Published:Updated:

அன்னாஹசாரே குழு பிளவுக்கு நான் காரணம் அல்ல: பாபா ராம்தேவ் பேட்டி

அன்னாஹசாரே குழு பிளவுக்கு நான் காரணம் அல்ல: பாபா ராம்தேவ் பேட்டி
அன்னாஹசாரே குழு பிளவுக்கு நான் காரணம் அல்ல: பாபா ராம்தேவ் பேட்டி
அன்னாஹசாரே குழு பிளவுக்கு நான் காரணம் அல்ல: பாபா ராம்தேவ் பேட்டி

டேராடூன்: அன்னாஹசாரே குழுவில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு நான் காரணம் அல்ல என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் அன்னாஹசாரே கிரண்பேடி, சாந்திபூஷன், பிரசாந்த் பூஷன், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலர் நாடு தழுவிய போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சில நாட்களாக இக்குழுவினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

ஊழலை எதிர்க்க உண்ணா விரதங்களும், போராட்டங்களும் மட்டுமே போதாது. புதிதாக அரசியல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். இதனை ஏற்க அன்னாஹசாரே மறுத்து விட்டார்.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் கட்சி ஆரம்பிக்க சிலர் ஆதரவு கொடுத்தனர். இதனால் அன்னாஹசாரே குழுவில் பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவிற்கு யோகா குரு பாபா ராம்தேவ் தான் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை பாபா ராம்தேவ் மறுத்துள்ளார். இது தொடர்பாக ஹரித்வாரில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஹசாரேவுக்கும் அவரது சகாக்களுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவுக்கு நான்தான் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இதில் என் பங்கு எதுவுமில்லை. புரளிகளை கிளப்பும் சின்னத்தனமான அரசியலில் ஈடுபடுவோரின் செய்கையாகவே இதை கருத வேண்டும்.

2014 பாராளுமன்ற தேர்தலின் போது ஹசாரே இயக்கத்துடன் எனக்குள்ள பிணைப்பு பற்றி நான் முடிவெடுத்து அறிவிப்பேன். அக்டோபர் மாதம் 2-ந் தேதி டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் என் தலைமையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அன்றைய தினம் நாடு முழுவதும் 550 மாவட்டங்களில் சுதேசி கொள்கையை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடத்த தீர்மானித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.