Published:Updated:

சத்தியமங்கலம்: கட்டப்படாத பாலம்; மனைவியின் சடலத்தைச் சுமந்தபடி மாயாற்றைக் கடந்த கணவன்!

சடலத்தோடு மாயாற்றைக் கடக்கும் தெங்குமரஹடா மக்கள்
சடலத்தோடு மாயாற்றைக் கடக்கும் தெங்குமரஹடா மக்கள் ( Admin )

சடலத்தைத் தோளில் சுமந்தபடி, பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் மக்கள் இறங்கிச் செல்லும் அந்த வீடியோ பார்ப்போர் நெஞ்சை கனக்கவைக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் தனித்தீவுபோல் உள்ள ஒரு பகுதி தெங்குமரஹாடா ஊராட்சி. இந்த தெங்குமரஹாடா ஊராட்சிக்குட்பட்ட கல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் திவணன் - ராமி தம்பதியர். பழங்குடியினச் சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயக்கூலி வேலை செய்துவந்துள்ளனர்.

இந்தநிலையில், கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ராமி, திடீரென நேற்று முன்தினம் இறந்துவிட்டார். தெங்குமரஹாடா பகுதியிலுள்ள பழங்குடிகளின் வழக்கப்படி, ஒரு பழங்குடி எந்த ஊரில் பிறந்தாரோ, அந்த ஊரில்தான் அவருடைய இறுதிச் சடங்கைச் செய்ய வேண்டும் என்பதை வழக்கமாகக்கொண்டிருக்கின்றனர்.

தெங்குமரஹாடா மக்கள்
தெங்குமரஹாடா மக்கள்

அதன் அடிப்படையில் உயிரிழந்த ராமியை அவருடைய சொந்த ஊரான நீலகிரி மாவட்டம், சோலூர்மட்டம் அருகேயுள்ள கரிக்கூர் கிராமத்துக்குக் கொண்டு செல்வது என அவருடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் முடிவு செய்துள்ளனர். தெங்குமரஹாடாவிலிருந்து ஆர்ப்பரித்து ஓடும் மாயாற்றைக் கடந்து அக்கரைக்குச் சென்றால்தான் ஊர் செல்ல முடியும் என்ற சூழல். வழக்கமாக ஆற்றில் இறங்கி நடந்தும், பரிசல் மூலமாகவும் மாயாற்றைக் கடப்பதுதான் தெங்குமரஹாடா மக்களின் வழக்கம். தற்சமயம் மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றைக் கடக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இருந்தும் பாடை கட்டி ராமியின் சடலத்தைத் தோளில் சுமந்தபடி அவருடைய உறவினர்கள் சிரமப்பட்டு ஆற்றைக் கடந்து மறுகரைக்குச் சென்றனர். அதன் பிறகு அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் மூலமாக ராமியின் சடலத்தை இறுதிச்சடங்குக்காக கரிக்கூர் கிராமத்துக்குக் கொண்டு சென்றனர்.

ராமியின் சடலம்
ராமியின் சடலம்

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்போர் நெஞ்சை கனக்கவைத்தது. இப்படி மருத்துவம், கல்வி, வேலை என பலவற்றுக்கும் தெங்குமரஹாடா மக்கள் ஆபத்தான முறையில் மாயாற்றைக் கடந்துதான் சென்றுவருகின்றனர். மாயாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் வீட்டிலேயே மக்கள் முடங்கிக்கிடக்க வேண்டிய சூழல். இதற்காக கடந்த 35 ஆண்டுகளாக மாயாற்றைக்க் கடக்க பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென தெங்குமரஹாடா மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்துவருகின்றனர். இருந்தும் இதுவரையிலான அரசுகள் இதைச் செய்து கொடுக்கவில்லை. உயிரைப் பணயம்வைத்து மாயாற்றைக்க் கடக்கும் மக்களுக்கு இனியாவது அரசு கருணை காட்ட வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு