்குகிறது. சொத்துவரி (Wealth Tax) என்று ஒன்று இருந்தது. செல்வந்தர்கள் தங்கள் சொத்தின் அளவுக்கேற்ப குறிப்பிட்ட அளவு வரி கட்டுவார்கள். இதை 2017-2018 பட்ஜெட்டில் நீக்கிவிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. 2019-ல் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது கார்ப்பரேட் வருமான வரி விகிதத்தை 30 சதவிகிதத்தில் இருந்து 22 சதவிகிதமாகக் குறைத்துவிட்டார் இப்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இதனால் மாநிலங்களுக்குக் கிடைக்கவேண்டிய நிதி பறிபோய்விட்டது.

2021 பட்ஜெட்டில் கார்ப்பரேட், தனிநபர் வருமான வரிகளின் மூலமாக 13 லட்சத்து 19 ஆயிரம் கோடி கிடைக்கும் என்றார்கள். ஆனால் வந்தது வெறும் 9 லட்சம் கோடிதான். இதை ஈடுகட்ட பெட்ரோல், டீசலுக்குப் புதிது புதிதாக வரி விதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் மூலம் மத்திய அரசின் பட்ஜெட் மதிப்பீட்டின்படி நிர்ணயிக்கப்பட்ட வரி வருவாய் 2.67 லட்சம் கோடி. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் 3.61 லட்சம் கோடியாக அது உயர்த்தப்பட்டது. இதில் பெரும்பகுதியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கத் தேவையில்லாதவகையில் செஸ், சர்சார்ஜ் போன்ற பெயர்களில் வசூலித்துள்ளது மத்திய அரசு. கடந்த சில ஆண்டுகளில் செஸ், சர்சார்ஜ் மூலம் கிடைக்கும் வருவாய் 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. இதுகுறித்து மாநில அரசுகள் கேள்வியெழுப்பாததுதான் சிக்கலுக்குக் காரணம்” என்கிறார் பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா.

2020-21 மத்திய பட்ஜெட்டில், தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய வரிப்பங்களிப்புத் தொகை 32,849.34 கோடி ரூபாய். ஆனால், அது 23,039.46 கோடியாகக் குறைக்கப்பட்டது. ‘செஸ், சர்சார்ஜ் என்ற பெயர்களில் மாநிலங்களுக்குப் பகிர வேண்டிய பங்களிப்பை மத்திய அரசு மறுக்கிறது’ என்று பட்ஜெட்டிலேயே குறிப்பிட்டிருக்கிறார் ஓ.பி.எஸ். மானிய ஒதுக்கீடுகளிலும் கொரோனாவைக் காரணம் காட்டி 3,270 கோடி குறைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் நிதியில் பாரபட்சம்

கடந்த பத்தாண்டுகளில் தமிழகம் பல பேரிடர்களைச் சந்தித்தது. 2018-ல் கஜா புயலின்போது ரூ.15,000 கோடி நிவாரண நிதியாக வழங்குமாறு கோரினார் எடப்பாடி. ஆனால் மத்திய அரசு தந்ததோ வெறும் ரூ.1,680 கோடி. வெள்ளம், வறட்சி, புயல்கள் என கடந்த 10 ஆண்டுகளில் இயற்கைப் பேரிடர்களுக்குத் தமிழக அரசு மத்திய அரசிடம் ரூ.40,000 கோடிகளுக்கு மேல் கேட்டுள்ளது. கிடைத்ததோ வெறும் ரூ.9,390 கோடி மட்டுமே.

ஜி.எஸ்.டி கொண்டு வரப்பட்டபோது ‘வளர்ச்சி விகிதம் 14 சதவிகிதத்துக்கும் குறைவாக உள்ள மாநிலங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்கும்’ என்று தெரிவித்தது. அந்த இழப்பீடும் முறையாக வந்து சேரவில்லை. கொரோனாவைக் காரணம் காட்டி, ‘கடனாகப் பெற்றுக்கொள்ளுங்கள்’ என்றார்கள். பெரும் போராட்டத்துக்குப் பிறகு 2017-18-ம் ஆண்டுக்கான வருவாய்ப் பங்களிப்பு மட்டுமே தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் ஜி.எஸ்.டி பங்கீட்டைப் பெற பெரும் போராட்டத்தை நடத்துகின்றன மாநில அரசுகள்.

மாநில அரசின் நிர்வாகக் குளறுபடி

‘மூலதனச் செலவுக்காகக் கடன் வாங்கலாம். ஆனால், தமிழகம் தன் வருவாய்ப் பற்றாக்குறையைச் சமாளிக்கக் கடன் வாங்குகிறது’ எனக் குற்றம் சாட்டுகிறது, 15வது நிதிக்குழுவின் அறிக்கை.

“தமிழக பட்ஜெட்டைப் பொறுத்தவரை ஆக்கபூர்வமான முதலீடுகள் இல்லை. அரசுகள் மக்களையும் அரசு ஊழியர்களையும் ஓட்டு வங்கிகளாக மட்டுமே பார்க்கத் தொடங்கியதே சரிவின் தொடக்கம். அதனால் மொத்த வருவாயையும் நிர்வாகத்துக்கும் இலவசங்களுக்கும் திருப்பிவிட்டார்கள். மக்களுக்குத் தேவையானதை இலவசமாகக் கொடுப்பதில் தவறில்லை. யாருக்கு எது தேவையோ அதை விலையில்லாமல் கொடுப்பதில் தவறில்லை. ஆனால் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வாரி வழங்கினார்கள். அரசு கொடுத்த பல இலவசப் பொருள்கள் பழைய இரும்புக்கடைகளில் கிடக்கின்றன” என்கிறார், பொருளாதார நிபுணர் நாகப்பன்.

“அரசை நடத்த மூன்று வழிகள். வரிகள் மூலம் வருமானத்தைக் கூட்டுவது. செலவைக் கட்டுப்படுத்துவது. கடன் வாங்குவது. முதலிரண்டைச் செய்வது எளிதல்ல. கடன் வாங்குவது எளிது. அதைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசு 100 ரூபாய் வருமானத்தில் 36 ரூபாயைக் கடனுக்குச் செலுத்துகிறது. அந்த 36 ரூபாயிலும் 20 ரூபாய் கடனுக்கான வட்டி. இந்த நிலைதான் இப்போது மாநில அரசுக்கும் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசின் மொத்த வருமானத்தில் 42 சதவிகிதம் மாநிலங்களுக்கான பங்கு. கொரோனாவால் இதை 41 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறார்கள். இதையும் குறைப்பதற்காகவே, செஸ், சர்சார்ஜ் போன்றவற்றைப் போடுகிறது மத்திய அரசு. 1980-களில் மத்திய அரசு மொத்த வருமானத்தில் செஸ்+சர்சார்ஜ் 2 சதவிகிதமாக இருந்தது. மாநிலங்களுக்கு 98 சதவிகிதம் பகிர்ந்தளிக்கப் பட்டது. இப்போது மத்திய அரசின் பங்கு 15 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. மீதமுள்ள 85 சதவிகிதத்தில்தான் 41 சதவிகிதம் மாநிலங்களுக்குத் தருகிறார்கள். மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய பணம் தாமதமாவது, செஸ், சர்சார்ஜ் வரிகளில் மாநிலங்களின் பங்கு குறைந்தது உள்ளிட்ட காரணங்கள் இந்த இடைக்கால பட்ஜெட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன” என்கிறார் நாகப்பன்.

எதிர்பாராத பேரிடர்

தமிழகத்தின் நிதியாதாரத்துக்கு அமுதசுரபியாக இருப்பது டாஸ்மாக்தான். 2010–11-ல் மது விற்பனை மூலம் கிடைத்த வருமானம் 14,965.42 கோடி. அதுவே 2019-20-ல் 28,839 கோடி. இவைதவிர கேளிக்கை வரி, முத்திரைத்தாள் கட்டணம், வாகனப்பதிவு இவற்றை நம்பியே மாநில அரசு இயங்குகிறது. கொரோனாப் பெருந்தொற்று, கேளிக்கை வரி, வாகனப்பதிவை முடக்கிவிட்டது. கொரோனாத் தொற்று திட்டமிடாத செலவாக மாறிவிட்டது. இந்தச் சுமை முழுவதும் மாநில அரசுகளின் தலைமீதுதான் விழுந்தது. தமிழக அரசு சுமார் 13,352 கோடி ரூபாய் கொரோனாவுக்காகச் செலவிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு ஒதுக்கியது மிகவும் சொற்ப தொகைதான்.

“கொரோனாவால், ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டைவிட இந்த ஆண்டு சுகாதாரத்துறைக்கு 2 மடங்கு அதிகம் செலவிடப்பட்டிருக்கிறது. ஆனால், அதே ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய பட்ஜெட்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு நெடுஞ்சாலைத் துறையின் செலவு 5 மடங்கு அதிகரித்திருக்கிறது. இதுதான் தமிழகத்தின் பிரச்னை. கடனில் இருந்து எந்த அரசும் மீளமுடியாது. கடன் என்பது நதியின் ஓட்டம் போன்றது. மக்கள் வரியைக் கட்டிக்கொண்டே இருப்பார்கள். அதில் ஒரு பகுதி கடனுக்கு, ஒரு பகுதி வட்டிக்கு, ஒரு பகுதி சம்பளத்துக்கு, ஒரு பகுதி மற்ற செலவுக்கு எனப் பயன்படுத்தப்படும். கடனைத் திருப்பிக் கொடுப்பது, தீர்ப்பது எல்லாம் பிரச்னை இல்லை. கடன் கைமீறிப் போய்விடக் கூடாது என்பதற்காக ஒரு அளவுகோல் வைத்திருக்கி றார்கள். பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, கடன் அளவு இருக்கலாம். ஒவ்வொரு பொருளாதாரத்துக்கும் ஒரு திறன் இருக்கும். தமிழ்நாடு போன்ற வளர்ந்த பொருளாதாரத்துக்கு இது நேர்மறையான ஒரு அம்சம். ஆனால், வாங்கும் கடனை எதற்குச் செலவிடுகிறோம் என்பது முக்கியம்” என்கிறார், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன்.

அரசு ஊழியர் ஓய்வு வயது நீட்டிப்பு ஏன்?

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 15 லட்சம். ஒரு மாதத்துக்கு சராசரியாக 2.500 முதல் 3,000 பேர் ஓய்வுபெறுவார்கள். கடந்த ஆண்டு 36,000 பேர் ஓய்வுபெறவிருந்தார்கள். ஓய்வு வயதை 58-ல் இருந்து 59-ஆக மாற்றி ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கியது அரசு. இந்த ஆண்டு ஏறக்குறைய 35,000 பேர் ஓய்வு பெறவிருந்தார்கள். இந்த ஆண்டும் 59 வயதை 60ஆக உயர்த்தி மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கிவிட்டார்கள். ஆக, 70,000 பேருக்கான பணிப் பலன்கள் வழங்கவேண்டும். இதற்கு ரூ.12,000 கோடிக்குமேல் தேவைப்படும். அதுமட்டுமல்ல... இந்தப் பணியிடங்களை யெல்லாம் நிரப்பவேண்டும் என்றால் அதற்கான செலவு தனி.

என் கடன் கடன் சேர்த்து வைப்பதே!

1.4.2003-க்கு முன்பு அரசு ஊழியர் ஓய்வு பெற்றால் ஆயுள்காலம் முழுவதும் அவருக்கும் அவருக்குப் பிறகு வாரிசுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 2003-ல் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை ஒருங்கிணைக்க தேசிய ஒழுங்காற்று ஆணையம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் 50 லட்சம் மாநில அரசு ஊழியர்களும் 21.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும் இணைந்துள்ளார்கள். மாநிலத்தில் பிடிக்கப்படும் அரசு ஊழியரின் பங்களிப்போடு, மாநில அரசின் பங்களிப்பாக அதே அளவு தொகையைச் சேர்த்து இந்த ஆணையத்தின் கணக்கில் செலுத்தவேண்டும். ஓய்வுபெற்ற பிறகு அந்த ஆணையம் ஓய்வூதியம் வழங்கும். ஆனால், தமிழக அரசு கடந்த 18 ஆண்டுகளாக ஊழியர்களிடம் பிடித்த 30,000 கோடி ரூபாயை இதுவரை ஆணையத்தில் செலுத்தவேயில்லை. ஓய்வுபெறும் நாளில், ஊழியரின் பங்களிப்பில் சேர்ந்த தொகை, அரசின் பங்களிப்பு, அதற்கான வட்டி மூன்றையும் சேர்த்து ஒரே செட்டில்மெண்டில் கணக்கை முடித்துவிடுகிறார்கள். 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, அரசு ஊழியர்களுக்குத் தரவேண்டிய 21 மாத பிடிப்புத்தொகையையும் வழங்கவில்லை என்கிறார்கள்.

“இந்த ஓய்வு வயது நீட்டிப்புக்கு இன்னொரு காரணமும் உண்டு” என்கிறார் அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அன்பரசன்.

“ஏற்கெனவே தமிழகத்தில் 4 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஓய்வுபெறவுள்ள 70,000 பேரையும் அனுப்பிவிட்டால் நிலை மோசமாகிவிடும். ஏற்கெனவே, தேவையற்ற பணியிடங்களைக் குறைத்து அவசியமான இடங்களில் அவுட்சோர்சிங் முறையில் பணிகளைப் பெறுவது குறித்து ஆய்வு செய்வதற்காக ஓய்வுபெற்ற ஐ,ஏ.எஸ் அதிகாரி ஆதிசேஷன் தலைமையில் ஒரு குழு அமைத்து அந்தக்குழு பரிந்துரைகளை வழங்கிவிட்டது. அதன்படி மருத்துவ வார்டுபாய் முதல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் வரை பல பணிகளை அவுட்சோர்சிங் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அதை முழுமையாகச் செய்வதற்குத்தான் இப்போது ஓய்வுபெறும் வயதை நீட்டித்திருக்கிறார்கள்” என்கிறார் அன்பரசன்.

2019-20 கணக்கீட்டின்படி 1 ரூபாய் வருவாயில் 23 காசு அரசு ஊழியர்களின் சம்பளத்துக்குச் செலவிடப்படுகிறது. 11 காசு ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. 13 காசு வட்டியாகச் செலுத்தப் படுகிறது.

“அரசின் செலவினங்களில் அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளம் முதலிடத்திலும் கடனுக்குக் கட்டும் வட்டி இரண்டாமிடத்திலும் இருக்கின்றன. வட்டியாக மட்டும் கடந்த எட்டு ஆண்டுகளில் செலுத்தப்பட்ட தொகை 1,68,586.22 கோடி. 2019-20 நிதியாண்டில் நலத்திட்டங்களுக்குச் செய்த செலவு 20,146.77 கோடி. ஆனால் அந்த நிதியாண்டில் கடன்களுக்குச் செலுத்திய வட்டித்தொகை 31,980.19 கோடி. 11,833.42 கோடி அதிகம். பட்ஜெட்டில் நிதியமைச்சர் இவ்வளவு கடன் வாங்கவிருக்கிறோம் என்று சொன்னால் அதைவிடக் கூடுத லாகவே வாங்கப் போகிறார்கள் என்றே பொருள். கடந்த பட்ஜெட்டில் 59,209.3 கோடி கடன்பெறவிருப்பதாக பட்ஜெட்டில் சொன்னார் ஓ.பி.எஸ். ஆனால் பெற்றது, 1,13,528.3 கோடி. இந்த ஆண்டு 84,686 கோடி இலக்கு நிர்ணயித்திருக்கிறார்கள். ஆனால் வாங்கப்போவது எவ்வளவு எனத் தெரியவில்லை” என்கிறார், ஆர்டிஐ ஆர்வலர் மதுரை ஹக்கீம்.

இதேவேகத்தில் போனால் 2023-24 நிதியாண்டில் வட்டியாக மட்டும் 53,691 கோடி ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இது அபாயத்துக்கான அறிகுறி..!

எப்படி மீளப்போகிறது தமிழகம்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism