Published:Updated:

`திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமானவர் அல்ல!' - கமல்ஹாசன்

``திருவள்ளுவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை'' என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன்
நடிகர் கமல்ஹாசன் ( விகடன் )

திருவள்ளுவர் காவி நிற உடையில் திருநீற்றுப் பட்டையுடன் இருக்கும் ஓவியம் ஒன்று தமிழக பா.ஜ.க ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு பதிவிடப்பட்டது. இந்தப்பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளப்பியது. அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்தனர். சமூக வலைதளங்களில் இதுதொடர்பாக பெரிய விவாதங்களே நடந்து வருகிறது. திருவள்ளுவர் இந்துமதச் சாயல் கொண்டவர் என, இந்துமத ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். வள்ளுவர் மதச்சார்பற்றவர் என்று மற்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகின்றன. இதற்கிடையில் தஞ்சை, பிள்ளையார்பட்டி மெயின் சாலையில் அமைந்துள்ள 5 அடி உயரம் கொண்ட திருவள்ளுவர் சிலையின் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டியதுடன் முகத்தில் சாணம் அடித்துவிட்டுச் சென்றனர்.`திருவள்ளுவருக்கு அவமரியாதை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும்’ என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதையடுத்து, சிலை தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

திருவள்ளுவர் சிலை
திருவள்ளுவர் சிலை

இந்த நிலையில், தஞ்சாவூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் இன்று காவி உடை போர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ருத்ராட்ச மாலை அணிவித்து நெற்றியில் திருநீறு பூசியதோடு, கற்பூரம் ஏற்றி வழிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக அர்ஜுன் சம்பத்தைப் போலீஸார் கைது செய்தனர்.

திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை, ருத்ராட்ச மாலை! -தஞ்சையில் கைதான அர்ஜுன் சம்பத்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது திருவள்ளுவர் விவகாரம் தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்தவர், ``திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக்கொள்ள விரும்புகிறார்கள். திருவள்ளுவர் எந்த மதத்துக்கும் சொந்தமல்ல. அவர் அனைவருக்கும் பொதுவானவர் என்பதுதான் உண்மை. அவருக்கு வண்ணம் பூசத் தேவையில்லை”

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. ``மக்கள் நீதி மய்யம் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. அதற்கான பணிகள் நடந்து வருகிறது” என்றார்.