Published:Updated:

`கதகளிக்கு மேடை; கரகாட்டத்துக்கு நடுரோடா?'- கொந்தளித்த டி.எம்.கிருஷ்ணா - ஜின்பிங் சந்திப்பில் நடந்தது என்ன?

மேடையில் பரதநாட்டியத்துடன் கேரளத்தின் கதகளி, மோகினி ஆட்டம், ஆந்திராவின் குச்சுபுடி ஆகியன இடம்பெற்றாலும் தமிழக மண்சார்ந்த கலைநிகழ்ச்சிகள் இடம்பெறவில்லை.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் நரேந்திர மோடியுடனான இரண்டு நாள் முறைசாரா சந்திப்புக்காக சென்னை மாமல்லபுரத்துக்கு நேற்று முன்தினம் வருகை தந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்த அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துடன் இணைந்து வரவேற்றனர்.

நரேந்திர மோடி - ஜி ஜின்பிங்... வந்தது முதல் சென்றது வரை!

விமானத்திலிருந்து இறங்கிய அவருக்கு தமிழகக் கலைஞர்கள் ஒயிலாட்டம், பறையாட்டம், துடும்பாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள் ஆடி தங்களது கலையை வெளிப்படுத்தி வரவேற்பளித்தனர். ஒவ்வொரு ஆட்டத்தையும் பொறுமையாக நின்று ரசித்துவிட்டு அவர்களுக்கு கையசைத்துவிட்டு அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலுக்குப் புறப்பட்டார் சீன அதிபர்.

மதிய உணவுக்குப் பிறகு, அங்கிருந்து மாமல்லபுரம் சென்ற ஜின்பிங்குக்கு இரவு மாமல்லபுரத்தில் கலைவிருந்து படைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இருநாட்டுத் தலைவர்கள் பார்க்க மேடையில் பரதநாட்டியக் கலைஞர்கள் இணைந்து நடனமாடினார்கள்.

Modi - Xi
Modi - Xi

கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகள் இடம்பெறும் என்கிற அறிவிப்பு மேடையில் வெளியானதும் பரதநாட்டியத்துடன் கேரளத்தின் கதகளி, மோகினி ஆட்டம், ஆந்திராவின் குச்சுபுடி ஆகியன இடம்பெற்றாலும் ஏனோ தமிழக மண்சார்ந்த கலைநிகழ்ச்சிகள் ஒன்றுகூட இடம்பெறவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேற்றைய நிகழ்வு குறித்துத் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விமர்சனம் செய்திருந்த பாடகர் டி.எம்.கிருஷ்ணா,

T.M.Krishna Facebook post
T.M.Krishna Facebook post
“செய்தித் தொலைக்காட்சிகளில் நான் பார்த்தவற்றிலிருந்து சில விஷயங்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கலையிலும் கலைஞர்களிலும் சாதிய ஒடுக்குமுறை ஆழமாகியிருப்பதை நேற்றைய மோடி-ஜின்பிங் சந்திப்பில் என்னால் உணர முடிந்தது. நாட்டியக் கலைஞர்களுக்கு மேடையில் ஆட இடம் அளிக்கப்படுகிறது. ஆனால், நாட்டுப்புறக் கலைஞர்கள் விமான நிலையச் சாலையில் ஆட வைக்கப்படுகிறார்கள். அதுதவிர நாதசுவர மற்றும் தவில் இசைக்கலைஞர்கள் சோழா ஹோட்டலின் வாசலில் எழுப்பப்பட்டிருந்த மேடையில் உச்சிவெயிலில் ஜின்பிங்குக்காகக் காத்துக்கிடந்தார்கள். இது இன்று நேற்று நடப்பதல்ல, பல ஆண்டுக்காலமாக நடந்து வருகிறது. நாம் இதைத்தான் தமிழர்களின் பண்பாடாகக் கொண்டாடி வருகிறோம். நாம் பண்பாடு என்கிற பெயரில் சாதியத்தைதான் கொண்டாடிவருகிறோம். நான் சொன்னது ஏதேனும் விடுபட்டிருந்தால் எனக்குச் சுட்டிக்காட்டவும். பின்குறிப்பு: பரதநாட்டியக் கலைஞர்களும் விமானநிலையத்தில் இருந்தார்களே என்று என்னிடம் சிலர் கேட்கிறார்கள். இருந்தும், நான் முன்வைக்கும் கேள்விக்கான பதில் இது இல்லை.
இப்படிக்கு, டி.எம்.கிருஷ்ணா

என்று குறிப்பிட்டிருந்தார். அவரது பதிவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல கருத்துகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவரை `அர்பன் நக்சல்' என்றும், வீணாக எதிர்மறை எண்ணங்களை மக்கள் மனதில் விதைக்கிறார் என்றும் ஒரு சிலர் குறிப்பிட்டிருந்தார்கள். தமிழ்க் கலைஞர்கள் மட்டுமல்ல, பரதநாட்டிய கலைஞர்களும் சாலைகளில் ஆடினார்கள் என நிகழ்வு சார்ந்த புகைப்படங்களை ஆதாரமாகச் சிலர் முன்வைத்தனர்.

`சென்னையில் படிப்பு; முதன்மை செயலாளர் பணி!’ - மோடி, ஜின்பிங் சந்திப்பில் இருந்த தமிழர் மதுசூதன்

வேறு சிலர் கிருஷ்ணா சொல்வது சரியென்கிற போக்கிலும் கருணாநிதி முதல்வராக இருந்த காலகட்டத்தில் அனைத்து கலைஞர்களும் சாதியப் பாகுபாடின்றி மேடையேற்றப்பட்டார்கள். ஆனால், தற்போது இருக்கும் மத்திய மாநில அரசுகளிடம் அந்தச் சிந்தனையை எதிர்பார்க்க முடியாது என்பது போலவும் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதுகுறித்து ’தி கேஸ்ட்லஸ் கலெக்டிவ்’ குழுவின் இசை ஒருங்கிணைப்பாளர் இசைக்கலைஞர் தென்மா சில கருத்துகளை நம்மோடு பகிர்ந்தார்.

இசைக்கலைஞர் தென்மா
இசைக்கலைஞர் தென்மா

"இந்தப் பாகுபாடு பல ஆண்டுக்காலமாக இருந்துவருகிறது. கர்நாடக இசை வட்டாரத்திலிருந்து ஒருவர் இந்தச் சாதியப் பாகுபாடு பற்றிப் பேசுவது காலத்தின் தேவை. அவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரே மாதிரியாக ஊக்கத்தொகை அளிக்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். ஆனால், இது மாறியதாகத் தெரியவில்லை. இங்கே எல்லாமும் நவீனமடைந்துவிட்டதைப் போலத் தீண்டாமையும் நவீனமடைந்துவிட்டது. உதாரணத்துக்கு அண்மைக்காலமாக வடசென்னை மக்களை வைத்துப் ’புள்ளிங்கோ’ என மீம்களும் செய்திகளும் வீடியோக்களும் டிரெண்டாகி வருகின்றன. வடசென்னையில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைப்பதுகூட ஒருவகை ஒடுக்கும் சிந்தனைதான். எங்களைச் சந்திக்க வரும் சிலர் மிகவும் கஷ்டப்பட்டு எங்களிடம் சென்னைத் தமிழில் பேசுவார்கள், நான் ஆங்கிலத்தில் பேசத் தொடங்கியதும் எங்களுக்கு ஆங்கிலம் எல்லாம் தெரியுமா? என்கிற ரீதியில் அவர்களது பார்வை இருக்கும். கானா பாடகர்கள் என்றால் இப்படித்தான் அவர்களுக்கு இதுதான் இடம் என்கிற வகையிலான சிந்தனைப்போக்கு இந்த மக்களிடம் இன்னும் மாறவில்லை என்பதன் வெளிப்பாடே இது. இதுபோன்ற கலைசார்ந்த ஒடுக்குமுறைகள் குறித்து விவாதித்தால் மட்டுமே இதிலிருந்து நமக்கு விடுதலை கிடைக்கும்” என்று கூறினார்.

ஆனால், இப்படியான வேறுபாடு தற்போது இல்லை என்று மறுக்கிறார் நாட்டியக் கலைஞர் நர்த்தகி நட்ராஜ். அவர் கூறுகையில்,

நாட்டியக் கலைஞர் நர்த்தகி
நாட்டியக் கலைஞர் நர்த்தகி

”ஒரு நாட்டியக் கலைஞராக நான் பட்டபாடுகளும் மேற்கொண்ட போராட்டங்களும் எல்லோருக்குமே தெரியும். எனக்கான கதவுகள் எளிதாகத் திறக்கப்படவில்லை. மிகவும் போராட வேண்டியிருந்தது. ஆனால், தற்போது சூழல் அப்படியில்லை; நிறைய மாறிவிட்டது. நிகழ்த்துக் கலைகள் பல மேடையில் அரங்கேற்றப்படுகின்றன. இருந்தும் நாட்டியக் கலைஞர்கள் உட்பட பல கலைஞர்களைச் சாலையில் நிற்கவைத்து ஆட வைத்தது ஏற்புடையதாக இல்லை. நிகழ்த்துக்கலைகள் நமது வாழ்வோடு ஒன்றியது, நமது வாழ்வியலின் கொண்டாட்டங்களின் வெளிப்பாடு. ஆனால், நாட்டியக் கலை அப்படியில்லை சில இலக்கணங்களை உள்ளடக்கியது. அதற்கான அவதானிப்புகள் தேவை. அப்படியிருக்க அதைப் போகிற போக்கில் சாலையில் ஆடச் சொல்லுவது நெருடலாக இருந்தது” என்றார்.

இசைக்கலைஞர் கிருஷ்ணாவின் கேள்விகள் நாமே நமக்குக் கேட்டுக்கொள்ள வேண்டியவை. மண்சார்ந்த கலைகள், பரதநாட்டியம் மற்றும் இதர கலைகளைப்போல அணுகப்படுவதில்லையா? உங்கள் கருத்து என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு