Published:Updated:

“அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது”

அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ஜெயக்குமார்

தெறிக்கவிடும் டி.என்.பி.எஸ்.சி!

“அமைச்சருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்காது”

தெறிக்கவிடும் டி.என்.பி.எஸ்.சி!

Published:Updated:
அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
அமைச்சர் ஜெயக்குமார்

டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் நடைபெறும் அடுத்தடுத்த திருப்பங்களால் தமிழகமே அதிர்ந்துபோயுள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ள சூழலில், டி.என்.பி.எஸ்.சி-யைக் கட்டுப்படுத்தும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை அமைச்சரான ஜெயக்குமார்மீதும் குற்றச்சாட்டுகள் எழுப்பப் படுகின்றன.

2019 செப்டம்பரில் நடைபெற்ற குரூப்-4 தேர்வில், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது சி.பி.சி.ஐ.டி விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூரைச் சேர்ந்த காவலர் சித்தாண்டி என்பவரும், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரும் இந்த மோசடியில் இடைத் தரகர்களாகச் செயல்பட்டு நூற்றுக்கணக் கானவர்களுக்கு பணியிடங்கள் பெற்றுத் தந்திருப்பதையும், இதற்காக கோடிக்கணக்கில் பணம் வசூலித் திருப்பதையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கண்டுபிடித்தனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ரகசியமாக விசாரிக்கப்படும் சித்தாண்டி!

சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடுவதைத் தொடர்ந்து, சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றிய எஸ்.ஐ-யான சித்தாண்டி, குடும்பத்துடன் தலைமறைவானார். காரைக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய அவரின் தம்பி வேல்முருகனைக் கைதுசெய்த போலீஸார், அவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தனர். வேல்முருகன் அளித்த தகவலின் அடிப்படையில், மேலும் சிலரை சி.பி.சி.ஐ.டி தூக்கியது.

இந்த நிலையில், சென்னைக்கு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்றில் சிகிச்சையில் இருந்த சித்தாண்டியை, சில தினங்களுக்கு முன்னர் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்ததாகக் கூறப்படுகிறது. ரகசிய இடத்தில் விசாரிக்கப்படும் அவர், தன்னோடு தொடர்பில் இருந்த டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்கள் மற்றும் தேர்வாணைய அதிகாரிகளின் பெயர்களைக் கூறியுள்ளதாகவும், மாவட்டவாரியாக தன்னால் பணி பெற்றவர்களின் பட்டியலை ஒப்பித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சித்தாண்டியிடமிருந்து முழுமையான தகவல்கள் கிடைத்து மேலும் சிலரை கைதுசெய்த பிறகே, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி முடிவெடுத்துள்ளதாம். இதனிடையே, இடைத்தரகர் முகப்பேர் ஜெயக்குமாரைத் தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார், அவரின் புகைப்படத்தை போஸ்டர் அடித்து, தேடப்படும் குற்றவாளியாக தமிழகம் முழுவதும் ஒட்டியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தலைமறைவு அதிகாரிகள்

டி.என்.பி.எஸ்.சி-யைச் சேர்ந்த நேர்மையான சில அதிகாரிகள் நம்மிடம் பேசுகையில், ‘‘டி.என்.பி.எஸ்.சி-யில் முறைகேடாக பணி பெற்றவர்கள் அனைவரும் கடும் பதற்றத்தில் இருக்கின்றனர். மாவட்டம்தோறும் இருந்த இடைத்தரகர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டனர். தர்மபுரி, திருச்சி, தூத்துக்குடியைச் சேர்ந்த சில பெண் இடைத்தரகர்கள் இணைந்து, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள கிருஷ்ண கடவுளின் பெயர்கொண்ட இடைத்தரகரின் கெஸ்ட் ஹவுஸில் பதுங்கியிருப்பதையும் சி.பி.சி.ஐ.டி கண்டறிந்துள்ளது. குறிப்பாக, 2017 குரூப்-2ஏ தேர்வில் வெற்றிபெற்று பணியில் இருக்கும் 26 அதிகாரிகள் தலைமறைவாகி விட்டது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அவர்களை சி.பி.சி.ஐ.டி விசாரிக்கும்பட்சத்தில், பல இடைத்தரகர்களும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த தேர்வாணைய அதிகாரிகளும் நிச்சயம் சிக்குவார்கள்’’ என்றனர்.

கசிந்த வினாத்தாள்கள்

2011-ம் ஆண்டில் அ.தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கு வினாத்தாள் அச்சடிக்கும் பணி, விண்ணப்பங்களை ஸ்கேன் செய்யும் பணி ஆகியவை, பூந்தமல்லியைச் சேர்ந்த மூன்றெழுத்து தனியார் நிறுவனத்திடம் டெண்டர் முறையில் அளிக்கப்பட்டது. சிவகங்கையைச் சேர்ந்த செல்வமான அ.தி.மு.க பிரமுகர் இந்த நிறுவனத்தை நடத்துகிறார். பொதுவாக தேர்வுகளுக்கு கேள்வித்தாள்கள் அச்சடிக்கப் படும்போது, பயணத்தின்போது சிதலமடையும் கேள்வித்தாள்களை மாற்றுவதற்காக கூடுதலாக பத்து சதவிகிதத் தாள்கள் அச்சடிக்கப்படும். அப்படி அச்சடிக்கப்பட்ட கூடுதல் கேள்வித் தாள்கள் இந்த நிறுவனத்திலிருந்து இடைத் தரகர்களுக்குச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தயாநிதி மாறன்
தயாநிதி மாறன்

2012, ஆகஸ்ட் 12-ல் நடைபெற்ற குரூப்-2 தேர்வின்போது பூந்தமல்லி நிறுவனத்தின்மீது புகார் எழுந்ததால், அப்போது ஆணையத்தின் செயலாளராக இருந்த உதயச்சந்திரன், நான்கு பேர்களிடமிருந்து கேள்விகளைப் பெற்று, தானே கைப்பட ஒரு கேள்வித்தாளைத் தயாரித்து கொல்கத்தாவில் உள்ள அச்சகத்தில் அச்சடிக்கக் கொடுத்தார். அவ்வளவு ரகசியமாக அச்சடிக்கப்பட்ட வினாத்தாளும் ஈரோட்டி லுள்ள ஒரு தேர்வு மையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்தப் புகார் தொடர்பாக கொல்கத்தா அச்சகத்தின் உரிமையாளர் ரிஷிகேஷ் குண்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். அப்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில், ஜெயக்குமாரும் சித்தாண்டியும் தனது கொல்கத்தா அச்சகத்துக்கு நேரில் வந்து கேள்வித்தாளைப் பெற்றுத் திரும்பியதாகக் கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடிப்படையாகக்கொண்டு ஜெயக்குமார், சித்தாண்டி இருவரையும் அப்போதே ஏன் கைது செய்யவில்லை என்பது விடை தெரியாத கேள்வி.

இதற்கிடையே, ‘‘அமைச்சர் ஜெயக்குமார், தார்மிகரீதியாக தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ள தி.மு.கழக எம்.பி-யான தயாநிதி மாறனிடம் பேசினோம். ‘‘மத்தியப்பிரதேசத்தை உலுக்கிய வியாபம் ஊழலுக்கும்மேலான ஊழல் தமிழகத்தில் நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு மட்டங்களில் அதிகாரிகள் இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்டிருக்கும்போது, துறையின் அமைச்சரான ஜெயக்குமாருக்குத் தெரியாமல் இந்த மோசடிகள் எதுவும் நடந்திருக்காது. எத்தனையோ மாணவர்கள் அரசாங்க உத்தியோகக் கனவோடு தேர்வு எழுதுகின்றனர். அவர்களின் லட்சியங்களை இந்த அரசு கேலிக்கூத்தாக்கிவிட்டது. புதுப்புது டெக்னிக்கைப் பயன்படுத்தி விஞ்ஞானபூர்வமாக முறைகேட்டை அரங்கேற்றுகின்றனர்.

எங்கள்மீது குற்றச்சாட்டு முன்வைத்தபோது, அதற்கு தார்மிகப் பொறுப்பேற்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தோம். நாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்பதை நீதிமன்றம் மூலம் நிரூபித்துள்ளோம். மடியில் கனம் இல்லையென்றால் ஜெயக்குமார் ஏன் பயப்படுகிறார்? பதவியை ராஜினாமா செய்துவிட்டு விசாரணையைச் சந்திக்க வேண்டியதுதானே!’’ என்றார் சூடாக.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

இந்த நிலையில் இந்த விவகாரம்குறித்து செய்தியாளர்களிடம் பேசியிருந்த அமைச்சர் ஜெயக்குமார், ‘‘அரசியல் ஆதாயத்துக்காக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின் றனர். டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் எவ்வளவு பெரிய பொறுப்பில் யார் இருந்தாலும் அவர்கள் சட்டத்துக்கு உட்பட்டவர்கள்தான். அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று விளக்கமளித் துள்ளார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக விளக்கமறிய, அமைச்சர் ஜெயக் குமாரைத் தொடர்பு கொண்டோம். “இது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. நான் தவறு செய்தேன் என்பதற்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தில் நிரூபிக்கட்டும். இதுபோன்ற புரளிகளைக் கிளப்பிவிடுபவர்களை உள்ளே தள்ளாமல் விடமாட்டேன். தயாநிதி மாறன் என்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைக் கூறினார். அரசுரீதியாக அவர்மீது வழக்கு தொடுக்கத் தயாராகிவருகிறேன். என்மீது பொய்ப் புகார்களைக் கிளப்புவது யாராக இருந்தாலும் அவர்கள் சிறைக்குச் செல்வது நிச்சயம்” என்று கொந்தளித்தார்.

தலைமறைவான ஜெயக்குமார்
தலைமறைவான ஜெயக்குமார்

‘‘ஊருக்கு ஊர் போஸ்டர் அடித்து இடைத்தரகர் முகப்பேர் ஜெயக்குமாரை பெரிய மாஃபியா டான் போல் சித்திரிக்க முயல்கின்றனர். அவரைக் கைதுசெய்துவிட்டால் டி.என்.பி.எஸ்.சி ஊழல்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிடும் என்கிற தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்கின்றனர். இடைத்தரகர் முகப்பேர் ஜெயக்குமார், சித்தாண்டியுடன் இந்த முறைகேடு விசாரணை முடிந்துபோய்விடக் கூடாது’’ என்று நேர்மையான சில அதிகாரிகள் நம்மிடம் வேதனைப்பட்டனர்.

‘‘இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே, லட்சக்கணக்கான இளைஞர்களின் லட்சியக் கனவு, ஊழல் பெருச்சாளிகளால் அரிக்கப்படுவது தடுக்கப்படும்’’ என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.

***

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பங்கு!

பொதுவாகவே இதுபோன்ற முறைகேடுகளில் அதிகாரத்திலிருக்கும் மக்கள் பிரதிநிதிகள்மீதும் புகார் கிளம்பும். இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், ‘‘டி.என்.பி.எஸ்.சி நடத்தும் தேர்வுகளில், மக்கள் பிரதிநிதிகள் பலருக்கும் கோட்டா முறைப்படி சட்டவிரோதமாக பணியிடங்கள் ஒதுக்கப்படும். அந்த வகையில், குரூப்-4 தேர்வில் மொத்தமிருந்த 9,398 பணியிடங்களில் 600 பணியிடங்கள் மக்கள் பிரதிநிதிகள் சிலருக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பணியிடத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு, 30 கோடி ரூபாய் வரை அவர்கள் சுருட்டிவிட்டதாகத் தெரிகிறது. 2011-ம் ஆண்டு முதல் இதுவரை தேர்வாணைய உறுப்பினர்களாக இருந்தவர்கள்மீதும் விசாரணை நடத்தப்பட்டால், பல பூதங்கள் கிளம்பும்’’ என்றார்கள்.

இவர்கள் என்ன சொல்கின்றனர்?

சி.பாலகிருஷ்ணன், சி.பி.எம்: ‘‘இது வெறும் கீழ்நிலை அதிகாரிகள் மட்டும் செய்யும் தவறல்ல. உயர் அதிகாரிகளுக்கும் பல அமைச்சர்களுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்புள்ளது. தகுதியுள்ள எத்தனை பேர் இதனால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்திலும் ஊழல் புரையோடிப்போயுள்ளது. இந்த முறைகேட்டை சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும்.’’

தாம்பரம் நாராயணன், அ.ம.மு.க: ‘‘எல்லாத் துறைகளிலும் எட்டு சதவிகிதம் அளவுக்குக் கொள்ளையடிக்கும் இந்த அரசு, சாமானிய மாணவர்களின் லட்சியத்திலும் வயிற்றிலும் சேர்த்து அடிக்கிறது. எல்லாவற்றிலும் முந்திக்கொண்டு கருத்து சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் மழுப்பலாகப் பேசுவது ஏன்?’’

சி.பாலகிருஷ்ணன் - தாம்பரம் நாராயணன் - மெளரியா - வன்னியரசு
சி.பாலகிருஷ்ணன் - தாம்பரம் நாராயணன் - மெளரியா - வன்னியரசு

மெளரியா, மக்கள் நீதி மய்யம்: ‘‘இந்த முறைகேடு விசாரணை சரியான கோணத்தில் நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்றால், பாரம்பர்யமிக்க டி.என்.பி.எஸ்.சி மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்.’’

வன்னியரசு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: ‘‘சர்ச்சைக் குள்ளாகியுள்ள டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை ரத்துசெய்துவிட்டு, புதிய தேர்வுகளை நடத்திட வேண்டும். சாமானிய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமையைத் தடுப்பது அதிகரித்துவிட்டது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிப்படும்.’’

குரூப் 1 தேர்விலும்...

கடந்த குரூப் 1 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த பெண், முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை, வணிகவரித் துறையில் முக்கிய அதிகாரியாக இருக்கிறார். தேர்வில் வெற்றி பெற்ற பலரும் அரசு உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளின் வாரிசுகள். அமைச்சர் ஒருவரின் மருமகளும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறார். தேர்வில் வெற்றி பெற்ற பட்டாசு நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் டி.எஸ்.பி-யாக இருக்கிறார்.

இதுபற்றியெல்லாம் கவலை பொங்கப் பேசும் சமூக ஆர்வலர்கள் சிலர், “இவர்களுடைய தேர்ச்சிகுறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். அதேபோல், மதுரையில் அரசியல் பிரமுகர் ஒருவரின் பின்னணியில் செயல்படும் கோச்சிங் சென்டரில் படித்த சிலர், கடந்த குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகச் சொல்கின்றனர்.

இதுகுறித்தெல்லாம் விரிவான விசாரணை நடத்தினால் இன்னும் பல அதிரடிகள் வெளிச்சத்துக்கு வரும். தவறுகள் நடந்திருக்கும்பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கின்றனர்.

ராதாபுரம் தாலுகாவை சுற்றும் சி.பி.சி.ஐ.டி!

இந்த விவகாரம் தொடர்பாக, திருநெல்வேலியில் ஐயப்பன் என்கிற இடைத்தரகர் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டார். கூடங்குளம் அருகே உள்ள விஜயாபதி கிராமத்தைச் சேர்ந்தவரான இவர், ராதாபுரம் தாலுகாவில் மட்டும் 30 பேருக்குமேல் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் பணி பெற்றுத் தந்துள்ளார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு நபர்களுக்கு பணிகளைப் பெற்றுத் தந்துள்ளார். இவரிடம் பணம் கொடுத்தவர்கள், தொடர்பில் இருந்த அனைவரும் தற்போது பதற்றத்தின் உச்சியில் உள்ளனர்.

- பி.ஆண்டனிராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism