Published:Updated:

தி.மலை சிப்காட் அமையுமா, அமையாதா? உறுதிப்படுத்தாத அரசு; 110 நாள்களுக்கு மேல் தொடரும் போராட்டம்

சிப்காட் எதிர்ப்புப் போராட்டம்

பக்கத்துல இருக்கிற கவுத்தி மலையைக் குறிவெச்சுதான் இங்க சிப்காட் அமைக்கிறாங்க. மக்கள் போராடினதுக்கு அப்புறம் ஜிண்டால் நிறுவன திட்டம், 8 வழி சாலைத் திட்டத்தை நிறுத்தினாங்க. அது இப்போ சிப்காட்னு உருமாறி வந்திருக்கு.

தி.மலை சிப்காட் அமையுமா, அமையாதா? உறுதிப்படுத்தாத அரசு; 110 நாள்களுக்கு மேல் தொடரும் போராட்டம்

பக்கத்துல இருக்கிற கவுத்தி மலையைக் குறிவெச்சுதான் இங்க சிப்காட் அமைக்கிறாங்க. மக்கள் போராடினதுக்கு அப்புறம் ஜிண்டால் நிறுவன திட்டம், 8 வழி சாலைத் திட்டத்தை நிறுத்தினாங்க. அது இப்போ சிப்காட்னு உருமாறி வந்திருக்கு.

Published:Updated:
சிப்காட் எதிர்ப்புப் போராட்டம்

கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில், 'திருவண்ணாமலை மாவட்டத்தில், சிப்காட் அமைக்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. ஆனால், தொழிற்பேட்டை அமைக்கப்படவுள்ள இடம்குறித்து அரசுத் தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாத நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கு அருகில் உள்ள பாலியப்பட்டு ஊராட்சிப்பகுதி மக்கள் 'தங்கள் பகுதியில் சிப்காட் அமைக்கக் கூடாது' என்று தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருவண்ணாமலை கிரிவலம் சுற்றும் போராட்டம்
திருவண்ணாமலை கிரிவலம் சுற்றும் போராட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலியப்பட்டு பகுதி முழுவதும், சிப்காட்டுக்கு எதிரான போஸ்டர்களும் கறுப்புக்கொடிகளும் நிறைந்து காணப்படுகின்றன. ஊருக்கு மத்தியில் அமர்ந்திருந்த மக்கள் கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசினோம். ``நாங்க விவசாயத்தை நம்பித்தான் வாழ்ந்துகிட்டு இருக்கோம். நெல், மல்லாட்டை, பூ வகைகள்னு விவசாயம் செழிப்பா நடக்கிற பகுதி இது. இந்தப் பகுதியில 1,200 ஏக்கர்ல சிப்காட் அமையப்போறதா 2021, டிசம்பர் 17-ம் தேதி எங்களுக்குத் தகவல் கிடைச்சது. செங்கம் நெடுஞ்சாலை தொடங்கி காஞ்சிரோடு வரைக்கும் 5 ஊராட்சி பகுதிகளை உள்ளடக்கி அமைக்கப்படப்போவதாக வரைபடமும் வெளியாச்சு. அப்படி சிப்காட் வந்துச்சுன்னா கிட்டத்தட்ட 1,000 ஏக்கர் விவசாய நிலமும் 300-க்கும் மேற்பட்ட வீடுகளும் அழியக்கூடிய வாய்ப்பு இருக்கு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பக்கத்துல இருக்கிற கவுத்தி மலையைக் குறிவெச்சுதான் இங்க சிப்காட் அமைக்கிறாங்க. 2008, 2014-ம் வருஷங்கள்ல ஜிண்டால் நிறுவனம் கவுத்தி-வேடியப்பன் மலைகளில் இரும்புத்தாது எடுக்க வந்தாங்க. அதுக்கப்புறம் 8 வழிச்சாலைனு சொன்னாங்க. மக்கள் போராடினதுக்கு அப்புறம் அந்தத் திட்டங்களை நிறுத்தினாங்க. இப்போ சிப்காட்னு உருமாறி வந்திருக்கு.

