Published:Updated:

நிலம் ஆர்ஜிதம் செய்த அரசு; 15 ஆண்டுகளாக உரிய இழப்பீடு வழங்காததால் பரிதவிக்கும் 17 குடும்பம்!

காரைக்காலில், நில ஆர்ஜிதம் செய்து 15 ஆண்டுகளை கடந்துவிட்டபோதும் எங்களுக்கு முழு இழப்பீடு தொகையை அரசு இது நாள்வரை வழங்கவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கடந்த 2006 -ம் ஆண்டு காரைக்கால் கோவில்பத்து கிராமத்தில் 17 நபர்களுக்குச்  சொந்தமான இடத்தை 'காவல்துறை உயர்கண்காணிப்பாளர் மற்றும்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம்' அமைப்பதற்கு புதுச்சேரி அரசு ஆர்ஜிதம் செய்தது. ஆனால் இதுநாள்வரை உரிய இழப்பீடு வழங்காதலால் இடத்தின் உரிமையாளர்கள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

காரைக்கால்: `விவசாய மானியங்களில் தலைவிரித்தாடும் ஊழல்!’ - துணைநிலை ஆளுநருக்குப் பறந்த புகார்
நிலம்
நிலம்

நில உரிமையாளர்களில் ஒருவரான முகம்மது சாகுல் ஹமீதுவிடம் பேசினோம்.

" அரசு எந்த நோக்கத்திற்காக  எங்களிடமிருந்து நிலத்தைக் கையகப்படுத்தியதோ அந்த நோக்கத்தை அரசு நிறைவேற்றவில்லை. அந்நிலத்தை அரசு ஜிப்மர் நிர்வாகத்திற்கு தாரை வார்த்து விட்டது, ஜிப்மர் கட்டிடங்களும் உயர்ந்து விட்டது, நில ஆர்ஜிதம் செய்து 15 ஆண்டுகளை கடந்துவிட்டபோதும் எங்களுக்கு முழு இழப்பீடு தொகையை அரசு இது நாள்வரை வழங்கவில்லை .

இழப்பீடு கிடைக்காமல் பல குடும்பங்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். இரண்டு பேர் இந்த மன உளைச்சலில் இறந்துவிட்டனர். சிலர் பரிதாப நிலையில் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்ட சூழ்நிலையில் உள்ளனர். "இழப்பீடு தொகையை  புதிய நில ஆர்ஜித சட்டத்தின் கீழ் வழங்க வேண்டும் " என சென்னை உயர் நீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் புதுச்சேரி அரசு பரிசீலனையில் இருப்பதாக பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது.  இறுதி இழப்பீடு தொகை வழங்கும் காலக்கெடுவை அரசு அறிவிக்காத காரணத்தால் இடைத்தரகர்கள் அத்தொகையை பெற்றுக்கொடுப்பதாக கூறி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இழப்பீடு தொகை கிடைப்பதற்கான காலக்கெடுவை அரசு உடனே அறிவிக்க வேண்டும். மேலும் எங்கள் இடத்தை  ஒரு  சதுரடி என்ன விலைக்கு எடுக்கப்பட்டது ? ஜிப்மர் வசம்  ஒரு சதுரடி என்ன விலைக்கு கொடுக்கப்பட்டது ?ஜிப்மர் நிர்வாகத்திடமிருந்து அரசு முழு தொகையையும் பெற்று விட்டதா ? கடை தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைத்த கதைபோல அரசே செய்துள்ளது.

நிலம்
நிலம்

நான் ஆசையாக  வீடு கட்ட வாங்கி வைத்த இடத்தைதான் அரசு ஆக்ரமித்தது. அந்த இடத்தின் அன்றைய சந்தை மதிப்பு ரூ. 5 லட்சம் இன்றைக்கு ரூ. 20 லட்சம். ஆனால் எனக்கு இழப்பீடு தந்ததோ வெறும் ரூ.1. லட்சம்தான்.15 வருடங்களாக அலைகிறோம். பலனில்லை. புதிய அரசாவது எங்கள் நிலையை பரிசீலிக்கும் என நம்புகிறோம். இதுகுறித்து துணைநிலை ஆளுநருக்கும் மனு அனுப்பியுள்ளோம் " என்றார். அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, " புதுவைக்கான லீகல் ஒபீனியன் வழங்கும் அலுவலகம் சென்னையில் உள்ளது. அங்கிருந்து கோப்பு வரனும். விரைவில் உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் " என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு