Published:Updated:

சிறு வயதில் காங்கிரஸ் கட்சிக்கொடி விற்ற மோடி! - ஆச்சர்யத் தகவல்

பாரதிய ஜனதா கட்சித் தலைவராகப் பிரதமர் மோடி உயர்ந்தபோதும், காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷிகாபாய் தேவுடனான தொடர்பை அவர் கைவிடவில்லை.

Narendra Modi in his Childhood
Narendra Modi in his Childhood

பிரதமர் மோடியின் தலைமையில் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது. விளைவாக, காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட எட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. தேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தந்ததில் பெரும் பங்காற்றிய இந்தியாவின் பழைமையான காங்கிரஸ் கட்சியை இருந்த இடம் தெரியாமல் வீழ்த்தியதில் மோடியின் கரமே முக்கியமானது. ஆனால், சிறுவயதில் நரேந்தர் என்கிற மோடியின் கரமே காங்கிரஸ் கொடியைச் சுமந்து விற்ற தகவல் யாருக்குமே ஆச்சர்யம் தரக்கூடியது. ஆம்... தன் சிறு வயதில் காங்கிரஸ் கட்சியின் அபிமானியாக இருந்துள்ளார் மோடி. வத்நகரில், காங்கிரஸ் கட்சியின் கூட்டங்கள் நடைபெற உதவியாக இருந்துள்ளார்.

Narendra Modi in his Childhood
Narendra Modi in his Childhood

மோடியின் சொந்த ஊரான வத்நகரில் ரஷிகாபாய் தேவ் என்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் இருந்தார். இவர், ஏற்பாடு செய்யும் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் சிறு வயது மோடி, பால்ய கரசேவகராகப் பங்கேற்றுள்ளார். இந்தத் தகவலை `the Man of the Moment: Narendra Modi' என்ற மோடியின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய எம்.வி.காமத், கலின்டி ரந்தேரி ஆகியோர் தங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதில், 1956-ம் ஆண்டு ரஷிகாபாய் தேவ் ஏற்பாடு செய்த கூட்டங்களில் சிறுவனாக இருந்த மோடி, உதவி புரிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

அதோடு, காங்கிரஸ் கட்சியின் கொடிகள், பேட்ஜுகளையும் கூட்டத்தினரிடையே விற்பனை செய்ததாகவும் காங்கிரஸ் கட்சித் தலைவர் ரஷிகாபாய், சிறுவன் மோடியின் செயல்பாடுகளைக் கண்டு பாராட்டியதாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வத்நகரைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் கட்சித் தலைவர் துவாரகாதாஸ் ஜோஷியும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாகப் புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் துவாரகாதாஸ் ஜோஷி, வினோபா பாவேயின் கொள்கைகளைப் பின்பற்றி நடப்பவர்.

Narendra Modi
Narendra Modi

வினோபாவே போலவே, கடந்த 2009-ம் ஆண்டு 21 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து துவாரகாதாஸ் ஜோஷி உயிர் துறந்தார். அப்போது, குஜராத் மாநில முதல்வாக இருந்த மோடி நேரில் வந்து, துவாரகா ஜோஷியின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் வளர்ந்து பிற்காலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைவராக மோடி உயர்ந்தபோதும், ரஷிகாபாய் தேவுடனான தொடர்பை கடைசி வரை அவர் கைவிடவில்லை. 1999-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளராக மோடி இருந்தார். இந்தச் சமயத்தில், வத்நகர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் ரஷிகாபாய் தேவ் பங்கேற்றார். இந்த விழாவுக்கு வந்த மோடி, ரஷிகா பாய் தேவின் காலில் விழுந்து ஆசி வாங்கினார்.

மோடி சிறுவயதில் இருந்தே பல்துறை வித்தகராக இருந்துள்ளார். மோடி படித்துவந்த வத்நகர் பள்ளியின் மதில் சுவர் பல ஆண்டு காலமாக இடிந்து கிடந்தது. புதிய மதில் சுவர் கட்ட, பள்ளியில் போதிய நிதி இல்லை. அப்போது, மோடிக்கு 13, 14 வயது இருக்கலாம். இந்தச் சமயத்தில், நாடகம் நடத்தி நிதி திரட்டி, பள்ளி காம்பவுண்ட் சுவர் எழுப்ப மோடி முடிவு செய்தார். இதற்காக,`மஞ்சள் மலர்கள்' என்ற தலைப்பில் அந்த நாடகத்துக்கு மோடி கதை எழுதியதோடு, நடிக்கவும் செய்தார். மோடியின் 'மஞ்சள் மலர்கள்' நாடகம் தீண்டாமையைக் கடுமையாகக் கண்டித்தது. நாடகத்தின் கதைப்படி, கிராமத்தில் பட்டியலின தாயும் மகனும் வசிக்கின்றனர். மகனுக்குத் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்படுகிறது. தாய், மகனை மருத்துவரிடத்தில் அழைத்துச் செல்கிறார். ஆனால், தீண்டாமை காரணமாக மருத்துவர் அந்த ஏழைச் சிறுவனுக்குச் சிகிச்சையளிக்க மறுக்கிறார்.

From the biographical movie
From the biographical movie

அங்கே இருந்த சிலர், `கிராமத்தில் சாமிக்குப் பூஜித்து வைக்கப்பட்டிருக்கும் மஞ்சள் நிற பூவைத் தொட்டால் உன் மகன் குணமடைந்து விடுவான்' என்று தாயிடம் சொல்கின்றனர். தாய், கோயிலுக்கு ஓடுகிறார். கோயிலில் இருந்த பூசாரியோ, தாயைக் கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை. `ஒரே ஒரு பூவையாவது தாருங்கள்' என்று அந்தத் தாய் கெஞ்சுகிறார். முடிவில், இரக்கப்பட்ட பூசாரி ஒரு பூவை எடுத்துக்கொடுக்கிறார். இதனால், சிறுவன் உயிர் பிழைத்துக்கொள்கிறான். இப்படியாகச் செல்லும் கதையின் முடிவில், `கடவுள் முன்னிலையில் அனைவரும் சமம், கடவுளிடத்தில் அனைவருக்கும் சம உரிமை இருக்கிறது' என்கிற மெசேஜை மக்களிடத்தில் நரேந்தர் சொல்கிறார்.

"வாசிப்பே, வளர்ச்சிக்கான எரிபொருள்!" - மோடி பொன்மொழிகள் 20 #VikatanPhotoCards

அந்தக் காலகட்டத்தில், மோடி எழுதி நடித்த இந்த நாடகம் வத்நகரில் பிரபலமாகப் பேசப்பட்டதாக மக்கள் சொல்கிறார்கள் என்று 'the Man of the Moment: Narendra Modi' புத்தகத்தை எழுதியவர்களில் ஒருவரான கலின்டி ரந்தேரி குறிப்பிட்டுள்ளார். வத்நகர் கோயிலில் பூசாரி, பட்டியலினப் பெண் ஒருவரைத் துரத்திவிட்டதை ஒரு முறை நேரில் கண்ட மோடி, அதனடிப்படையில் இந்தக் கதையை எழுதியுள்ளார்.

பிரதமருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!