Published:Updated:

திருப்பூர் டு தாய்லாந்து! - தனியொருத்தியாக மகன்களை மீட்ட தாயின் கதை!

"இங்கிருக்கும் அரசோ அரசு அதிகாரிகளோ, அதுக்காக ஒண்ணுமே நடவடிக்கை எடுக்கலை. காவல்துறை இனிமேலும் எனக்கு உதவ நினைச்சா, சீக்கிரமே அந்தப் போலி ஏஜென்ட் ரஞ்சித்தைப் பிடிச்சு, நான் இழந்த பணத்தை மீட்டுத் தரணும்." - மாரியம்மாள்

மாரியம்மாள் மகன்களுடன்
மாரியம்மாள் மகன்களுடன்

இந்திய அரசாங்கம் உதவாமல் போகவே, தாய்லாந்தில் சிக்கிய மகனை தனியொருத்தியாகப் போராடி மீட்டுவந்துள்ளார், மாரியம்மாள். திருப்பூர் ஆண்டிப்பாளையம் அருகே உள்ள குளத்துப்புதூரில் வசிப்பவர், மாரியம்மாள். கணவரைப் பிரிந்து 3 மகன்களுடன் வாழும் அவர், பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவருகிறார்.

வெளிநாட்டுக்கு தொழிலாளர்களை அனுப்பிவைக்கும் ஏஜென்ட் ரஞ்சித் என்பவர், மாரியம்மாளின் மகன்கள் மணிகண்டன், மணித்துரை இருவரையும் தாய்லாந்து நாட்டில் கார்மென்ட் நிறுவனத்தில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.

திருப்பூர் மாரியம்மாள்
திருப்பூர் மாரியம்மாள்

அதை நம்பிய மாரியம்மாள், அவரிடம் 2,70,000 ரூபாய் பணம் கட்டியுள்ளார். ஜனவரி 21 அன்று, அவரின் மகன்கள் இருவரும் ஏஜென்ட் மூலம் தாய்லாந்து சென்றுள்ளனர். அங்கு இருவரும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிறிது நாள்கள் அலைக்கழித்துவிட்டு, கொத்தடிமைபோல் வேலை வாங்கிவிட்டு அங்குள்ள தமிழர் ஒருவரின் உணவகத்தில் இருவரையும் வேலைக்குச் சேர்த்துவிட்டுச் சென்றுவிட்டனர், அங்குள்ள ஏஜென்ட்டுகள்.

அப்போதுதான், அவர்கள் அழைத்துவரப்பட்டது டூரிஸ்ட் விசா என்றும், அது முடிந்தவுடன் உணவகத்தில் ஏமாற்றிச் சேர்த்துவிட்டுச் சென்றனர் என்றும் தெரியவந்துள்ளது. அதை அறிந்துகொண்ட உணவக உரிமையாளர், அவர்களுக்கு முடிந்தவரை அடைக்கலம் தருவதாகவும் அதற்குள் இந்தியாவில் யாரிடமாவது உதவி கேட்டுச் சென்றுவிடுமாறும் கூறியுள்ளார்.

இந்தத் தகவல் மாரியம்மாளுக்குத் தெரியவர, அவர் ஏஜென்ட் ரஞ்சித்தை சந்தித்து இதுகுறித்து கேட்டபோது, அவர் மிரட்டும் தொனியில் பேசியுள்ளார். உடனே கே.வி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகாரளித்தார், மாரியம்மாள். அங்கு இன்ஸ்பெக்டர் அழைத்து விசாரித்தபோது, ரிட்டர்ன் டிக்கெட்டின் நகல் ஒன்றைக் காட்டி, சீக்கிரமே வந்துவிடுவார்கள் என்று ரஞ்சித் கூறியுள்ளார்.

அதுபோல நான்கு முறை கூறியும் மகன்கள் வராததால், திருப்பூர் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தது தெரிந்து, ரஞ்சித் உஷாராகி தாய்லாந்துக்குத் தகவல் கொடுத்து, ஏஜென்ட்டுகள் மூலம் மாரியம்மாளின் இளைய மகன் மணிகண்டனை மட்டும் பாங்காக் அழைத்து வந்துள்ளார்.

தாய்லாந்து
தாய்லாந்து

அவரை இந்தியா அழைத்துவர ஏற்பாடு செய்துவிட்டோம் என்று கூறிய ஏஜென்ட்டுகள், பாங்காக் உணவு விடுதி ஒன்றில் சேர்த்துவிட்டு, மேலும் பணம் கொடுத்தால்தான் பையனை விடுவோம் என்று கூறி அங்கேயே விட்டுச் சென்றுவிட்டனர். அங்கிருந்த பரம்ஜித் சிங் என்பவர், அந்தப் பையனுக்கு அடைக்கலம் கொடுத்து வீட்டுக்குத் தகவல் கூறியுள்ளார். அவருக்கு டிக்கெட்டுக்கான பணம் அனுப்பி, அவரின் உதவியால் மகன் மணிகண்டனை ஜூன் 13 அன்று இந்தியா வரவழைத்துள்ளார் மாரியம்மாள்.

இன்னொரு மகன் மணித்துரையை அழைத்துவர கலெக்டரிடம் மனு கொடுத்துப் பார்த்தார். பதில் ஏதும் இல்லாமல்போகவே, இந்தியத் தூதரகத்தின் உதவியை நாடினார், மாரியம்மாள். தெரிந்தவர்கள் உதவியுடன் இந்தியத் தூதரகத்துக்கு மெயில் அனுப்பினார். வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அவரை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதாக ட்விட்டரில் கூறினார். இந்திய அதிகாரிகள், மணித்துரையை பாங்காக் இந்தியத் தூதரகத்தில் சரணடையக் கூறியுள்ளனர். மாரியம்மாளிடமும் அரசு அதிகாரிகள் விவரங்களைச் சேகரித்து மேலிடத்துக்கு அனுப்பி மகனை மீட்டுத்தருவதாகக் கூறியுள்ளனர்.

மாரியம்மாள் மகன்களுடன்
மாரியம்மாள் மகன்களுடன்

ஆனால், தூதரகத்து அதிகாரிகள் அவரை 15 நாள்கள் சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.

இந்திய அதிகாரிகளும் மேலதிக நடவடிக்கைகள் எடுக்காமல் விடவே, மீண்டும் பரம்ஜித் சிங்கிடம் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார் மாரியம்மாள். அவருக்குப் பணம் அனுப்பிவிடவே, தூதரகத்தில் அபராதத் தொகை கட்டி மணித்துரையை மீட்டு இந்தியாவிற்கு டிக்கெட் எடுத்து அனுப்பியுள்ளார்.

இந்தியா வந்து சேர்ந்த மகனைக் கண்ணீருடன் வரவேற்ற மாரியம்மாளிடம் பேசியபோது, "என் பையனை இந்தியா கொண்டுவர ரொம்பவே சிரமப்பட்டிருக்கேன். நான் புகார் கொடுத்தும், போலீஸ் அந்த ஏஜென்ட் ரஞ்சித்துக்கு ஆதரவாதான் நடந்துகிட்டாங்க. போலீஸ் ஸ்டேஷன்ல ரஞ்சித்துக்குக் கிடைத்த மரியாதைகூட எங்களுக்குத் தரலை. சின்னப்பையன் மணிகண்டனை போன மாசம் 60,000 செலவுசெய்து மீட்டு வந்தப்போகூட, அவன் வீட்டுக்கு வந்தது தெரியாம காவல் துறையினர் ஏஜென்ட்டுகளோட சேர்ந்துகொண்டு, என் பையன் பாங்காங்குல அவங்க கஸ்டடிலதான் இருக்கான்னும், அவனை பணம் கட்டினா அனுப்பிருவாங்கன்னும் பொய் சொன்னாங்க. பின்ன, அவன் வீட்டுக்கு வந்தது தெரிஞ்சதும், ஸ்டேஷன் கூட்டிட்டுப் போய் அவங்களே மீட்டு வந்த மாதிரி போட்டோ எடுத்து கையெழுத்து வாங்கினாங்க.

இன்னொரு பையன் மணித்துரையை மீட்க வெளியுறவுத் துறையில உதவி கேட்டு, அவங்களும் உதவறேன்னு சொல்லிட்டு எதுவுமே உதவலை. இங்கிருக்கும் அதிகாரிகளும் தகவல் வாங்கிட்டுப் போயிட்டு அதுக்கு மேல போன் பண்ணாலும் சரியா பதில் சொல்லலை.

நான் ஒருத்தியா, தெரிஞ்சவங்க மூலம் பேசி 30,000 பணம் கட்டி அவனை மீட்டுக் கொண்டுவந்திருக்கேன்.
மாரியம்மாள்

படிக்காத ஒருத்தியா நான் கஷ்டப்பட்டு, அவனை மீட்டுவர முடிஞ்சத செஞ்சுருக்கேன். ஆனா இங்கிருக்கும் அரசோ, அரசு அதிகாரிகளோ அதுக்காக ஒண்ணுமே நடவடிக்கை எடுக்கலை. காவல்துறை இனிமேலும் எனக்கு உதவ நினைச்சா, சீக்கிரமே அந்தப் போலி ஏஜென்ட் ரஞ்சித்தைப் பிடிச்சு, நான் இழந்த பணத்தை மீட்டுத் தரணும்" என்று ஆதங்கத்துடன் பேசினார்.

திருப்பூர்
திருப்பூர்

மணித்துரையிடம் இதுகுறித்து கேட்டபோது, "அங்க வேலைக்குப் போனப்போ சரியான வசதி எதுவுமே இல்லை. தகவல் தெரிவிச்சதும், நம்ம அரசாங்கம் காப்பாத்திடும்னு நம்பிக்கையா இருந்தேன். ஆனா, அவங்க என்னைக் கைதுசெய்து ஜெயில்ல அடைச்சப்போ ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. வசதியற்ற அறையில அடைச்சுவச்சது ரொம்ப மன உளைச்சலைத் தந்தது. எனக்குத் தெரிஞ்சு நான் எந்தத் தப்பும் பண்ணல. என்னைப் போலவே அங்க இன்னும் நிறைய இந்தியர்கள் கைதியா இருக்காங்க. வீட்டுக்குக்கூட தெரியாம நிறைய பேர் மாட்டிக்கிட்டு தண்டனை அனுபவிச்சிட்டு இருக்காங்க. என்னை ரொம்ப சிரமப்பட்டு என்னோட அம்மா மீட்டு வந்திருக்காங்க. அவங்க இல்லைனா, நான் இந்தியா வந்திருக்கவே முடியாது" என்றார்.

இதுகுறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் வெளிநாடுவாழ் தமிழர்கள் நல ஆணையரகத்தைத் தொடர்புகொண்டபோது, "அவர்கள் அனுப்பிய விவரங்கள் எங்களுக்கு வந்து சேர்வதில் தாமதமானது. கிடைத்த தகவல்களை நாங்கள் தூதரக அதிகாரிகளுக்கு அனுப்பியிருந்தோம். இதுபோன்ற நிறைய வழக்குகள் இருப்பதால், அங்கிருந்து பதில் வர குறைந்தது ஐந்து நாள்களாவது ஆகும். அதைத் தெரிவிப்பதற்குள், அவர் அவசரப்பட்டு பணம் கொடுத்து மீட்டுள்ளார்.

சிறைத்தண்டனை, அபராதம், நாடு கடத்தல்... துபாயில் 17 பேர் பலியாகக் காரணமான டிரைவருக்கு தண்டனை!

மேலும், போலி ஏஜென்ட்டுகளிடம் சிக்காமல் இருக்க, முடிந்தவரை விழிப்புணர்வுகளை நாங்களும் கொடுத்துவருகிறோம். இருந்தாலும், விசாரிக்காமல் பணம் கட்டிவிட்டு சிரமப்படுபவர்கள், முன்யோசனையுடன் செயல்பட வேண்டும்" என்றார்.