Published:Updated:

`மீண்டும் காவி உடையில் திருவள்ளுவர்!' -வெங்கய்ய நாயுடு ட்வீட்டால் சர்ச்சை

காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, பின்னர் அதை நீக்கினார்.

சர்ச்சையான வெங்கய்ய நாயுடுவின் ட்வீட்
சர்ச்சையான வெங்கய்ய நாயுடுவின் ட்வீட்

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து ட்விட்டரில் தமிழக பா.ஜ.க பதிவிடவே, அந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையின் கண்ணில் கறுப்பு பேப்பரை வைத்துக் கட்டியும் முகத்தில் சாணத்தைப் பூசியும் மர்ம நபர்கள் அவமதிப்பு செய்த விவகாரம் தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்த விவகாரங்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பின.

வெங்கய்ய நாயுடு
வெங்கய்ய நாயுடு

இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ட்விட்டரில் வாழ்த்துச் சொன்ன துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு, திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அந்தப் பதிவில், `சிறந்த தமிழ்க் கவிஞரும் தத்துவவாதியும், புனிதருமான திருவள்ளுவரை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். அவர் நமக்களித்த திருக்குறள், இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு வழிகாட்டுகிறது.

அறநெறி, மாண்புகள், தார்மிக நெறி ஆகியவற்றை வலியுறுத்தும் தமிழ் இலக்கியங்களில் மிகவும் பாரம்பர்யமிக்கதாய்க் கருதப்படும் திருக்குறள், அரசு நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகள்குறித்து நமக்கு வழிகாட்டுகிறது. இந்த நூல், எல்லா காலத்திற்கும் பொருத்தமானதாகத் திகழ்கிறது' என்று தமிழில் பதிவிட்டிருக்கிறார்.

தமிழக பா.ஜ.க ட்வீட்
தமிழக பா.ஜ.க ட்வீட்

முதலில், திருவள்ளுவர் காவி நிற உடையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்த வெங்கய்ய நாயுடு, சர்ச்சையானதால் அதைப் பின்னர் நீக்கிவிட்டு, வெள்ளைநிற உடையில் திருவள்ளுவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார். `திருவள்ளுவரை காவிமயப்படுத்த வேண்டாம்' என தி.மு.க எதிர்ப்பைப் பதிவுசெய்திருந்தது.

இந்த நிலையில், திருவள்ளுவர் காவி நிற உடையில் இருக்கும் புகைப்படத்தை தமிழக பா.ஜ.க தனது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் மீண்டும் பதிவிட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.