Election bannerElection banner
Published:Updated:

`தமிழில் பேசத்தெரியாது என்பது அசிங்கமானது!'- வைரல் பாஸ்டர் அகத்தியனின் ஸ்டேன்ட் அப் பதில்கள்

அகத்தியன்
அகத்தியன்

``எங்களது கொள்கையைப் பற்றி ரஜினி பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா?" எனக்கேட்டு, `உன் உயிரை வாங்க வந்ததுலாம் கடவுள் கிடையாது. உனக்காக உயிரக் கொடுத்தானே, அவன்தான் கடவுள்' என வசனம் பேசி ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பையும் அகத்தியன் உதிர்த்தார்.

சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களாக பாதிரியார் ஒருவர் பேசும் வீடியோ வைரலானது. ஸ்டேன்ட் அப் காமெடியனா அல்லது உண்மையிலேயே பாதிரியார் தானா என்று நினைக்கும் அளவுக்கு அவருடைய பேச்சு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. கிறிஸ்துவர்களிடையே இருக்கும் சாதிப் பாகுபாடுகள், ஆங்கிலத்தில் பெயர் வைக்கும் முறைகள், கிறிஸ்துவத்தில் இருக்கும் பிரிவுகள் என பலவற்றையும் நகைச்சுவை தொணியுடன் இவர் விமர்சித்தார். `யாருயா இந்த மனுஷன்?' என்ற கேப்ஷனோடு பலரும் இவரை தேடிக்கொண்டு இருந்தபோது, அவரைத் தொடர்புகொண்டு வீட்டுக்குச் சென்று சந்தித்தோம்.

அகத்தியன்
அகத்தியன்

``எப்பவோ பேசுனது இப்ப வைரலாகிருக்கு பாருங்க...!'' என்று சொல்லி, `அகத்தியன்' என தன்னை அறிமுகம் செய்துகொண்டார். `அகத்தியன்னு உங்களுக்கு எப்படி பேரு வந்துச்சு..' என்ற கேள்வியுடன் அவருடன் உரையாடத் தொடங்கினோம். ``என்னுடைய பெயர் அகஸ்டின். கலாசாரத்திலிருந்து இந்தப்பெயர் விலகி நின்றது. தெரசா, சோனியா காந்தி எல்லாருமே வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த பிறகு இங்குள்ள கலாசாரத்தைப் பின்பற்றத் தொடங்கினர். இங்குள்ள மக்களின் கலாசாரத்துக்கு ஏற்ப இருந்தால்தான், மக்கள் நாம் கூறுவதைக் கேட்பார்கள். அதனால், அகத்தியன் என தமிழில் மாற்றிக்கொண்டேன்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ``சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு `இந்தியாவில் கிறிஸ்துவம் புறக்கணிக்கப்படுவது ஏன்?' என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து கருத்தரங்கம் ஒன்றில் பேசினேன். `சிரிப்போம் சிந்திப்போம்' என்ற தலைப்பில் அதை சி.டி-யாகவும் வெளியிட்டிருந்தேன். அதை எடிட் செய்து தற்போது பதிவேற்றி உள்ளனர்" என்று சிரித்தார்.

``இயல்பாகவே நான் என்ன பேசினாலும் நகைச்சுவை உணர்வு தானாக வந்துவிடுகிறது. ஒரு விஷயத்தை நகைச்சுவை உணர்வுடன் பேசும்போது அதிக கவனத்தைப் பெற முடியும். அவர்கள் மனதில் ஆழமாகவும் அந்த விஷயம் பதியும். மாற்றத்தையும் ஏற்படுத்தும்" என்றார்.

`இந்து என்பது எல்லாரும்தான். மதத்தைக் குறிக்காது என்று சொல்றீங்களே?' என்ற கேள்விக்குப் பதிலாக,``இந்து என்பது மதத்தினுடைய பெயர் அல்ல. கலாசாரத்தினுடைய பெயர். இந்த கலாசாரத்தை பின்பற்றகூடியவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக இருந்தாலும், அவர்களையும் இந்து மதம் ஏற்றுக்கொள்கிறது. ஆப்பிரிக்கன், அமெரிக்கன், பிரிட்டிஷ் என்பதுபோல அதுவும் கலாசாரத்தின் பெயர்" என்றார்.

அகத்தியன்
அகத்தியன்

``குறிப்பிட்ட காலம் வரை எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது" என்று அதிர்ச்சியைத் தந்தவர், தொடர்ந்து, கடவுள் நம்பிக்கை வந்ததற்கான காரணங்களையும் குறிப்பிட்டார். தொடர்ந்து, ``எங்களது கொள்கையைப் பற்றி ரஜினி பேசினால் எப்படி இருக்கும் தெரியுமா?" எனக்கேட்டு, `உன் உயிரை வாங்க வந்ததுலாம் கடவுள் கிடையாது. உனக்காக உயிரக் கொடுத்தானே, அவன்தான் கடவுள்' என வசனம் பேசி ரஜினியின் ட்ரேட் மார்க் சிரிப்பையும் உதிர்த்தார்.

மேலும், ``தமிழில் பெயர் வைக்க வேண்டும். அது ஒன்றும் தவறு கிடையாது. நீங்க இங்குள்ள குப்பனுக்கும் சுப்பனுக்கும் பிறந்தவங்கதானே! தமிழ்ல பேசுனா என்னவா? தமிழில் பேசத்தெரியாது என்பது அசிங்கமானது. இந்திய மக்களின் உளவியலுக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள். தமிழன் எங்கு சென்றாலும், தன்னுடைய கலாசாரத்தால் அறியப்பட வேண்டும்" என்று தன்னுடைய ஸ்டைலில் மெசேஜ் ஒன்றையும் பதிவு செய்தார்.

ஸ்டாண்ட் அப் காமெடியன்களுக்கெல்லாம் டஃப் கொடுக்கும் இந்த பாதிரியார் யார்?

Posted by Vikatan EMagazine on Saturday, February 29, 2020
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு