Published:Updated:

நச்சம்மா முதல் கோமதி அகஸ்டின் வரை... அரசை ஆட்டம் காண வைத்த பெண்கள்! #Rewind 2017

நச்சம்மா முதல் கோமதி அகஸ்டின் வரை... அரசை ஆட்டம் காண வைத்த பெண்கள்! #Rewind 2017
நச்சம்மா முதல் கோமதி அகஸ்டின் வரை... அரசை ஆட்டம் காண வைத்த பெண்கள்! #Rewind 2017

நச்சம்மா முதல் கோமதி அகஸ்டின் வரை... அரசை ஆட்டம் காண வைத்த பெண்கள்! #Rewind 2017

ந்த வருடம் எல்லா வகையிலுமே மிக முக்கியமான வருடம். இந்தியாவின் வால் ஸ்ட்ரீட் புரொடெஸ்ட், அராப் ஸ்ப்ரிங் எனச் சொல்லக்கூடிய ஜல்லிக்கட்டுப் போராட்டம் வருடத்தின் தொடக்கத்தில் ஆரம்பிக்க, ஒவ்வொரு மாதமும் போராட்டங்களாக விடிந்தன. 

போராட்டம் என்றாலே, ஆண்களால் நிரம்பி வழியும் என்பதை உடைத்து, இந்த வருடம் அதிக அளவில் பெண்கள் கலந்துகொண்டார்கள். எழுவர் விடுதலைக்கான போராட்டம், 2011-ம் ஆண்டு ஈழப் பிரச்னையில் அமெரிக்க தீர்மானத்துக்கு எதிரான மாணவர்களின் போராட்டம், 2009 ஈழப் போராட்டம் ஆகியப் போராட்டங்களில் பெண்கள் குறிப்பிட்ட அளவில் கலந்துகொண்டிருந்தாலும், ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் முதல் நாள் முதல் எட்டாம் நாள் காவல்துறையிடம் அடி வாங்கியது வரை ஒவ்வொரு நொடியிலும் பெண்களின் பங்களிப்பு இருந்தது. அந்தப் பெண்களைப் போராட்டத்துக்கு அனுப்பிவைத்த குடும்பங்கள், காவல்துறை அடித்தபோது தங்கள் மகளாக/ மகனாக நினைத்துக் காப்பாற்றிய மீனவ குப்பத்துப் பெண்கள் என ஜனவரி மாதம் நெகிழ்வான மாதம். 

டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் நூறு நாள் போராட்டத்தில், ஜந்தர் மந்தரில் நச்சாம்மாவும் ராணியும் பெண் விவசாயிகளின் குரல்களாக ஒலித்தார்கள். அதற்கு முன்பு, ஏப்ரல் மாதம் தொடங்கி 41 நாள்கள் நீடித்த போராட்டம், இரண்டு நாள் போராட்டம் என்று எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்ட ராஜலட்சுமி, ராசம்மா, செல்லம்மா ஆகிய பெண் விவசாயிகள், தமிழகப் பெண்களின் வீரத்துக்கான சாட்சி. 

உத்தரப்பிரதேசத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி, மர்ம நபர்களால் பாலியல் வன்முறைக்கு ஆளானதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்கக்கோரி, சக மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர். அப்போது, தடியடி நடத்திய காவல்துறையின் அராஜக வீடியோ வைரலானது. அதன்பின்பான மாணவிகளின் தொடர் போராட்டம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக, அந்த வளாகத்துக்கான முதல் பெண் ஒழுங்கு கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டார். 

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில், ஏற்கெனவே பாலியல் வன்முறை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க இருந்த அமைப்பை மாற்ற நிர்வாகம் முயன்றது. இதனால், மாணவர்களிடையே பெரிய போராட்டம் வெடித்தது. இந்தப் போராட்டம் வெற்றி பெறவில்லை என்றாலும், மாணவர்கள் அனைவரும் மாணவிகளுக்குத் துணையாக இருந்து தங்கள் உறுதியை வெளிப்படுத்தினார்கள். 

குஜராத்தில் ஆஷா அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஊழியர்களாக இருக்கும் பெண்கள், ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கள் ஊதியத்தை 1500 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தும் கோரிக்கை உள்ளிட்ட, பல அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் இறங்கினர். இதில், இரவு பகல் பாராமல், பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற அத்தனை பேரும் பெண்கள். மோடி குஜராத்துக்குச் சென்றபோது, அந்தப் போராட்டத்தை ஒருங்கிணைத்த பெண்கள் அமைப்பின் தலைவர் சந்திரிக்கா சொலாங்கி, தனது வளையலைக் கழற்றி மோடியின் முகத்தில் எறிந்தார். அரண்டுபோனது நிர்வாகம். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களில் இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர். 

‘பெண்கள் உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள், உள்ளுர் அதிகாரிகளுடன் சேர்ந்துகொண்டு, சமூகத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகின்றனர். காட்டுக்குள் என்னவெல்லாமோ நடக்கின்றன. எல்லாம் எனக்குத் தெரியும்' தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் பெண்களை இப்படிக் கொச்சையாகப் பேசினார் கேரள அமைச்சர். அதைக் கண்டித்து, அமைச்சருக்கு எதிராக ஒரு பெரிய போராட்டம், பெண்கள் உரிமை அமைப்பின் தலைவர் கோமதி அகஸ்டினால் நடத்தப்பட்டது.

பொங்கும் குமரி கடலில் கரையில் அமர்ந்து காணாமல்போன தன் சகோதரன், மகன், கணவருக்காகப் பெண்கள் பெரும் அளவில் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்; கதறுகிறார்கள். அவர்களுடைய கண்ணீரும் கோபமும், மோடியின் பொம்மையான முதல்வர் எடப்பாடிப் பழனிசாமியை வாயைத் திறந்து நிவாரணத்தை அறிவிக்கவைத்தது. 

ஒரு சிறிய கிராமத்தில், அரசுப் பள்ளியில் படித்த, மூட்டைத் தூக்கும் தொழிலாளரின் மகள் அனிதா. நீட் தேர்வுக்கு எதிரான, சமூக நீதிக்கான சட்டப் போராட்டத்தை ஆரம்பித்தார். அவரது தற்கொலை, தமிழகத்தில் ஏற்படுத்திய எழுச்சி, பள்ளி மாணவிகளையும் சாலைக்கு வந்து போராடச் செய்தது. 

கௌசல்யாவின் சட்டப் போராட்டம், சங்கரை ஆணவக்கொலைச் செய்த ஆறு பேருக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளது. ஜாதி வெறி பிடித்து, ஆணவக்கொலை செய்ய நினைக்கும் அனைவருக்குமே தூக்குக் கயிற்றை கண் முன்னே நிறுத்தியிருக்கிறது. அற்புதம் அம்மா என்கிற தாயின் 26 வருடப் போராட்டத்துக்கு, பேரறிவாளனின் இரண்டு மாத பரோல் ஒரு சிறிய ஆறுதலைக் கொடுத்துள்ளது. 

இங்கு குறிப்பிட்ட போராட்டங்களில் பல வெற்றி மட்டுமன்றி தோல்வியையும் சந்தித்திருக்கலாம். ஆனால், அவை அரசையும் நிர்வாகத்தையும் ஆட்டம் காணவைத்தன. சமீபத்தில் நடைபெற்ற செவிலியர்கள் போராட்டம், தற்போது நடைபெற்று வரும் திருநர்களுடைய திருநர் சட்டத்துக்கு எதிரான போராட்டம், உலகத்தையே உலுக்கிய 'மீ டூ' போராட்டம், கேரளத் திரைப்படத்துறையில் நடைபெற்று வரும் பெண் நடிகர் மற்றும் இயக்குநர்களின் கலகம் என்று பெண்களின் போராட்டங்களால் நிரம்பியிருக்கிறது 2017. வரும் புத்தாண்டில் பெண்களின் எழுச்சி தீவிரமாகும். விடியல்கள் பிறக்கும் என்று நம்புவோம்!

அடுத்த கட்டுரைக்கு