Published:Updated:

போராட்டங்களுக்கு இவர் கொடுத்த விலை... ஸ்டேன் சாமியின் வாழ்வும், அவர் சந்தித்த பிரச்னைகளும்!

கார்த்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஸ்டேன் லூர்து சாமி
ஸ்டேன் லூர்து சாமி ( Khetfield59, CC BY-SA 4.0 via Wikimedia Commons )

84 வயது முதியவரின் மரணம் பெரிதாய் என்ன செய்துவிடும்? ஒன்றும் செய்யாது. ஆனால், நம் தேசம் இன்னும் ஜனநாயகத்துடன் இருக்கிறதா என்பதையே கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கியிருக்கிறது இந்த மரணம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"அரசு என்றுமே நியாயத்தின் பக்கம் நின்றதில்லை. ஏதேனும் செய்பவர்களை, இந்த அரசுகள் ஒருக்காலமும் கைது செய்து சிறையில் அடைக்காது. இவர்கள் கைது செய்து, தண்டனை தருவதெல்லாம், சிலர் எதுவும் செய்யாமல் இருக்கத்தான். இதயம் உருகாத, விழிகள் பார்க்கவிழையாத விஷயங்களை இவர்கள் தட்டி எழுப்பிவிடுவார்கள் என்பதால், அரசுகள் ஒருபோதும் இவர்களை விட்டு வைப்பதில்லை."
Aleksandr Solzhenitsyn

84 வயது முதியவரின் மரணம் பெரிதாய் என்ன செய்துவிடும்? ஒன்றும் செய்யாது. ஆனால், நம் தேசம் இன்னும் ஜனநாயகத்துடன் இருக்கிறதா என்பதையே கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கியிருக்கிறது இந்த மரணம்.

Stan swamy
Stan swamy
மனித உரிமை ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 16 பேர் பீமா கோரேகான் வழக்கு தொடர்பாக 2018ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் பலர் சம்பவம் நடந்த இடத்திலும் இல்லை, ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதுகூட இல்லை என்பதுதான் அதிலிருக்கும் அவலம்.

வரவர ராவ் ( 80 வயது), கௌதம் நவ்லகா, வழக்கறிஞர் சுதா பரத்வாஜ் (வயது 60), ஆனந்த் டெல்டும்டே (வயது 70) என இந்தியாவின் அறிவு சார் சமூகத்தைச் சேர்ந்த பலர் இக்கைதில் அடக்கம். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பின் அங்கம் என்றும், பிரதமர் மோடியை கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்றும் கைது செய்யப்பட்டவர்களின் மேல் குற்றச்சாட்டுகள் எக்கச்சக்கம். இவர்கள் சதித்திட்டம் தீட்டி, இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு களங்கம் விளைவித்தார்கள் என்பதும் இவர்கள் மீதான குற்றம். அந்தக் குற்றத்தின் விலைதான் 84 வயதான ஸ்டேனின் இறப்பு. இறப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்னர்தான், "இதுவரையில் ஒருநாள்கூட விசாரணைக் காவலில் வைக்கப்படாத ஸ்டேனை எதற்காக கைது செய்தீர்கள்?" என கேள்வி எழுப்பினார் ஸ்டேன் சுவாமியின் வழக்கறிஞரான மிகிர் தேசாய். இந்தக் கேள்விக்கான விடை, ஸ்டேனுடன் புதைய இருக்கிறது.

Stan swamy
Stan swamy
twitter
"இங்கு பேசமுடியாதவர்கள் என யாரும் இல்லை. அவர்கள் வலுக்கட்டாயமாக ஊமையாக்கப்பட்டவர்கள். அவர்களின் குரல்களுக்கு நாம் செவிமடுக்கத் தேவையில்லை என்று வேண்டுமானால் நாம் அந்த மக்களை வகைமைப்படுத்தலாம்."
என்பார் அருந்ததி ராய்.

ஸ்டேன் லூர்துசாமி போராடியது அந்த மாதிரியான மக்களுக்குத்தான். திருச்சியில் பிறந்த ஸ்டேன், எழுபதுகளில் இறையியல் படித்தவர். சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ரோமன் கத்தோலிக்க பாதிரியரான ஸ்டேன், ஜார்கண்ட் மாநிலம் சென்று பழங்குடியின மக்களுக்காக பல தசாப்தங்களாக போராடிக்கொண்டிருந்தவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் சட்டத்தின் படி சமம்தான். ஆனால், யதார்த்தத்தில் பல் இளிக்கும் இந்த சமமற்ற தன்மையைத்தான் தொடர்ந்து அமைதி வழி போராட்டங்களின் மூலம் கேள்விக்குள்ளாக்கினார் ஸ்டேன்.

ஒரு கட்டத்தில் தேவாலயங்களிலும், அவருக்கு எதிராக போர்க்கொடிகள் தூக்கப்படுகின்றன. மதங்கள் மாறினாலும், இங்கு மனிதர்களுக்குள் இருக்கும் சாதிய அடுக்குகள் ஒழிவதில்லை என்பதை உணர்ந்திருந்தார் ஸ்டேன். சமயங்களில் சர்ச்சுக்கு எதிராகவும் போராடியிருக்கிறார். ஸ்டேன் சம்பாதிக்காத விரோதிகள் கிடையாது. ஸ்டேனைச் சுருக்கமாக 'ஆன்டி நேஷனல்' என வகைப்படுத்தலாம். இந்தியா என்பது ஒரு சாராருக்கு சொர்க்கத்தையும், ஒரு சாராரருக்கு நரகத்தையும் தரும் தேசமாகத்தான் இன்றளவிலும் இருக்கிறது. தொடக்கூடாதவர்களும், காணக்கூடாதவர்களும் இன்னும் சாதிய அடுக்குகளின் வழி இங்கிருக்கிறார்கள். இவர்களின் குரலாக ஒலித்தார் ஸ்டேன்.

ஸ்டேன் சுவாமி
ஸ்டேன் சுவாமி

கைதுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் ஸ்டேன் உதிர்த்த சொற்கள் மிகவும் முக்கியமானவை. "எனக்கு இங்கு நடந்துகொண்டிருப்பது, எனக்கு மட்டுமே பிரத்யேகமாக நடந்துகொண்டு இருப்பவை அல்ல. இந்தியா முழுக்க இது நடந்து கொண்டிருக்கிறது. அறிவுசார் தளத்தில் செயல்படுபவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், போராளிகள் என பலர் சிறைக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் செய்த காரியம், ஆளும் அதிகார வர்க்கத்தின் துஷ்பிரயோகங்களை கேள்விகேட்டதுதான். என்றாலும் நான் அமைதியாக இருக்கப்போவதில்லை. இந்த விளையாட்டிற்கான விலை எதுவாயினும், அதை நான் கொடுக்கத் தயார்."

தவறான குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்துவிட்டோம் என சில மாதங்களுக்கு முன்னர், காஷ்மீரைச் சேர்ந்த ஒருவரை விடுதலை செய்தது நீதிமன்றம். ஆனால், அவர் சிறையில் கழித்தது 11 ஆண்டுகள். தன் வாழ்க்கையின் முக்கியமான 11 ஆண்டுகளை அவர் இழந்திருக்கிறார். ஸ்டேன் சுவாமி, சுதா பரத்வாஜ், வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே என பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட யாருக்கும் 11 ஆண்டுகள் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அவர்களில் சிலர் ஏற்கெனவே வாழ்வின் அந்திமக் காலத்தில்தான் வாழ்கிறார்கள். ஆனால், பேரன் பேத்திகளுடன் ஓய்வு வாழ்க்கையை கொண்டாடாமல், வீதிகளில் போராடிக்கொண்டு இருந்தவர்கள். ஸ்டேன் இனி நம்முடன் இல்லை.

முதுமையில் நோய்களால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல், தனக்கான உணவைக் கைகளால் எடுத்து சாப்பிட முடியாமல், அடுத்தவர் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்கும் திறனையும் இழந்து சிறையில் தவித்த போது, ஸ்டேன் சுவாமிக்கு இடைக்கால ஜாமீன் கேட்கப்பட்டது. "கொரோனா காலத்தை பயன்படுத்தி தப்பித்துக்கொள்ளப் பார்க்கிறார். இந்தக் காரணங்களை எல்லாம் பொருட்படுத்தத் தேவையில்லை" என்றது தேசிய புலனாய்வு அமைப்பு. இதை நீதிமன்றமும் ஏற்றது. மீதம் இருப்பவர்களையாவது உயிர் பிழைக்க வாய்ப்புத் தாருங்கள் என மன்றாடத்தான் முடியும் என்கிற சூழல்தான் இங்கு நிலவுகிறது. உலகில் இருக்கும் அறிவுசார் குழுக்களை எல்லாம் வைத்து, ஸ்டேனுக்கு நீதி கேட்க வேண்டும். நீதித்துறையும், அரசு அதிகாரமும் இணைந்து செய்திருக்கும் இச்செயலின் உண்மைத் தன்மையை வெளிக்கொணர வேண்டும் போன்ற குரல்கள் எல்லாம் எழத்தான் செய்கின்றன. ஆனால், என்றாவது நிகழும் கறுப்பு நாள்களை நாம் கடந்துவிட்டோம் என்பதே யதார்த்தம்.

ஸ்டேன் லூர்து சாமி
ஸ்டேன் லூர்து சாமி

"எல்லாவற்றையும் தாண்டி ஒருவரின் பிறப்பிலும் இறப்பிலும் கண்ணியம் காக்கப்பட வேண்டும்" என்பார் 80 வயதான வரவர ராவ். அறிவுசார் சமூகத்தை மொத்தமாய் கைது செய்து சிறையில் அடைத்த வரலாறுகள் இந்தியாவில் ஔரங்கசீப் காலத்தில் கூட உண்டு. என்ன அப்போதெல்லாம் நாம் ஜனநாயகம் கிடையாது, காலம் எல்லாவற்றையும் மாற்றும். ஆனால், எல்லா மாற்றங்களையும் ஏற்கும் காலம் என்று என்பதுதான் இங்கிருக்கும் கேள்வி.

டைம்லைன்

2018

ஆகஸ்ட் 22: புனே காவல்துறையால், பாதிரியார் ஸ்டேன் சுவாமி மீது குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.

அக்டோபர் 26: கைதுக்கு எதிராக பாதுகாப்பு தருகிறது உயர் நீதிமன்றம்.

டிசம்பர் 14: முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற ஸ்டேன் சுவாமியின் கோரிக்கையை டிஸ்மிஸ் செய்கிறது உயர்நீதிமன்றம்.

2020

அக்டோபர் 8: தேசிய புலனாய்வு முகமை ஸ்டேன் சுவாமியை கைது செய்து தலோஜா மத்திய சிறைக்கு அனுப்புகிறது.

அக்டோபர் 23: சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் ஸ்டேனின் மருத்துவ ஜாமீனை ரத்து செய்கிறது.

நவம்பர் 6: பார்கின்சன் நோயாளியாக இருப்பதால், தண்ணீர் அருந்த ஸ்ட்ராவும், சிப்பர் பாட்டிலும் கேட்டு விண்ணப்பிக்கிறார் ஸ்டேன்.

நவம்பர் 26: தேசிய புலனாய்வு முகமை, தங்களிடம் சிப்பர் பாட்டிலும், ஸ்ட்ராவும் கிடையாது என அறிவிக்கிறது.

டிசம்பர் 4: அவருக்கு ஸ்ட்ராவும், சிப்பரும் தரப்படுகின்றன.

2021

மார்ச் 22: சிறப்பு தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றம் மீண்டும் மருத்துவ ரீதியான ஜாமீனை ரத்து செய்கிறது.

ஏப்ரல் 26: உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு அப்பீல் செய்கிறார் ஸ்டேன்.

மே 4: உயர்நீதிமன்றம், மாநில அரசிடம் ஸ்டேனின் மருத்துவ விவரங்களைக் கேட்கிறது.

மே 21: தன்னால் சாப்பிடவோ, நடக்கவோ இயலவில்லை என உயர்நீதிமன்றத்துக்கு அறிவிக்கிறார் ஸ்டேன்.

மே 28: ஸ்டேனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிடுகிறது உயர் நீதிமன்றம்.

மே 30: ஸ்டேனுக்கு கோவிட் தொற்று இருப்பது தெரியவருகிறது.

ஜூன் 17: மருத்துவ ரீதியிலான உதவிகள் தேவைப்படுவதால், அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் இருக்க உயர்நீதிமன்றம் உத்தரவிடுகிறது.

ஜூலை 4: நெஞ்சு அடைப்பு காரணமாக வெண்டிலேட்டரில் வைக்கப்படுகிறார் ஸ்டேன்.

ஜூலை 5: மதியம் 1 மணியளவில் மரணம் அடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு