‘‘போரில் இலங்கை அரசு எங்கள் மக்களை கொத்துக்கொத்தாய்க் கொன்றதால் அங்கிருந்து தப்பி இங்கே வந்தோம். இங்கே சிறப்பு முகாம்களில் எங்களை அடைத்து சித்ரவதை செய்து கொஞ்சம் கொஞ்சமாய்க் கொல்கிறது இந்திய அரசு’’ என்று கதறுகிறார்கள், திருச்சி சிறப்பு அகதிகள் முகாமில் உள்ள அகதிகள்.

திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்தில் இருக்கிறது சிறப்பு அகதிகள் முகாம். குற்ற வழக்குகளில் தொடர்புடைய அகதிகளுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த முகாமில் இலங்கை, வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 72 அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில், குற்றவழக்குகள் இல்லாத சிலரையும் அடைத்துவைத்திருப்பதாகவும், அகதிகளை கைதிகளைவிட மோசமாக நடத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நவம்பர் 7-ம் தேதி இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறப்பு முகாமுக்குள் 65 அகதிகள் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கினர். விடிய விடிய போராட்டம் தொடர்ந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 20 பேர் மறுநாள் விடிந்ததும், தங்களை முகாமிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோஷத்தோடு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதனால், முகாம் வளாகம் முழுவதும் பரபரப்பானது. தற்கொலைக்கு முயன்று மயங்கிக் கிடந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸில் திருச்சி ஜி.ஹெச்-க்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மருத்துவமனையில் அவர்களைச் சந்தித்தோம். ரவிஹரன் என்ற அகதி, “இந்தியா வந்த நாங்கள் முறைப்படி பதிவுபெற்று, பெரம்பலூர் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தோம். விசாரணை என்று சொல்லி என்னை அழைத்துவந்த போலீஸார், இங்கு அடைத்துவிட்டனர். குற்றவழக்கு உள்ளவர்களை சிறப்பு முகாமில் அடைத்தால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், எந்த வழக்கும் இல்லாத எங்களை அடைத்துவைத்திருப்பது எந்த வகையில் நியாயம்? மூன்று மாதங்களுக்கு முன்பு, என் தம்பி ஒரு விபத்தில் சிக்கி இறந்துவிட்டான். அவனுடைய இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளக்கூட அனுமதிக்கவில்லை. திருச்சி கலெக்டர் வரை மனு கொடுத்தும் பயனில்லை” என்றவர் சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்.

‘‘என்னைப்போலவே எந்த வழக்கிலும் இல்லாத சசிதருண், யேசுதாஸ், தேவசுதன் உள்ளிட்ட பலர் இங்கு அடைத்துவைக்கப் பட்டுள்ளனர். ஏதேனும் தவறு செய்து தண்டனை அனுபவித்திருந்தால்கூட இந்நேரம் வெளியே வந்திருக்கலாம். ஆனால், எந்தத் தவறும் செய்யாத எங்களை வருடக்கணக்கில் அடைத்துவைத்து சித்ரவதை செய்கிறார்கள்’’ என்று கலங்கினார்.

அடுத்து பேசிய பாஸ்கரன், ‘‘முல்லைத்தீவுதான் எனக்கு சொந்த ஊர். மனைவி, இரண்டு மகள்கள் என உறவுகளோடு அங்கு வாழ்ந்துகொண்டு இருந்தேன். கடந்த 2004-ம் ஆண்டு நடந்த போரில், என் மனைவி சகுந்தலா தொலைந்துபோனார். என் கண்கள் குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டன. சிகிச்சைக்குப் பிறகு ஒரு கண்ணில் மட்டும் 20 சதவிகிதம் பார்வை வந்தது. அடுத்தடுத்து உறவினர்கள் நான்கு பேரை இழந்தேன். அதற்குமேல் அங்கே இருக்க முடியவில்லை.

2006-ம் ஆண்டு இரண்டு பெண் பிள்ளைகளுடன் இந்தியா வந்துவிட்டேன். மண்டபம் முகாமில் பதிவுபெற்று, வேலூர் முகாமில் நாங்கள் தங்கியிருந்தோம்.

2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல முயன்றதாக 19 பேர்மீது பொய் வழக்கு போட்டனர். அதில் என் பெயரும் அடக்கம். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனாலும், என்னை வேலூர் முகாமுக்கு அனுப்பாமல், இலங்கைக்கே திருப்பியனுப்ப திட்டமிடுவதாகத் தகவல் வந்துள்ளது. என்மீது பொய்வழக்குப் போட்டதோடு, என் பிள்ளைகளையும் விட்டுவிட்டு இலங்கைக்குப் போகச் சொல்கிறார்கள்’’ என்று பெருங்குரலெடுத்து அழுதார்.

அவரை ஆசுவாசப்படுத்திப் பேசவைத்தோம். ‘‘கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்துவிட்டன; இதயப் பிரச்னையாலும் வயதுமுதிர்வாலும் அவர் அவதிப்படுகிறார். துணை இல்லையென்றால், அவரால் எதுவும் செய்ய முடியாது. அவரை இலங்கைக்கு அனுப்புவது சரியா... மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தனி வட்டாட்சியர் சுதந்திரராஜாவிடம் கேட்டோம். ‘‘முகாம்வாசிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப் பட்டுள்ளது. சிலரை சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவுசெய்துள்ளோம். அதில் சிலர் போக மறுக்கிறார்கள். முகாம்வாசிகளின் கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளோம். நல்ல முடிவு கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்றார்.

இந்நிலையில், வங்கதேசத்தைச் சேர்ந்த நான்கு முகாம்வாசிகளை அவசர அவசரமாக சொந்த நாட்டுக்கு அனுப்பியுள்ளனர். இதனால், இலங்கை அகதிகள் பதற்றத்தில் உள்ளனர்.