Published:Updated:

தகைசால் தமிழர்: கருணாநிதி சமத்துவபுரம் கட்டினார்... சங்கரய்யா தனது வீட்டையே சமத்துவபுரம் ஆக்கினார்!

தோழர் சங்கரய்யா

கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சமத்துவபுரத்தை கட்டினார். தோழர் என். சங்கரய்யா தனது குடும்பத்தையே சமத்துவபுரம் ஆக்கினார்.

தகைசால் தமிழர்: கருணாநிதி சமத்துவபுரம் கட்டினார்... சங்கரய்யா தனது வீட்டையே சமத்துவபுரம் ஆக்கினார்!

கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சமத்துவபுரத்தை கட்டினார். தோழர் என். சங்கரய்யா தனது குடும்பத்தையே சமத்துவபுரம் ஆக்கினார்.

Published:Updated:
தோழர் சங்கரய்யா
அரசியல் என்றாலே ஊழல், முறைகேடு, பதவிக்கும் பவுசுக்கும் கட்சி மாறுதல், சுய நலம் என ஒரு பகுதியினர் முகம் சுழிக்கும் இக்காலத்தில், தன்னுடைய வாழ்க்கையையே நாட்டுக்காக, மக்களுக்காக அர்ப்பணித்த உயர்ந்த மனிதர் தோழர் என். சங்கரய்யா. அவருடைய நூற்றாண்டு விழாவினை கொண்டாடுகிறோம்.

'தகைசால் தமிழர்' என்ற ஒரு விருதை துவக்கி, அதன் முதல் விருதை சங்கரய்யாவுக்கு அளித்திடும் முடிவை, மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார். இந்த விருது சங்கரய்யாவுக்கானது மட்டும் என நான் கருதவில்லை; சங்கரய்யா வளர்த்த இயக்கத்திற்கும், சங்கரய்யா வளர்த்த கட்சிக்கும் என்றே நான் கருதுகிறேன்.

தென்னாப்பிரிக்காவில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த அண்ணல் காந்திஜி அவர்கள் அந்த வேலையை தூக்கியெறிந்து விட்டு, தாய் நாட்டுக்கு திரும்பி சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண்டார். பிறகு அவரே சுதந்திரப் போராட்டத்துக்கு தலைமையேற்றார். சங்கரய்யா வழக்கறிஞராக வர வேண்டுமென அவரது தந்தை விரும்பினார். ஆனால், சங்கரய்யா பட்டப்படிப்புக்கே முற்றுப்புள்ளி வைத்து, கல்லூரி படிப்பை முடிக்காமலேயே, தேச விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கினார். ‘’நீங்கள் படித்து வேலைக்கு போகவில்லையே ஏன்?’’ என்று கேட்டபோது, “We are not Job hunters. We are freedom hunters” (நாங்கள் வேலைக்காக போராடுபவர்கள் அல்ல; விடுதலைக்காக போராடுபவர்கள்) என இளம் வயதிலேயே சங்கரய்யா பதில் சொல்லியிருக்கிறார்.

இரா. நல்லகண்ணு - சங்கரய்யா
இரா. நல்லகண்ணு - சங்கரய்யா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சங்கரய்யாவின் வாழ்க்கையை மூன்று வடிவங்களில் பார்க்கலாம். 1. குடும்ப வாழ்க்கை, 2. பொதுவாழ்க்கை, 3 கட்சி வாழ்க்கை.

எண்ணிலடங்கா சாதிகள், சாதிகளுக்குள் உட்பிரிவுகள், பல மதங்கள், மதங்களில் பல கிளைகள் உள்ள தேசம் நமது நாடு. சாதி, மத வேறுபாடற்ற சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உபதேசம் செய்யும் ஒருவர், அவரே எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும். தோழர் என்.சங்கரய்யா அவர்கள் பிறப்பால் இந்துவாக இருந்தாலும், பிறப்பால் கிறித்துவரான பெண்ணை மணந்து கொண்டார். அவர் மட்டுமல்ல அவர் குடும்பத்தில் உள்ள அத்துணை பேருக்கும் சாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களை செய்து வைத்தார். கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழகத்தில் பல மாவட்டங்களில் சமத்துவபுரத்தை கட்டினார். தோழர் என். சங்கரய்யா தனது குடும்பத்தையே சமத்துவபுரம் ஆக்கினார். அவர் கலந்து கொண்ட பல கூட்டங்களில், ‘’இளைஞர்களே, இளம் பெண்களே காதலியுங்கள்! காதலித்து சாதி, மறுப்பு திருமணங்கள் செய்து கொள்ளுங்கள்!’’ எனப் போராட்டத்திற்கு அறைகூவல் விடுப்பது போல் முழங்குவார். ஏனென்று கேட்டால், சாதி ஒழிப்புக்கு இதுவும் ஒரு முக்கியமான பணி என்பார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தோழர் சங்கரய்யா அவர்கள் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியிருக்கிறார். நாடு விடுதலை அடைந்த பிறகு மொழிவழி மாநிலம் அமைந்திட கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டத்தில் அவர் முக்கிய பங்கேற்றார். தமிழ்நாடு என்று பெயர் சூட்டிட விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் அவர் இறக்கிற தருவாயில், தன்னுடைய உடலை கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உயில் எழுதி வைத்தார். அத்தகைய பெருமகனாரின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொள்கிற போது தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு போராடுவோம் என்று சூளுரைத்தார். மொழிவழி மாநிலம் அமைந்தது. 1962-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்த பி. ராமமூர்த்தி, சென்னை மாகாணத்திற்கு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டுமென ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது. 1968ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழை ஆட்சி மொழியாக்கிட தீர்மானத்தை அண்ணா முன்மொழிந்தார். ”தமிழை ஆட்சி மொழி ஆக்கிட தீர்மானம் நிறைவேற்றினால் மட்டும் போதாது; பாட மொழியாக, நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக தமிழை ஆக்குவதோடு அடுத்த 5 ஆண்டுகளில் இதற்கான அடிப்படை கட்டமைப்புகளையும் அரசு உருவாக்கிட வேண்டுமென்ற திருத்தத்தை தோழர் சங்கரய்யா முன்வைத்தார். அவர் முன்வைத்த திருத்தத்தை அண்ணா ஏற்றுக்கொண்டு தீர்மானம் நிறைவேறியது. கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதும், எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோதும் தோழர் சங்கரய்யா ஆற்றிய சட்டமன்ற உரைகள் தமிழக சட்டமன்ற வரலாற்றின் முக்கியமான பக்கங்கள்.

சங்கரய்யா
சங்கரய்யா

அந்நியர் ஆட்சி அகற்றப்பட்டால் மட்டும் போதுமா, நாட்டு மக்களுக்கு பொருளாதார சுதந்திரம் வேண்டா? என்ற கேள்வி சுதந்திரப் போராட்டத்தின் போது எழுந்தது. அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அரசியல் நிர்ணய சபையின் கடைசி கூட்டத்தில், ”அரசியலில் நாம், ’ஒரு மனிதருக்கு ஒரு ஓட்டு; ஒரு ஓட்டுக்கு ஒரு மதிப்பு’ என்ற கொள்கையை அங்கீகரித்துள்ளோம். ஆனால், சமூகம் மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நம்முடைய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பினால், ஒரு மனிதர் ஒரு மதிப்பு என்ற கொள்கையைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறோம். இப்படி முரண்பாடுகளுடன் நாம் எவ்வளவு காலம் வாழப்போகிறோம்? சமூகப் பொருளாதார வாழ்க்கையில் சமத்துவத்தை எவ்வளவு காலத்துக்கு நாம் மறுக்கப் போகிறோம்? அவ்வாறு நாம் தொடர்ந்து புறக்கணித்து வந்தால், நம்முடைய அரசியல் ஜனநாயகத்தையும் அழிவுக்குத் தள்ளிவிடுவோம். இந்த முரண்பாட்டை நாம் வெகு சீக்கிரமே களைய வேண்டும். இல்லையேல், சமத்துவமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் நாம் அரும்பாடுபட்டு உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயக அமைப்பையே தகர்த்துவிடுவார்கள்” என்று உரையாற்றினார்.

அம்பேத்கரின் இக்கூற்று இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. நாட்டு மக்களின் சமூகப் பொருளாதார சமத்துவத்துக்காக கம்யூனிஸ்ட் இயக்கம் நடத்திய, நடத்திவரும் போராட்டங்களில் பிரதான பங்காற்றியவர் தோழர் சங்கரய்யா.

சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 4 ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்ட தோழர் சங்கரய்யா, 1947 ஆகஸ்ட் 14 நள்ளிரவில்தான் விடுதலையானார். சுதந்திர இந்தியாவில் சாதி ஒழிப்புக்காக, நிலப்பிரபுக்களின் நிலத்தை நிலமற்றவர்களுக்கு விநியோகிக்க வேண்டும் என்பதற்காக, உழைப்பாளி மக்களின் கோரிக்கைக்காக, மனித உரிமைகளுக்காக, நடைபெற்ற போராட்டங்களில் கலந்துகொண்டு மேலும் நான்காண்டுகள் சிறையில் இருந்தார். சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் மூன்றாண்டுகள் தலைமறைவாக இருந்து கட்சிப் பணி ஆற்றினார். அவரது மொத்த வாழ்க்கையில் 11 சதவிகிதம் சிறையிலும் தலைமறைவிலும் கழிந்தது.

’’சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு பென்ஷன் வழங்குகிறது. கட்சியின் முடிவுப்படி சுதந்திர வீரர்களுக்கான பென்ஷனை ஏன் மறுத்தீர்கள்’’ எனக் கேட்டபோது, ‘’சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக எதற்கு பென்ஷன்? சுதந்திரத்திற்காக சிறை செல்ல வாய்ப்பு கிடைத்ததே எனக்குக் கிடைத்த பரிசு’’ எனக் கூறினார்.

என். சங்கரய்யா
என். சங்கரய்யா

கடந்த ஜூலை 15-ம் தேதி அவருடைய 100ஆவது பிறந்த நாள் அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களும், மாநில முதல்வர் உள்ளிட்ட பல தலைவர்களும் அவரை நேரடியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். கொரோனா காலம் என்பதால் பெரிய விழாவாக நடத்துவதைத் தவிர்க்க வேண்டியதாயிற்று.

நான் 1968-ல் சென்னை கலைக்கல்லூரியில் சேர்ந்தேன். சில மாதங்களில் மாணவர் சங்கத்தில் சேர்ந்தேன். அப்போது NS சட்டமன்ற உறுப்பினர். அப்போதிருந்தே அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.1989-ல் மாநில செயற்குழுவிற்கு தேர்வானேன்.அன்றிலிருந்து இன்றுவரை அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தூரத்தில் இருந்து பார்த்தாலும் நெருங்கிபார்த்தாலும் சங்கரையா சங்கரையா தான்.

நேற்று மாநில முதல்வர் அறிவித்த தகைசால் தமிழர் என்ற தமிழ்நாட்டின் உயரிய விருதுக்கு நன்றி தெரிவித்து, விருதை ஏற்றுக்கொண்ட தோழர் சங்கரய்யா, அரசு அறிவித்துள்ள 10 லட்ச ரூபாய் பணமுடிப்பை கொரோனா நிவாரணத்துக்கான மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு மகிழ்ச்சியோடு வழங்குகிறேன் என அறிவித்துவிட்டார்.

நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் தோழர் சங்கரய்யாவின் வாழ்க்கையே இன்றைய தலைமுறையினருக்கான வழிகாட்டி.

- தோழர். ஜி. ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)