Published:Updated:

``விவேக் தன் திரைப்படங்களின் வழியே முன்வைத்த அரசியல்...’’ - சொல்கிறார் பிஸ்மி

விவேக்
விவேக்

`` `விவேக்கின் கால்ஷீட் கிடைத்தால் போதும்... நம் படம் சக்சஸ்தான்' என்ற அளவுக்கு அவரது ஆளுமை வளர்ந்திருந்தது. எனவே மக்களுக்கு, தான் சொல்ல நினைத்த அரசியலை துணிச்சலாக எடுத்துவைத்தார்'' என்கிறார் பிஸ்மி.

பத்மஶ்ரீ விருது, சின்னக் கலைவாணர் பட்டம், சுற்றுச்சூழலியலில் பேரார்வம், எழுத்தின் மீதான மோகம், பலகுரல் வித்தையில் தேர்ச்சி, சீர்திருத்தக் கருத்துகளில் நாட்டம்... எனப் பல்வேறு திறமைகளை உள்ளடக்கிய அடையாளங்களோடு தமிழ் மக்களை மகிழ்வித்துவந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் திடீர் மரணம் தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்கவைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில், நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, மதுரையில் பட்டப்படிப்பு முடித்து சென்னை தலைமைச் செயலக அரசுப் பணியில் ஈடுபட்டுவந்த விவேகானந்தனுக்கு, திரைப்படத்துறை மீது தீராக் காதல். இயக்குநர் சிகரம் கே.பாலச்சந்தரின் அறிமுகத்தில் 80-களின் இறுதியில் திரைத்துறைக்குள் அடியெடுத்துவைத்த விவேகானந்தன் என்ற விவேக், நகைச்சுவை நடிப்பில் தனக்கென தனி பாணியை வகுத்துக்கொண்டார். 90-களுக்குப் பிறகு நகைச்சுவை நடிகராக ஏறுமுகம் கண்டவர், தான் மறைகிறவரையிலும் தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி நகைச்சுவை நடிகராகவே வலம்வந்திருப்பது, அவரது தனித்துவமான திறமை!

விவேக்
விவேக்

ஆன்மிக நம்பிக்கைகொண்டவராகவே இருந்துவந்தாலும் சாதி, மத மூடநம்பிக்கைகளில் மூழ்கிக்கிடந்த மக்களின் சிந்தனையைத் தட்டியெழுப்பும்விதமாக தனது நகைச்சுவைக் காட்சிகளின் வழியே சமூக சீர்திருத்தக் கருத்துகளையும் பரப்பிவந்தார். மக்களின் அறியாமையைக் களைய நினைத்த அவரது சிந்தனைக்காகவே `சின்னக் கலைவாணர்' பட்டமும் அவரை வந்தடைந்தது.

மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் மீது பேரன்பும் பெருமதிப்பும்கொண்ட விவேக் `கிரீன் கலாம்' என்ற பெயரிலேயே அமைப்பு ஒன்றைத் தொடங்கி, சுற்றுச்சூழலியல் குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்திவந்தார். ஒரு கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதை வாழ்நாள் லட்சியமாக வரித்துக்கொண்டு களமாடியவரை 33 லட்சம் மரக்கன்றுகள் நட்டு முடிப்பதற்குள் காலம் களவாடிவிட்டது.

தமிழ்த் திரைத்துறையில், கலைவாணர், எம்.ஆர்.ராதா போன்ற பெரும் ஜாம்பவான்களுக்குப் பிறகு நகைச்சுவையோடு மக்களுக்கான விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்பியவர் என்ற பெருமை விவேக்கின் தனிச்சிறப்பு. அந்தவகையில் நடிப்புலகின் மூலம் நடிகர் விவேக் முன்வைத்த அரசியல் கருத்துகள் குறித்து அவரது நண்பரும், சினிமா - அரசியல் விமர்சகருமான பிஸ்மி நம்மிடம் பேசியபோது, ``வழக்கமான கூத்தடிப்புகளும், அடுத்தவரை அவமரியாதையாகத் திட்டுவதுமே தமிழ்ச் சினிமாக்களின் காமெடியாக இருந்துவந்த நிலையில், நடிகர் விவேக்கின் வருகைக்குப் பிறகு அது மாற ஆரம்பித்தது. அதாவது, நகைச்சுவையின் வழியாகவும் மக்களுக்கான கருத்துகளை கொண்டுசேர்க்க முடியும் என்று நிரூபித்தவர் விவேக்.

பிஸ்மி
பிஸ்மி

சமூக விழிப்புணர்வு கருத்துகளைத் திரைப்படம் வழியே எடுத்துச் சொல்லும்போது அது மக்களை எரிச்சலூட்டும்விதமாக அமைந்துவிடக் கூடாது. அந்தவகையில் மக்களே விரும்பக்கூடிய வகையில் சமூக, அரசியல் சார்ந்த சீர்திருத்த கருத்துகளை எளிமையான நகைச்சுவைக் காட்சிகளின் வழியாகவே கடத்துகிற தனித்திறமை விவேக்குக்கு எளிதாகக் கைகூடியது. மக்களிடையேயும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, தொடர்ந்து தனது எல்லா படங்களிலும் இதே பாணியைத் தொடர ஆரம்பித்தார்.

`விவேக்கின் கால்ஷீட் கிடைத்தால் போதும்... நம் படம் சக்சஸ்தான்' என்ற அளவுக்கு அவரது ஆளுமை வளர்ந்திருந்தது. அதனால்தான் மக்களுக்கு, தான் சொல்ல நினைத்த அரசியலை துணிச்சலாக எடுத்துவைத்தார். அவரது சில கருத்துகளில் சிலருக்கு உடன்பாடு இல்லையென்றாலும்கூட, அதற்காகத் தன்னை சமரசம் செய்துகொள்ளாமல் மக்களுக்கான நல்ல விஷயங்களைத் தொடர்ந்து சொல்லிவந்தார். அதேசமயம், தொழிலில் தன்னை நம்பிப் பணம் போட்டவர்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதிலும் மிகுந்த அக்கறை செலுத்துவார்.

விவேக்
விவேக்

ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து நின்றுகொண்டு, நகைச்சுவைக் காட்சியை மெருகேற்றுகிறேன் என்ற பெயரில் நேரத்தை வீணடிப்பவர்களுக்கு மத்தியில், விவேக் வித்தியாசமானவர். நாளை நடிக்க வேண்டிய காட்சிக்குரிய வசனங்களை முந்தைய நாளே வாங்கிக்கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார். அங்கே காட்சிக்கான ரிகர்சல் செய்வதில் ஆரம்பித்து, ஸ்க்ரிப்டில் என்னென்ன மாற்றங்கள் செய்தால் காட்சி இன்னும் நன்றாக வரும் என்பதையெல்லாம் யோசித்து எழுதிக்கொண்டு வருவார்.

காட்சியின் கரு சிதையாமல் அவர் செய்திருக்கும் மாற்றங்களுக்கு இயக்குநரின் ஒப்புதலையும் வாங்கிக்கொண்டு மிகச்சிறப்பான காட்சியாக நடித்துக்கொடுப்பார். இன்னும் சில நேரங்களில், தனக்கு வழங்கப்பட்டிருக்கும் காட்சியைக்கூட, `இந்தக் காட்சியில் இந்த வசனத்தை இவர் பேசினால்தான் நன்றாக வரும்' என்று சக நடிகருக்கு விட்டுக்கொடுத்து நடிக்கும் மனப்பாங்கும் அவருக்கே உரித்தான சிறப்பான பண்பு.

விவேக்
விவேக்

லட்சக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்துவந்த, சூழலியல் குறித்த அவரது அக்கறை - ஆர்வம் குறித்து இன்றைக்குப் பலரும் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மரத்துக்காக இவ்வளவு அக்கறைப்படுகிற அந்த மனுஷன் மனிதர்கள் மேல் எத்தனை அன்புவைத்திருந்தார் என்று எனக்கு நன்றாகத் தெரியும்.

சென்னை: இசைப் பயிற்சிக்கு வந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை! - புல்லாங்குழல் ஆசிரியருக்குச் சிறை

திரையில் மட்டுமல்லாமல், நிஜ வாழ்க்கையிலும் சக நடிகர்களின் கஷ்ட நஷ்டங்களில் தானே முன்வந்து உதவி செய்தவர். `துள்ளாத மனமும் துள்ளும்' படத்தில் நடித்துப் புகழ்பெற்றிருந்த பாரி வெங்கட் என்ற புதுமுக நடிகர் சாலை விபத்தொன்றில் அகால மரணமடைந்துவிட்டார். ஏழ்மை நிலையிலிருந்த அவரது குடும்பத்துக்கு உதவ நினைத்த விவேக், தனக்குத் தெரிந்த பிரபலங்களிடமெல்லாம் பாரி வெங்கட்டின் குடும்பநிலையை எடுத்துச்சொல்லி, ஒரு பெரும் தொகையைத் திரட்டி பாரி வெங்கட்டின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

விவேக்
விவேக்

தன்னுடன் பணிபுரியும் நடிகர்களுக்கு உதவுவதைக்கூட சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், திரைத்துறைக்கு அப்பால், சமூக அளவிலும் அவர் எண்ணற்ற உதவிகளைச் செய்திருக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு ஏழை வீட்டுப் பெண்மணியின் மகன் சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவச் சிகிச்சையில் இருந்தபோது, அது குறித்த செய்தியை என் யூடியூப் சேனலில் பதிவு செய்திருந்தேன். அந்த வீடியோவைப் பார்த்த உடனேயே எனக்கு போன் செய்து பேசிய விவேக், `என்னால் நேரில் வர இயலாது. அந்தப் பையனின் மருத்துவச் செலவுக்காக 50,000 ரூபாயை உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன். நீங்களே சென்று கொடுத்துவிடுங்கள்' என்று கூறி பணத்தை அனுப்பிவைத்தார்.

பெ.மணியரசனுக்குத் தொடர்ந்து கொலை மிரட்டல்; வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு! - என்ன நடந்தது?

சாதி, மத பேதமற்ற சமத்துவ சமுதாயம் குறித்த எண்ணம் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு. அந்தவகையில்தான், தனக்குக் கிடைத்த சினிமா வாய்ப்புகளின் வழியே தன் கருத்துகளை மிக உறுதியாக எடுத்துவைத்தார். இதனால், குறிப்பிட்ட பிரிவினர் அவர்மீது குறைபட்டுக்கொண்டாலும்கூட, எந்தவொரு சூழலிலும் குறிப்பிட்ட மதம், சாதி மீது அவருக்கு தனிப்பட்ட காழ்ப்பு என்று எதுவும் கிடையாது. ஒட்டுமொத்த சமுதாய நலன் கருதி, தான் சொல்ல வந்ததை எந்தவித சமரசமுமின்றி தன் வாழ்க்கையின் கடைசி நாள்வரையிலும் எடுத்துச் சொல்லிவிட்டே சென்றிருக்கிறார் விவேக்'' என்கிறார் கலங்கும் கண்களோடு.

தாயார் மணியம்மாளுடன் விவேக்
தாயார் மணியம்மாளுடன் விவேக்

தனிப்பட்ட வாழ்க்கையில், ஆன்மிக நம்பிக்கைகொண்டவராக இருந்தாலும்கூட சமூகத்தில் புரையோடிக்கிடந்த சாதி - மத மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்துகளைப் பரப்புவதிலும், மக்கள் மனதில் பதியவைப்பதிலும் எப்போதுமே முன்னணியில் நிற்கிறார் இந்த மாபெரும் கலைஞன்!

அடுத்த கட்டுரைக்கு