திருச்சி ஜங்ஷன் அருகே உள்ள திருச்சி ரயில்வே பயிற்சிப் பள்ளியில், தென்னக ரயில்வே அதிகாரிகளுடன் தமிழகம் மற்றும் கேரளா எம்.பி-க்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தென்னக ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயின், மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின், திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அஜய்குமார், கூடுதல் வணிக மேலாளர் காயத்திரி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையில் இது நடந்த கூட்டம் காலை 10 மணி முதல் மதியம் 2.30 வரை நடைபெற்றது.
வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும் கூட்டத்தில், தமிழகத்தின் எம்.பி-க்கள் பெரம்பலூர் பாரிவேந்தர், நாகப்பட்டினம் செல்வராஜ், மதுரை சு.வெங்கடேசன், தேனி ரவீந்திரநாத் குமார், விழுப்புரம் ரவிக்குமார், விருதுநகர் மாணிக் தாகூர் உள்ளிட்டோர் மற்றும் கேரள மாநிலம் கொல்லம் பிரேமச்சந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் கொடிகுணில் சுரேஷ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

திருச்சி சிவா, கரூர் ஜோதிமணி கூட்டம் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்து சேர்ந்தார்கள். 30-க்கும் மேற்பட்ட எம்.பி-க்கள் ரயில்வே தொடர்பான பிரச்னைகளை முன்வைத்தனர். மேலும், கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லாத காரணத்தால், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் கோரிக்கையை எம்.பி-க்களிடம் கொடுத்து அனுப்பினர்.
அதைவிடத் திருச்சியில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் கலந்துகொள்ளாததால், திருச்சி ஜங்ஷன், நகர் ரயில்வே நிலையம், அரிஸ்டோ ரவுண்டானா உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காகப் புகாருடன் வந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் மற்ற பகுதி எம்.பி-க்களிடம் கொடுத்து கோரிக்கையைக் கூட்டத்தில் பேச கெஞ்சினார்கள்.
திருநாவுக்கரசரைப்போல் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம், ராஜ்யசபா எம்.பி முத்துக்கருப்பன், சிதம்பரம் எம்.பி திருமாவளவன், தூத்துக்குடி எம்.பி கனிமொழி ஆகியோர் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

கூட்டத்தில் பேசிய விருதுநகர் எம்.பி மாணிக் தாகூர், ``சமீபகாலமாகத் தென்னக ரயில்வே தமிழ் மொழி பேசத் தெரியாதவர்களைப் பணியில் சேர்ப்பது தொடர்கிறது. குறிப்பாகத் தொழில்நுட்ப பதவிகளைவிட மக்களோடு நேரடியாகத் தொடர்புடைய பொறுப்புகளில் தமிழ் மொழி பேச எழுதத் தெரியாத அதிகாரிகளை நியமிப்பதால், தமிழக மக்கள் ரயில் நிலையத்தில் அதிகம் சிரமப்படுகின்றனர். அதனால் தமிழ் பேசத் தெரிந்த எழுதத் தெரிந்த அதிகாரிகளைத் தமிழக ரயில் நிலையங்களில் நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி, ``மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை முதல் மதுரை வரை புதிதாகத் தொடங்கியுள்ள தேஜஸ் ரயிலின் பெயரை, `தமிழ்ச் சங்கம்' எனப் பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அந்த ரயிலில் தொலைக்காட்சி மற்றும், பாடல் கேட்கும் வசதிகள் உள்ளன. அதில் தமிழ்ப் படங்கள் மற்றும் பாடல்கள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொடுக்க வேண்டும். மேலும் மழைக்காலங்களில் அல்லது பேரிடர் காலங்களில் ராமேஸ்வரத்துக்கு ரயில் விடுவதில்லை.

பாம்பன் பாலம் இருப்பதால் மழையைக் காரணம் காட்டி திடீரென ரயில்கள் ரத்து செய்யப்படுவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் மழைக்காலங்களில் பாம்பன் பாலத்துக்கு முன்பக்கம் உள்ள மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து அனைத்து ரயில்களையும் இயக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதேபோல் மதுரை எம்.பி சு.வெங்கடேசன், `தேஜஸ் ரயிலுக்கு பெயர் மாற்றம் செய்வது மற்றும் தென்னக ரயில்வே திட்டமிட்டு வட இந்தியர்களுக்குப் பணி வழங்குவது' உள்ளிட்ட கோரிக்கைகளை 16 எம்.பி-க்களிடம் கையெழுத்து வாங்கி ரயில்வே துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
கூட்டத்தில் பாரிவேந்தர், `பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருச்சி லால்குடியில் மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, லால்குடியில் மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் நின்று செல்ல வேண்டும். மேலும், பெரம்பலூர் மக்களின் 50 ஆண்டுக் கனவு திட்டமான அரியலூர், பெரம்பலூர், துறையூர் நாமக்கல் இடையேயான ரயில்வே வழித்தட திட்டத்ததுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, நிதி ஒதுக்காத காரணத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தக் கோரி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளேன். மக்களின் உணர்வை மதித்து பெரம்பலூர் ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.

மாநிலங்களவை எம்.பி எனத் திருச்சி சிவா, "திருச்சி - பெங்களூரு இடையே விமான சேவை நிறுத்தப்பட உள்ளது. தினமும் திருச்சியிலிருந்து பெங்களூருக்கு பத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இவ்வளவு போக்குவரத்து இருந்தாலும் ரயில்வே போக்குவரத்து குறைவாக உள்ளது. அதேபோல் திருச்சி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள் சரியாக ஏற்படுத்தப்படவில்லை. 10 வருடங்களுக்கு மேலாக திருச்சி ஜங்ஷன் அரிஸ்டோ மேம்பாலப் பணி அப்படியே கிடக்கிறது. ஆலோசனைக் கூட்டங்களை வெறும் சடங்காக நடத்தாமல், எம்.பி-க்கள் கூறும் கருத்துகளைக் கேட்டு மூன்று மாதத்தில் ரயில்வே நிர்வாகம் எடுத்த நடவடிக்கை குறித்து பதிலளிக்க வேண்டும்" எனக் கோரிக்கை வைத்தார்.
தென்னக ரயில்வேயில் ஆட்கள் தேர்வில் சமீப காலமாக வட இந்தியர்கள் அதிகமாகப் பணியில் செயற்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அ.தி.மு.க - தி.மு.க உள்ளிட்ட அனைத்து தமிழக எம்.பி-க்கள் ஒரே அணியாக ஒரே நேரத்தில் கேள்வி எழுப்பியது ரயில்வே துறை அதிகாரிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது.