Published:Updated:

தமிழுக்கு அறம் என்று பேர்!

தமிழுக்கு அறம் என்று பேர்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழுக்கு அறம் என்று பேர்!

வீ.அரசு: ஓவியம்: கோபி ஓவியன்

தமிழுக்கு அறம் என்று பேர்!

வீ.அரசு: ஓவியம்: கோபி ஓவியன்

Published:Updated:
தமிழுக்கு அறம் என்று பேர்!
பிரீமியம் ஸ்டோரி
தமிழுக்கு அறம் என்று பேர்!

மிழ்த் தேசிய இனம் மொழியை முதன்மையான அடையாளமாகக் கொண்டிருக்கிறது. இயற்கை மரபைக் கொண்டாடும் செவ்விலக்கியம் இம்மொழியில் இருக்கிறது. செவ்விலக்கணமும் இருக்கிறது. இம்மரபுக்கு நீண்ட வரலாறும் உண்டு. தொடக்கக் கால ஆக்கங்களில், மனிதனை முதன்மைப்படுத்திய அவைதிக மரபுதான் இருந்துள்ளது. செவ்வியல் மரபு, அறம்பேசும் மரபு ஆகியவற்றைக் கொண்ட அவைதிக மரபுதான் தமிழின் அடையாளம்.

தமிழின் பண்டைய அடையாளத்தின் புதிய வாசிப்பாக, சிந்துசமவெளி அகழ்வாய்வு, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு, கீழடி அகழ்வாய்வு, கொற்கை அகழ்வாய்வு ஆகிய பல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் தொடங்கி, அச்சு வாகனம் ஏறிய செவ்விலக்கியம், செவ்விலக்கணம் ஆகிய பலவும் தமிழ் அடையாளச் சின்னங்களாக உள்ளன. தமிழ்மொழிக்கு கி.மு 700 முதல் எழுத்துப் பொறிப்பு உண்டு என்றும் கொற்கை, கீழடி அகழ்வாய்வுகள் மூலம் அறிகிறோம். தமிழ் அடையாளம் என்பதை, தமிழ்மொழி மற்றும் நிலம் சார்ந்து இப்படித்தான் புரிந்து கொள்ளமுடிகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தமிழ் அடையாளங்கள் காலந்தோறும் எதிர் கொள்ளப்பட்ட கதை சுவையானது. சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலம் முதல் தமிழ் ஆக்கங்களில் வைதீகம் படிப்படியாக இடம் பெறத் தொடங்கியது. செவ்விலக்கியப் பிரதிகளில் மிக மேலோட்டமாகக் காணப்பட்ட வழிபாடுகள், நம்பிக்கைகள் அனைத்தும் புராணிய மரபாக மாறின. சிவன், திருமால் போன்ற கடவுளர்கள் இலக்கியங்களிலும் இடம்பெறத் தொடங்கினர். மிகப் பிரமாண்டமான கோயில்கள் உருவாயின. இவை வைதீக மரபின் அடையாளங்கள். கோயிலில் வழிபாட்டு மொழி சம்ஸ்கிருதம். அரசர்களின் நிர்வாக மொழி சம்ஸ்கிருதம். காலனிய காலத்தில் ஆங்கிலம் அதிகார மொழியாக வடிவம் பெற்றதைப்போல், பல்லவர் காலம் தொடங்கி சம்ஸ்கிருதம் அதிகார மொழியானது. பிற்காலச் சோழர் காலத்தில் வைதீக மரபே தமிழ் அடையாளமாக ஆகிப் போனது. மணிப்பிரவாளத் தமிழ். பரதநாட்டியம், கர்னாடக இசை, ஆகம விதிகள் சார்ந்த நூல்கள் எனக் கலை மற்றும் புலமைத்துவ மரபுகள் அனைத்தும் சம்ஸ்கிருதம் மொழி சார்ந்த வைதீக அடையாளமாகிப்போயின.

தமிழுக்கு அறம் என்று பேர்!

ஆடல் மரபு, இசை மரபு, வழிபாட்டுமரபு, காப்பிய மரபு, பிரபந்த மரபு, நாட்டுப்புற மரபு என அனைத்தும் தமிழ் அடையாளத்தை இழந்துபோயின. ராமாயணம், பாரதம் ஆகிய புராணங்கள் வடதமிழகச் சூழலில் விரிவாக வாசிக்கப்பட்டது. சுமார் 1,500 ஆண்டுகளில் இவை நிகழ்ந்துபோயின.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு, காலனியம் முந்தைய வரலாறுகளை மறுவாசிப்புக்கு உட்படுத்தின. ஐரோப்பிய புத்தொளி மரபு நமது சமூகத்திற்கும் வந்து சேர்ந்தது. எழுத்தறிவு சனநாயகமானது. அச்சுப்பண்பாடு உருவானது. வாசிப்புப் பழக்கம் வந்தது. சனநாயகம், கல்வி அறிவு, ஆதிக்கத்தில் இருந்து விடுதலை எனும் பண்புகள் உருவாயின. இதன் மூலம் தமிழ் அடையாளம் குறித்த புதிய குரல்கள் எழுந்தன.

மனோன்மணீயம் சுந்தரனார் “ஆரியம்போல் உலக வழக்கொழிந்து அழியாநின் சீரிளமை திறன் வியந்து வாழ்த்துதுமே” என்று மனோன்மணீய நாடகத்தின் மொழிவாழ்த்தில் எழுதினார். இப்பாடலே ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ இன்று பாடப்படுகிறது. ஆனால் தி.மு.க. அரசால் தமிழ்த்தாய் வாழ்த்தில் மேற்சொன்ன வரிகள் நீக்கப்பட்டுவிட்டன. தமிழ்நாட்டில் தமிழ் அடையாளம் பேசுவதில் உள்ள சிக்கலை இந்நிகழ்ச்சி சொல்லுகிறது.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள் (1876-1950), திரு.வி.க (1883-1953), வ.உ.சி. (1872-1936) போன்ற அறிஞர்கள் தமிழ் அடையாளத்தை சைவ அடையாளத்தோடு இணைத்துப் பேசினர். இந்த அடையாளம் யாழ்ப்பாண சமூகத்தில் ‘கந்தபுராணக் கலாசாரமாக’வும் வடிவம் பெற்றது. சம்ஸ்கிருதமொழி சார்ந்த அடையாளம், சைவம் சார்ந்த அடையாளம் இவற்றின் அடுத்த கட்ட அடையாளமாக திராவிட அடையாளம், சுயமரியாதை அடையாளம் ஆகியவை உருவாயின. இருபதாம் நூற்றாண்டில் மீண்டும் தமிழர் அடையாளம் என்பது வைதீக மரபுக்கு மாற்றாக புதிய அவைதிக மரபாக உருப்பெற்றது. இதற்கு மூலங்களாக ஒரு வகையில் அயோத்திதாசரையும் (1845-1914), கலக மரபாகக் கட்டமைந்த ஈ.வெ.ரா பெரியாரையும் (1879-1973) சொல்ல வேண்டும்.

பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிமேலழகர்தான் வள்ளுவருக்கு வைதீகச் சாயம் பூசிய முதல் மனிதர். இவருடைய உரையோடுகூடிய திருக்குறள்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டுமுதல் கொண்டாடப்பட்டது.

தி.மு.க என்ற அமைப்பு, செவ்வியல் இலக்கிய மரபுகளைத் தங்கள் அடையாளமாக்கிக் கொண்டது. தங்களைப் புறநானூற்றுத் தமிழர்களாகக் கூறிக்கொண்டனர். ம.பொ.சி-யின் தமிழரசுக் கட்சியினர் தேசிய நீரோட்டம் சார்ந்த தமிழ் அடையாளத்தைப் பேசினர். சிலப்பதிகாரத்தைக் கொண்டாடினர். தி.மு.க- வினர் சங்க இலக்கியங்களைக் கொண்டாடினர். பெரியார் திருக்குறளைக் கொண்டாடினார். இவ்வகையில் உருவான தமிழ் அடையாளத்தால், தி.மு.க-வின் ஆட்சி அதிகாரத்தில். ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்டப்பட்டது. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது. வைதீக மரபு சார்ந்த சடங்குகள் பெரிதாக முன்னெடுக்கப்படவில்லை. சாதி அடையாளத்தைப் பெயரோடு இணைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லாமல் போனது. ஆட்சி அதிகாரத்தில் வைதீகத்தின் செல்வாக்கு குறைந்தது. இவையெல்லாம் தமிழர் அடையாளங்களாக அமைந்துபோயின.

சாதி அதிகாரம், மத அதிகாரம் ஆகிய வைதீக மரபுகளுக்கு எதிரான அடையாளமாகவே தமிழ் அடையாளம் இருபதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆனால் இப்போது சாதியச் சக்திகள், மதவாதச் சக்திகள் மீண்டும் வைதீகம் பேசத் தொடங்கியுள்ளன. இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக திருவள்ளுவரைக் காவியமயமாக்கும் அண்மைக்கால நிகழ்வைச் சொல்லலாம்.

திருக்குறள் என்ற நூலை எழுதியவரின் உருவம், பல காலங்களிலும் பல வடிவங்களில் வரையப்பட்டது. சைவ அடையாளங்களோடு தான் முதன்முதலில் திருவள்ளுவர் ஓவியத்தை உருவாக்கினர். இந்த அடையாளம் 1964இல் முதலமைச்சராக இருந்த பக்தவச்லம் ஆட்சிக்காலத்தில் நீக்கப்பட்டு, வேணுகோபால் சர்மா என்னும் ஓவியரால் மதக்குறியீடுகளற்ற திருவள்ளுவர் ஓவியம் உருவானது. பாரதிதாசன், ஜீவா, அண்ணா போன்றோர் மதச்சார்பற்ற இந்தத் திருவள்ளுவர் உருவத்தை வரவேற்றுப் பாராட்டினார்கள். பிறகு தொடர்ந்து இந்தத் திருவள்ளுவர் அடையாளமே தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டது.

தமிழுக்கு அறம் என்று பேர்!

பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த பரிமேலழகர்தான் வள்ளுவருக்கு வைதீகச் சாயம் பூசிய முதல் மனிதர். இவருடைய உரையோடுகூடிய திருக்குறள்தான் பத்தொன்பதாம் நூற்றாண்டுமுதல் கொண்டாடப்பட்டது. அதிக பதிப்புகள் வந்த நூல் அதுவே. இம்மரபை இருபதாம் நூற்றாண்டில் தமிழ் அடையாளத்தை முன்னெடுப்போர் மறுக்கத் தொடங்கினர். காங்கிரஸ் அமைப்பில் செயல்பட்ட நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார், பரிமேலழகரை மறுத்து ‘திருவள்ளுவர் திடுக்கிடுவார்’ எனும் நூலை 1954இல் எழுதினார். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட திராவிட இயக்கச் சார்புடையோர் திருக்குறளுக்குப் பகுத்தறிவு மரபு சார்ந்து, வைதீக மறுப்பு உரை எழுதியுள்ளனர்.

இப்படியான சூழலில் இன்று சிலர் திருவள்ளுவர் சிலைக்குக் காவித்துணிபோர்த்தி, அவரை மத அடையாளத்துக்குள் அடைக்கப்பார்க்கிறார்கள்.

திருக்குறளில் மிக அதிகமான குறட்பாக்கள் பொருட்பால் பகுதியில் உள்ளவை. இப்பகுதியில் பேசப்படுபவை அரசு நடத்தும் அரசர்களுக்காகக் கூறப்பட்டவை. திருவள்ளுவர் காலம் என்பது அரசு உருவாக்கம் (State formation) முழுமைபெற்ற காலம். அரசர்களுக்கே முதன்மையாக அறநெறி புகட்டுகிறார் திருவள்ளுவர். இல்லறம், துறவறம், காமத்துப்பால் சொல்லப்பட்டிருக்கும் செய்திகளை நாம் பொது மனிதருக்கானதாக ஓரளவு கொள்ளலாம். ஆனால் பொருட்பால் அப்படி இல்லை. எனவே அரச உருவாக்கம் பெற்ற ஒரு சமூகத்திற்குச் சொல்லப் படுவதைப் பொதுமனிதருக்கான அறநெறியாக முழுமையாகக் கொள்ள முடியுமா? ஆனால் திருக்குறள் ‘பொதுமறை’ என்று கூறி, இடம், பொருள் சூழல் இன்றி அதற்கு விளக்கம் தருகிறார்கள். இதனால்தான், அவர் முதன்மையாக அவைதிக சமண மரபு பற்றிப் பேசியதை, ஒவ்வொரு சமயத்தினரும் தங்களது சமயச் சார்பு என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொருவரும் விரும்பும் வகையில் பேச முடிவதற்குக் காரணம், திருக்குறள் மிகச் சுருக்கமாக ஏழு சீர்களில் இயற்றப்பட்டிருப்பதே. ஒவ்வொரு சொல்லையும் தனித்தனியாக எடுத்துத் தங்களுக்குச் சாதகமாகப் பேசுகிறார்கள். அது எந்த அதிகாரத்தில், எந்தப் பிரிவில் என்ற அடிப்படையான புரிதல் இல்லாமல் திருக்குறளை மானாவாரியாகப் பேசுகிறார்கள்.

திருவள்ளுவரின் சூழல் என்பது அவைதிகச் சூழல். கடவுளை முதன்மைப்படுத்தாமல் மனிதர்களை முதன்மைப்படுத்திய சூழல். அது தமிழின் மிகச் சிறந்த அடையாளம். இதை ஒரு மதத்துக்கோ சாதிக்கோ சொந்தம் கொண்டாட நினைப்பது அறியாமையின் உச்சம்.