ஐனா - குட்டி-
மாரிமுத்து - சம்பத்
ஐனா - குட்டி- மாரிமுத்து - சம்பத்

கடந்த டிசம்பர் 31-ம் தேதி ஊர்க்காரங்க சேர்ந்து கலெக்டரை பார்க்கப் போனோம். 10 பேரை மட்டும் அழைச்சு, `அரசாங்கத்துக்கு எதிரா இப்படி பண்ணிக்கிட்டு இருந்தா குண்டாஸில் உள்ள போடவும் தயங்க மாட்டேன். தூத்துக்குடி போராட்டமே நியாயமானதுதான். அதுக்கே அப்படி நடந்தது. இது எப்படி போகும்னு தெரியாது'னு மிரட்டினார் கலெக்டர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனே `சிப்காட் வேணாம்’னு எங்க பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டோம். அன்னைக்கு இரவே சுத்துப்பட்டுல இருக்குற பஞ்சாயத்து தலைவர்களை மிரட்டி `சிப்காட் வேணும்'னு சொல்லித் தீர்மானம் போட வெச்சார், எம்.எல்.ஏ கிரி. அவரையும் நேர்ல போய் நாங்க பார்த்ததுக்கு, `நான்தான் தீர்மானம் போடச் சொன்னேன். பட்டாக்களை நான்தான் கேன்சல் பண்ண சொன்னேன். ஒருசில விவசாயிகள் பாதிக்கப்படத்தான் செய்வாங்க. அதுக்கு என்ன பண்ணறது?'னு சொன்னார்.

ஊர் மத்தியில் வைக்கப்பட்டுள்ள பேனர்
ஊர் மத்தியில் வைக்கப்பட்டுள்ள பேனர்

போளூர்ல ஒரு அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு, `செங்கம் அருகே புதிய சிப்காட் வந்தே தீரும்'னு வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். இவங்க எல்லோரும் இப்படி பேசுறப்போ இங்க சிப்காட் அமையப்போறது உறுதியாகிடுச்சு. சிப்காட் இங்க வந்துச்சுனா, எங்க பஞ்சாயத்துல இருக்கிற 5,000 மக்கள் மட்டுமல்லாமல், சுத்துப்பட்டுல இருக்கிற பஞ்சாயத்து மக்களும் வாழவே முடியாத சூழல் வந்திடும். அதனாலதான் தொடர் போராட்டத்தை நடத்திக்கிட்டுருக்கோம்” என்றனர்.

இம்மக்களுக்காக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்ததோடு, பா.ம.க-வினரும், நாம் தமிழர் கட்சியினரும் போராட்டக் களத்தில் இறங்கியிருந்தனர்.

மக்களின் குற்றச்சாட்டு தொடர்பாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷிடம் விளக்கம் கேட்பதற்கு அச்சமயத்தில் பலமுறை முயற்சி செய்தோம். ஆனால், அவர் பேசவில்லை.

அதைத் தொடர்ந்து, செங்கம் எம்.எல்.ஏ, மு.பெ.கிரி-யிடம் பேசினோம். ``சிப்காட் அமைப்பதற்கு வருவாய்த்துறை மூலம் மூன்று இடங்களைத் தேர்வு செய்திருக்கிறோம். ஆனால், அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. யாருடைய பட்டாவையும் ரத்து செய்யும்படி நான் சொல்லவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் சட்டத்துக்குப் புறம்பாகப் பட்டா வழங்கப்பட்ட நிலங்கள், அனுபவத்துக்கு வராத பட்டாக்களுக்கு உரிய நிலங்கள், விவசாயம் சாராத நிலங்கள், அண்டை மனிதர்கள் அமைத்துள்ள குடில்கள் உள்ள நிலங்கள் போன்றவற்றை கையகப் படுத்தினாலே, கிட்டத்தட்ட 700 ஏக்கர் நிலம் கிடைத்துவிடும்.

எம்.எல்.ஏ., மு.பெ.கிரி - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்
எம்.எல்.ஏ., மு.பெ.கிரி - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

மேலும், அரசு புறம்போக்கு நிலம் 300 ஏக்கர் வரை உள்ளது. அப்படி சிப்காட் அமைந்தால், இந்த நிலத்தில்தான் அமையவிருக்கிறது. அதிகபட்சம் 60 வீடுகள், கொஞ்சம் விவசாய நிலங்கள் ஆகியவைதான் பாதிக்கப்படும். பாதிக்கப்படும் மக்களுக்குச் சேர வேண்டிய முழு இழப்பீட்டை பெற்றுத்தந்து வீடு கட்டித்தரவுள்ளோம். எந்தப்பகுதியாக இருந்தாலும், இது போன்ற திட்டங்கள் வரும்போது, சில பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். என் தூண்டுதலால், எந்த ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றவில்லை" என்றார்.

பின்னர், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிடம் பேசியபோது, ``பா.ம.க-வைச் சேர்ந்த ஒருவரின் தூண்டுதலால்தான், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் ஒரு திட்டத்தை நிறைவேற்றும்போது தேவைப்படும் நிலத்தைக் கையகப்படுத்திதான் ஆக வேண்டும். திருவண்ணாமலை தென்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் நோக்கில்தான் இத்திட்டம் கொண்டுவரப்படுகிறதே தவிர, வேறு உள்நோக்கம் இல்லை. `இங்கு அமைக்கலாம்’ எனப் பரிசீலனைதான் நடக்கிறது. இன்னும் உறுதியாகவில்லை.

அமைச்சர்கள்  தங்கம் தென்னரசு - எ.வ.வேலு
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு - எ.வ.வேலு

நானும் பாலியப்பட்டு எனக் குறிப்பிட்டு போளூரில் பேசவில்லை. செங்கம் தொகுதியில் சிப்காட் கட்டாயம் வந்தே தீரும் என்றுதான் சொன்னேன். எங்களது நோக்கம் சிப்காட் அமைக்க வேண்டும் என்பதுதான், பாலியப்பட்டில்தான் அமைக்க வேண்டும் என்பதல்ல. வேறொரு நல்ல இடத்தை மாவட்ட ஆட்சியர் காண்பித்தால் அங்கு அமைப்போம்” என்றார்.

சிப்காட் அமைப்பதற்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் பாலியப்பட்டுப் பகுதி மக்கள்... சிப்காட் தொடர்பாக RTI மூலம் பதில் அளிக்கும்படி ஒரே நாளில் 424 மனுக்களை அதிகாரிகளிடம் அளிக்கும் போராட்டம், 50 வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், 75 வது நாள் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மலை சுற்றும் போராட்டம், 100வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் மற்றும் தங்கள் பகுதியில் விளைந்த விவசாய பொருள்களை அரசு அதிகாரிகளிடம் சீர்வரிசை போல கொடுக்கும் நூதன போராட்டங்களையும் பல கட்டமாக நடத்தியுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, இந்தப் போராட்டம் தற்போது 110 நாள்களைக் கடந்துள்ளது. அரசு அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ இதுவரையில் தங்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாலும், சிப்காட் தங்களின் பகுதியிலும் விளை நிலங்களை மையப்படுத்தியும் அமைந்துவிடுமோ என்ற அச்சத்தினாலும்... சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அப்பகுதி மக்கள்.

பாலியப்பட்டு மக்களின் பல கட்ட போராட்டங்கள்
பாலியப்பட்டு மக்களின் பல கட்ட போராட்டங்கள்

பாலியப்பட்டு பகுதி மக்களின் தொடர் போராட்டத்தைப் பற்றி தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் விளக்கம் கேட்பதற்காகத் தொடர்புகொண்டோம். அழைப்பு இணைக்கப்படாததால், அவரின் உதவியாளரிடம் பேசினோம். "நீங்கள் கூறும் பாலியப்பட்டு பகுதியில் எந்தத் திட்டமும் இப்போது இல்லை. செய்யாறு தொகுதியில் ஏற்கெனவே சிப்காட் இருக்கிறது. இருப்பினும், மீண்டும் அதே தொகுதியில் உள்ள மேல்மா எனும் ஊராட்சியில்தான் புதியதாக `தொழிற்பூங்கா' அமைய உள்ளது" என்றார்.

வேறு இடத்தில்தான் சிப்காட் அமையப்போகிறது என்றால், போராடும் பாலியப்பட்டு மக்களிடம் `இங்கு சிப்காட் அமையவில்லை' என உறுதி அளிக்காமல்... அச்சத்துடன் மக்கள் போராடுவதை ஏன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அரசு..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism