Published:Updated:

பிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா?

ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

- ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

ஊரடங்கு தொடங்கிய சில நாள்களிலேயே `பிஎம் கேர்ஸ்’ குறித்த சர்ச்சைகளும் பற்றி எரியத் தொடங்கிவிட்டன. ‘மக்களிடம் வாங்கும் நிதிக்கு என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது?’ என்று கேள்விக்கணைகள் பாய்ந்தன.

‘ஏற்கெனவே `பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி’ (PMNRF) இருக்கும்போது பிஎம் கேர்ஸ் எதற்கு?’ என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் குரல் உயர்த்தின. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாகவும் போர் தொடுத்தார்கள். ம்ஹூம்... எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை பிரதமர் அலுவலகம். “பிஎம் கேர்ஸ் பொது அமைப்பு அல்ல. எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலெல்லாம் கேள்வி கேட்க முடியாது” என்று கூலாக பதிலளித்தது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல... நாடே திகைத்து நிற்கிறது. சரி, `பிஎம் கேர்ஸ்’ என்றால் என்ன, ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட பி.எம்.என்.ஆர்.எஃப் என்னவானது, இரண்டுக்கும் என்ன வேறுபாடு, இப்போதைய பிஎம் கேர்ஸுக்கு நிதி அளித்தவர்கள் யார், இதற்கு வரும் நிதியை மத்தியத் தணிக்கைக்குழு ஆடிட் செய்ய முடியுமா, முடியாதா, முக்கியமாக இதில் ஊழல் செய்ய முடியுமா, இதன் நிதியைக் கையாளும் உச்சபட்ச அதிகாரம் யாருக்கு இருக்கிறது... எல்லாவற்றுக்கும் பதில் தேடுகிறது ஜூனியர் விகடனின் இந்தச் சிறப்பு கட்டுரை!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வெளிநாடுவாழ் இந்தியர்கள் உள்ளிட்டவர்களிடமிருந்து நிதி பெறுவதற்காக கடந்த மார்ச் 28-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது `பிஎம் கேர்ஸ்’ (Prime Minister’s Citizen Assistance and Relief in Emergency Situations Fund). இதற்கு மாற்றாக, ஏற்கெனவே இருந்த அமைப்பு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதி (PMNRF). காங்கிரஸ் காலத்தில் தொடங்கப்பட்ட அமைப்பு இது. பிஎம் கேர்ஸ் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்றால், முதலில் பி.எம்.என்.ஆர்.எஃப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.


பிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா?

1948-ம் ஆண்டு பாகிஸ்தானிலிருந்து புலம் பெயர்ந்தவர்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் பி.எம்.என்.ஆர்.எஃப். அப்போது நாடாளுமன்றம், அரசியலமைப்பு சாசனம் எதுவும் கிடையாது. ஜனாதிபதியே இல்லை. கவர்னர் ஜெனரல் மட்டுமே இருந்தார். பி.எம்.என்.ஆர்.எஃப் நிதியத்தில் பிரதமர் நேரு, காங்கிரஸ் தலைவர் பட்டாபி சீத்தாராமையா, துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல், நிதியமைச்சர் சண்முகம் செட்டியார், எஃப்.ஐ.சி.சி.ஐ தொழில் வர்த்தக சபை, டாடா நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஒருவர் உறுப்பினர்களாக இருந்தனர். பாகிஸ்தானிலிருந்து வந்த மக்களுக்காகத் தொடங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், தற்போது பிஎம் கேர்ஸ் தொடங்கப்படுவதற்கு முன்பு வரை அனைத்துவிதமான பேரிடர்களுக்கும் பி.எம்.என்.ஆர்.எஃப் அமைப்பின் நிதியே பயன்படுத்தப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாறாத மத்திய அரசுகள்!

இப்போது ஏற்பட்டிருக்கும் சர்ச்சை, மோடி அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட புதிய ஒன்று அல்ல. எதேச்சதிகாரத்தைப் பொறுத்தவரை மத்திய அரசுகள் எப்போதும் மாறுபடுவதில்லை. அதற்கு காங்கிரஸ், பா.ஜ.க என்றெல்லாம் பாகுபாடு இல்லை. என்ன... அதிகாரத்தின் ‘காரம்’ கொஞ்சம் கூடக்குறைய இருக்கலாம். மற்றபடி ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. அப்படித்தான் கடந்த 1985-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, பி.எம்.என்.ஆர்.எஃப் அங்கீகாரம் முழுவதுமாக, ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த குழுவிடமிருந்து பறிக்கப்பட்டு, பிரதமருக்கு மாற்றப்பட்டது.


பிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா?

2012-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அது குறித்துத் தகவல்கள் கேட்கப்பட்டன. அப்போது, ‘பி.எம்.என்.ஆர்.எஃப் பொதுத்துறைக்குக் கீழ் வரும் அறக்கட்டளை இல்லை. எனவே, தகவல்களை வழங்க முடியாது’ என்று பதிலளித்தது பிரதமர் அலுவலகம். சேம் பிளட்!

ஆக... இப்போது காங்கிரஸ் என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும், அன்றைய காங்கிரஸ் ஆட்சியில் அளித்த அதே பதிலை இப்போதும் மோடி அரசு அளித்துள்ளது. உண்மையில், 2012-ம் ஆண்டில்தான் முதன்முறையாக `பி.எம்.என்.ஆர்.எஃப் அரசுடைய நிதியம் அல்ல’ என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானது. சுமார் 64 ஆண்டுகளாக அது அரசுடைய நிதியம் என்று காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்த பிம்பம் தவிடு பொடியானதும் அப்போதுதான். அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, இன்னும் இறுதித் தீர்ப்பு வரவில்லை.


பிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா?

`பெரு நிறுவனங்கள், அவற்றுக்கு வரும் லாபத்தில் இரண்டு சதவிகிதம் சமூகத் திட்டங்களுக்குச் (சி.எஸ்.ஆர்) செலவிட வேண்டும்’ என்பது விதி. பி.எம்.என்.ஆர்.எஃப்-க்கு நன்கொடை அளிப்பவர்களுக்குப் 80G பிரிவில் வரி விலக்கு உண்டு. அதன்படி சி.எஸ்.ஆர் கணக்குகளை பி.எம்.என்.ஆர்.எஃப்-ன் கீழ் கொண்டுவர முடியும். அதனால், பெருநிறுவனங்களின் நன்கொடைகள் இந்தத் திட்டத்தில் குவிந்தன. இப்படியாக தற்போது பி.எம்.என்.ஆர்.எஃப் கணக்கில் 3,800 கோடி ரூபாய் இருக்கிறது.

அறக்கட்டளையும் அல்ல!

அதேநேரத்தில், பி.எம்.என்.ஆர்.எஃப் வரவு செலவுகளை மத்திய தணிக்கைக்குழு ஆடிட் செய்ய முடியாது. கடந்த 1973-ம் ஆண்டு வருமானவரி விலக்குக்காக காங்கிரஸ் அரசாங்கம் முயன்றது. அப்போதுதான் பி.எம்.என்.ஆர்.எஃப்-க்கு அறக்கட்டளை பத்திரம்கூட (Turst Deed) இல்லை என்பது தெரியவந்தது. அதாவது, இது அறக்கட்டளை என்பதற்கான ஆவணமும் இல்லை; அரசு அமைப்பு என்பதற்கான சட்டமும் இல்லை.

ஆனால், இந்தத் தகவல்களெல்லாம் பொதுவெளியில் வருவதற்குள், ஆறு தசாப்தங்கள் ஓடிவிட்டன.


பிஎம் கேர்ஸ்... பிரைவேட் சொத்தா?

ஆக, ‘பி.எம்.என்.ஆர்.எஃப்’ மற்றும் ‘பி.எம் கேர்ஸ்’ இரண்டுக்கும் பெயர்தான் வித்தியாசம். மற்றபடி, இரண்டின் செயல்பாடுகளிலும் எந்த வித்தியாசமும் இல்லை. வழக்கம்போல பிஎம் கேர்ஸுக்கு பிரதமர்தான் தலைவர். உள்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர், நிதியமைச்சர் மற்றும் முக்கியத் துறை அதிகாரிகள் மூன்று பேர் உட்பட மொத்தம் ஏழு பேர் குழு உறுப்பினர்கள். கொரோனாவு க்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டும் பிஎம் கேர்ஸ் தொடங்கிய முதல் வாரத்திலேயே ரூ.6,500 கோடி நிதி வாங்கி குவித்துள்ளது. பிஎம் கேர்ஸிலும் 80G பிரிவில் வரி விலக்கு பெற முடியும். சி.எஸ்.ஆர் கணக்கு காட்ட முடியும். வழக்கம்போல வரவு, செலவு கணக்குகளையும் மத்திய தணிக்கைக்குழு ஆடிட் செய்ய முடியாது.

`சரி, இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லையே, பிறகு எதற்காக பிஎம் கேர்ஸ்?’ என்ற கேள்விக்குச் சில சம்பவங்கள் பதிலாகப் பொருந்தும்.

(பார்ப்போம்)

ரூ.500 கோடி வட்டி

பி.எம்.என்.ஆர்.எஃப் நிதியத்துக்கு, 2009-ம் ஆண்டு முதல் 2019 வரை 10 ஆண்டுகளில் ரூ.2,604 கோடி நிதி கிடைத்துள்ளது. இந்த 10 ஆண்டுகளில் ரூ.2,524 கோடி அந்த நிதியத்திலிருந்து செலவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, பி.எம்.என்.ஆர்.எஃப் நிதியத்திலிருந்து ரூ.1,801 கோடி வரை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 2018-19 நிதியாண்டு மட்டும் ரூ.534 கோடி வட்டியாக வந்திருக்கிறது. இப்படி ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட தொகை வட்டியாக வந்துகொண்டிருக்கிறது.