Published:Updated:

`காஷ்மீரில் அடுத்த ஆபரேஷன்!' - தயாராகும் வி.ஹெச்.பி

காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அந்த மாநிலத்தில் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்த விரும்புகிறது.

அயோத்தி வழக்கு
அயோத்தி வழக்கு

30 ஆண்டுக்கால அயோத்தி பிரச்னைக்கு கடந்த 9-ம் தேதி முற்றுப்புள்ளி வைத்தது உச்ச நீதிமன்றம். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டத் தடையில்லை என்கிற தீர்ப்பை உச்ச நீதிமன்ற ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. இந்தத் தீரப்புக்கு ஆதரவாகப் பல்வேறு கட்சிகளும் பேசியிருப்பதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உற்சாகத்தோடு நோக்க ஆரம்பித்துள்ளது.

அயோத்தி
அயோத்தி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நீண்ட காலத் திட்டமே அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் ஆலயம் எழுப்ப வேண்டும் என்பதே. அந்த நோக்கத்தை நிறைவேற்றவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விஸ்வ ஹிந்து பரிஷத் என்கிற அமைப்பையும் உருவாக்கியது. வி.ஹெச்.பி என்று அழைக்கப்படும் இந்த அமைப்பின் தலைவராக இருந்த அசோக் சிங்கால்தான், அயோத்தி விவகாரத்தை வீரியத்தடன் கையில் எடுத்து செயல்படுத்திவந்தார். வி.ஹெச்.பி அமைப்புக்கு அயோத்தி கோவில் கட்டும் பணி, நாடு முழுவதும் பராமரிப்பின்றி உள்ள கோயில்களைக் கையில் எடுத்து புணரமைப்பது, ஆக்கிரமிப்பில் உள்ள கோயில் இடங்களை மீட்பது உள்ளிட்ட பணிகளும் ஒதுக்கப்பட்டன.

அயோத்தி வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது வி.ஹெச்.பி அமைப்பும் 'ராம் ஜென்மபூமி நிவாஸ்' என்கிற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி இந்த வழக்கில் ஒரு மனுதாரராகவும் இருந்தது. மேலும், அயோத்தி வழக்கின் முக்கியவாதியான ராம்லாலுக்கு சட்ட உதவிகளும் வி.ஹெச்.பி செய்துவந்தது. இப்போது அயோத்தி வழக்கு முடிந்துவிட்டது. இந்த அமைப்பின் பிரதான நோக்கம் நிறைவுக்கு வந்துள்ளது. அயோத்தியில் கோயில் கட்ட அறக்கட்டளையை நியமிக்க இருக்கிறது அரசு. இந்த அறக்கட்டளையிலும் வி.ஹெச்.பி பங்குபெறும். காரணம் ராமர் ஆலயம் எழுப்புதற்கான ஆரம்பகட்டப் பணிகளை அந்த அமைப்பு ஏற்கெனவே செய்துவந்தது. கோயிலுக்கான துாண்கள் கூடத் தயார் செய்யப்பட்டுள்ளன. கோயில் கட்டும் பணிகள் ஆரம்பித்த பிறகு, முழுவீச்சில் அதில் வி.ஹெச்.பி பங்கேற்கும்.

பாபர் மசூதி
பாபர் மசூதி

அதற்குப் பிறகு முக்கிய அஜெண்டாக்களை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வி.ஹெச்.பி வசம் ஒப்படைக்க உள்ளது. மதுரா கிருஷ்ணர் கோயில் அருகே உள்ள மசூதி குறித்தும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அருகே உள்ள மசூதி விவகாரம் குறித்தும் முடிவெடுக்க வி.ஹெச்.பி-க்கு பொறுப்புகள் வழங்கப்படலாம் என்கிறார்கள். `அயோத்தி தீர்ப்பு வந்த பிறகு இந்த இரண்டு விவகாரங்களைக் கையில் எடுப்போம்' என்று சுப்பிரமணிய சுவாமி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அவர் மூலமே இதற்கான வேலைகள் ஆரம்பமாகும்.

அயோத்தி தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்! | #AYODHYAVERDICT

அடுத்தகட்டமாக காஷ்மீர் மாநிலத்தில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பி.ஜே.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் அந்த மாநிலத்தில் மீண்டும் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த விரும்புகின்றன. குறிப்பாக 1988 முதல் 1992 வரையிலான காலகட்டங்களில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட கலவரங்களைத் தொடர்ந்து அங்கிருந்த பண்டிட் என்று சொல்லப்படும் சமூகத்தினர் காஷ்மீர் பகுதியிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டார்கள். இப்போது ஜம்மு பகுதியில் மட்டுமே இந்துக்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். காஷ்மீர் பகுதியில் முஸ்லீம்களே அதிகம் இருக்கிறார்கள். பண்டிட்கள் அங்கிருந்து வெளியேறிய பிறகு, அந்தப் பகுதியில் உள்ள கோல்கள் பராமரிப்பின்றி சிதலமடைந்துவிட்டது

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

காஷ்மீர் பண்டிட்கள் இதுகுறித்து தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடம் சொல்லிவந்தார்கள். காஷ்மீர் பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் இருப்பதாகவும் அவைகள் பராமரிப்பு இல்லாமல் போய்விட்டதாகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கணக்கெடுத்துள்ளது. இந்தக் கோயில்களைப் புனரமைத்து மீண்டும் அங்கு பண்டிட்களை குடியமர்த்தி இந்தக் கோயில்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வி.ஹெச்.பி திட்டமிட்டுள்ளது. காஷ்மீர் பண்டிட்டகளிடம் கோயில்கள் குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. விரைவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இதற்கான அனுமதியை அளித்ததும் காஷ்மீரில் களம் இறங்க இருக்கிறது வி.ஹெச்.பி.

அதற்கு முன்பாக, காஷ்மீர் பகுதியில் பண்டிட்கள் வசம் இருந்த இடங்களைக் கணக்கெடுக்கவும் அரசு தரப்பில் உத்தரவிட்டுள்ளார்கள்.

ஆர்.எஸ்.எஸ் தமைமை அலுவலகம்
ஆர்.எஸ்.எஸ் தமைமை அலுவலகம்

முதலில் பண்டிட்களை அங்கு குடியேற்றி பிறகு அந்தக் கோயில்களைப் புணரமைக்கவும் முழுமையாக இடிந்த கோயில்களை புதியதாகக் கட்டவும் வி.ஹெச்.பி அமைப்பு முடிவு செய்துவிட்டது. இதற்கான பிரத்யேகக் குழு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.