Published:Updated:

சி.பி.ஐ ஏன் சீமானை விசாரிக்கவில்லை? - ராஜபக்‌சே ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல!

திருச்சி வேலுச்சாமி
பிரீமியம் ஸ்டோரி
திருச்சி வேலுச்சாமி

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்! - தடதடக்கிறார் திருச்சி வேலுச்சாமி.

சி.பி.ஐ ஏன் சீமானை விசாரிக்கவில்லை? - ராஜபக்‌சே ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல!

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை விரைவுப்படுத்த வேண்டும்! - தடதடக்கிறார் திருச்சி வேலுச்சாமி.

Published:Updated:
திருச்சி வேலுச்சாமி
பிரீமியம் ஸ்டோரி
திருச்சி வேலுச்சாமி

ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக சீமானின் சர்ச்சைப் பேச்சு விவகாரம் அவ்வளவு சீக்கிரம் ஓயாதுபோலிருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், ஈழத்தமிழர்கள், ஈழம் தொடர்பான இயக்கங்கள் மற்றும் அரசு விசாரணை அமைப்புகளின் கவனத்தை ஒருசேர திருப்பியிருக்கிறது, சீமானின் சர்ச்சைப் பேச்சு. சீமானுக்கு எதிரான போராட்டங்கள், கொடும்பாவி எரிப்பு என்று தமிழக காங்கிரஸார் கொந்தளிக்கிறார்கள். இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் ‘ராஜீவ் படுகொலை - தூக்குக் கயிற்றில் நிஜம்!’ என்ற புத்தகத்தை எழுதியவருமான திருச்சி வேலுச்சாமியைச் சந்தித்தோம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

“ `25 வருடங்களாக இதைத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். வேறு வேலை இல்லாததால், காங்கிரஸ்காரர்கள் பிரச்னை செய்கிறார்கள்’ என்கிறாரே சீமான்?’’

திருச்சி வேலுச்சாமி
திருச்சி வேலுச்சாமி

“என்னுடைய பார்வையில், ராஜீவ் காந்தி படுகொலையில் விடுதலைப்புலிகளுக்கோ அல்லது தமிழர்களுக்கோ தொடர்பு இருப்பதாக சீமான் இதுவரை பேசியதில்லை. ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக நளினி, ரவிச்சந்திரன் மற்றும் நான் தனித்தனியே எழுதிய புத்தக வெளியீட்டு விழாக்களிலும் சீமான் கலந்துகொண்டு பேசியிருக்கிறார். அப்போதுகூட அவர், ‘ராஜீவ் காந்தி படுகொலை, சர்வதேச சதி. இதில் தமிழர்கள் யாருக்கும் பங்கு இல்லை’ எனப் பேசினார். அப்படி இருக்கும் போது இப்போது, ‘நாங்கள்தான் கொன்றோம்’ என்று அவர் பேசியிருப்பது உண்மை என்றால், கடந்த 25 ஆண்டுகளாக அவர் பேசிவந்தது பொய் என்றே ஆகிறது. இது ஒன்றும் வேடிக்கையான பேச்சு அல்ல... உலகையே உலுக்கிய கொலைச் சதியைப் பற்றியப் பேச்சு.’’

“சீமான் பேச்சின் பின்னணியில் அரசியல் காரணங்கள் ஏதேனும் இருப்பதாக சந்தேகிக்கிறீர்களா?’’

“உலகம் முழுக்க விவாதங்கள் எழுந்துள்ளன. ஆனாலும்கூட, ராஜீவ் காந்தி கொலையை விசாரிப்பதற்கென்றே சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சி.பி.ஐ-யின் சிறப்புப் புலனாய்வுக் குழு, இப்போது வரை சீமானிடம் இதுகுறித்து விசாரணை நடத்தவில்லை. ஒருவேளை அவர்களுக்கு சீமானின் பேச்சு இன்னும் கேட்கவில்லையா அல்லது கேட்டும் கேளாததுபோல் நடிக்கிறார்களா? ஆக, சி.பி.ஐ-யின் கரங்களைக் கட்டிப் போட்டிருப்பது மத்திய பா.ஜ.க அரசுதானோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது!’’

“அதேசமயம் ‘அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பி ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்தது ராஜீவ் காந்தி தலைமையிலான அன்றைய காங்கிரஸ் அரசு’ என்ற சீமானின் பேச்சில் உண்மை இருக்கிறதுதானே?’’

சீமான், ராஜபக்‌சே, ராஜீவ் காந்தி
சீமான், ராஜபக்‌சே, ராஜீவ் காந்தி

“இந்திய அமைதிப்படை என்பதே நம் ராணுவத்தின் ஒரு பகுதிதான். அதில், தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில வீரர்களும் இடம்பெற்றிருந்தார்கள். அந்தப் படைக்கு தலைமை ஏற்றிருந்தவர் ஒரு சீக்கியர். ஆக, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமைதிப்படை வேலை செய்தது எனச் சொன்னால், படையில் இடம் பெற்றிருந்த தமிழர்களைக் குற்றம்சாட்டு கிறாரா சீமான் அல்லது தலைமைப் பொறுப்பேற்றிருந்த சீக்கியரை குற்றம்சாட்டுகிறாரா? இதை வெளிப்படையாகச் சொல்லும் தைரியம் சீமானுக்கு உண்டா?’’

“இந்தியா திரும்பிய அமைதிப்படையை, ‘வரவேற்க மாட்டேன்’ என்று அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதே அமைதிப்படை அத்துமீறல்களை எடுத்துக்காட்டுகிறதுதானே?’’

“மறைந்தவர்களைப்பற்றி விமர்சனம் செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், ‘இலங்கை விவகாரத்தில் நான் தலையிட மாட்டேன்’ என்றிருந்த ராஜீவ் காந்தியிடம், ‘நீங்கள் தலையிட வேண்டும். இந்திய ராணுவம் போன்ற ஒரு படையை இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டும்’ என்றெல்லாம் கேட்டுக்கொண்டதே இங்கு இருந்த அனைத்துக் கட்சிகளும்தான். ஆனால், படையை அனுப்பிவைத்த பிறகு, ‘படையை அனுப்பியது தவறு’ என்று சொன்னவர்களும் நாம்தான். இந்திய ராணுவத்தைப் பற்றி யார் என்ன சொல்லியிருந்தாலும், அது மல்லாக்கப் படுத்துக்கொண்டு காறித்துப்புவதைப் போன்றதுதான்.’’

“இலங்கை இறுதிப்போரின்போது, அன்றைய மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை ராணுவத்துக்கு ஆயுத உதவிகள் செய்தது உண்மைதானே?’’

“இந்திய வரலாற்றிலேயே இலங்கை அரசுக்கு இந்தியா போர் ஆயுதங்களை வழங்கியது என்றால், ஒரே ஒருமுறை ‘மயூரா’ என்ற போர்க்கப்பலை வழங்கியதுதான். அதுவும் காங்கிரஸ் தலைமையிலான அரசு அல்ல... வாஜ்பாய் தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசுதான். ஆனால், இந்த உண்மையை மறைத்து, ‘காங்கிரஸ் கட்சிதான் ஆயுத உதவி செய்தது’ என்று சொல்பவர்கள், உண்மையில் தமிழக மக்களுக்கே துரோகம் செய்கிறார்கள்!’’

“கடந்த வருடம் இந்தியா வந்திருந்த இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்சே, ‘இறுதிப்போரில், இந்தியா அனைத்து உதவிகளையும் செய்தது’ என்று அன்றைய மத்திய காங்கிரஸ் அரசைப் பாராட்டினாரே?’’

சி.பி.ஐ ஏன் சீமானை விசாரிக்கவில்லை? - ராஜபக்‌சே ஒன்றும் அரிச்சந்திரன் அல்ல!

“ஒரு விஷயம்... ‘தமிழர்களுக்கு எதிராக இருந்த ராஜபக்சே, ஓர் அரிச்சந்திரன்; அவர் சொல்வதைத் தான் வேதவாக்காக ஏற்றுக்கொள்வேன்’ என்று யாரேனும் கூறினால், அவரை ‘மனநிலை சரியில்லாதவர்’ என்றுதான் நான் கூறுவேனே தவிர, அதைக் கடந்து சொல்வதற்கு வேறு வார்த்தைகள் என்னிடம் இல்லை. இத்தனை கொடுமைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிற ஒருவன், தன்னைக் காத்துக் கொள்வதற்காக ஒரு விஷயத்தைச் சொல்வானா அல்லது உண்மையைச் சொல்வானா? ஆட்சி அதிகாரத்தை இழந்துவிட்ட பிறகும்கூட ராஜபக்சே இந்தியா வந்தபோது, அவருக்கு சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுத்தது காங்கிரஸ் கட்சி அல்ல. அவர் டெல்லியில் இறங்கியவுடனேயே பா.ஜ.க-வின் முக்கிய தலைவரான சுப்பிரமணியன் சுவாமி வீட்டுக்குத் தான் விருந்து சாப்பிடச் சென்றார். அங்கேயே செய்தியாளர்களையும் சந்தித்தார். இதிலிருந்தே உண்மை என்னவென்று புத்திசாலிகள் புரிந்து கொள்வார்கள்.’’

“ `இந்திய அரசு, எங்களுக்கு உதவியது’ என்ற ராஜபக்சேவின் கூற்றை எந்தக் காங்கிரஸ் தலைவரும் மறுக்கவில்லையே?’’

“நீங்கள் சொல்வது தவறு. ஆரம்பத்திலிருந்தே மறுத்து வந்திருக் கிறார்கள். 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலைக்கு தி.மு.க-தான் காரணம் என்று கூறி நாடு முழுவதும் அடிதடி நடந்தது. ஆனால் அன்றைக்கே, ‘இந்தக் கொலைப்பழியை தி.மு.க மீது சுமத்துவது அரசியல் அயோக்கியத் தனம்’ என்று பொதுக் கூட்டத்திலேயே நான் பேசினேன். ஆனாலும், வெகுஜனம் அதை நம்பவில்லை. கால ஓட்டத்தில், உண்மை தெரிய வரும்போது நான் ஏற்கெனவே சொல்லியது மக்களுக்கு மறந்து போய்விடுகிறது. அதேபோல்தான், ‘இலங்கைக்கு காங்கிரஸ் அரசு, எந்த உதவியும் வழங்கவில்லை’ என்ற உண்மையை நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.’’

“ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், தண்டனை அனுபவித்துவரும் எழுவரை விடுதலை செய்யக் கூடாது என்று தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறதே?”

“பாதிக்கப்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இயல்பு. ஆனாலும், சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும். ‘மத்தியிலும் மாநிலத்திலும் இந்த ஆட்சியே இருக்கக் கூடாது’ என்றுகூடத்தான் காங்கிரஸ் கட்சி சொல்லிவருகிறது. அதனாலேயே இவர்கள் எல்லாம் ராஜினாமா செய்துவிட்டுப் போய் விடுவார் களா? எனவே, காங்கிரஸ் கட்சி என்ன சொல்கிறது என்பது வேறு... சட்டரீதியிலாக இந்த ஆட்சி என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது வேறு.’’

“எழுவர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி காட்டிவரும் எதிர்ப்பு நிலையில், உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?’’

“காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய தொண்டர்களின் உணர்வுகளை நான் மதிக்கிறேன். ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை என்ற இந்த வழக்கைப் பொறுத்தவரையில், சம்பந்தப்பட்டவர் களோடு எனக்கிருந்த தொடர்பால், உலகத்துக்கே தெரியாத ஒரு மறுபக்கம் எனக்குத் தெரிந்திருந்தது. என் உயிருக்கே ஆபத்து இருந்தாலும்கூட அதையெல்லாம் பொருட்படுத்தாமல், எனக்குத் தெரிந்த உண்மையை ஜெயின் கமிஷனிடமும் வாக்குமூலமாகக் கொடுத்துவிட்டேன். ‘இந்த வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படவில்லை’ என்று ஜெயின் கமிஷனும் தனது இறுதி அறிக்கையில் குறிப்பிட்டது. அதனால்தான் 20 ஆண்டுகளைக் கடந்தும் இப்போதுவரை விசாரணை நடந்துவருகிறது. ஆனாலும், இந்த விசாரணையை ஏன் விரைவு படுத்தவில்லை என்பதுதான் என் கேள்வி!’’