Published:Updated:

இளம்படையைக் களத்துக்கு அழைத்து வந்த ஜல்லிக்கட்டு..! புரட்சிக் கதை சொல்லும் மாணவர் #2YearOfJallikkattu

இளம்படையைக் களத்துக்கு அழைத்து வந்த ஜல்லிக்கட்டு..! புரட்சிக் கதை சொல்லும் மாணவர்  #2YearOfJallikkattu
இளம்படையைக் களத்துக்கு அழைத்து வந்த ஜல்லிக்கட்டு..! புரட்சிக் கதை சொல்லும் மாணவர் #2YearOfJallikkattu

'ஜல்லிக்கட்டு'... 2017 ஜனவரி மாதம், நாம் அதிகம் உச்சரித்த சொல் இதுவாகத்தான் இருக்கும். தமிழகம் அலற... இந்தியா தடுமாற... உலக அரங்கம் திரும்பிப் பார்த்தது. ''தமிழனின் அடையாளத்துக்கு ஆபத்து வருமெனில், நடுவீதிக்கு வந்து உரிமைகளைக் கேட்போம்'' என்று இளைஞர்கள் உரக்கச் சொல்லி இரண்டு வருடம் நிறைவடைந்துள்ளது. பொதுவாக ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்றால், மெரினாவில் நடந்த போராட்டம்தான் எல்லோருக்கும் நினைவில் வரும்.

'ஜல்லிக்கட்டின் மீதான தடை நீங்க வேண்டும்' என அலங்காநல்லூர் வாடிவாசலில் ஜனவரி 16-ஆம் நாள் அறப்போராட்டம் தொடங்கியது. அன்று இரவு முழுவதும் நீடித்த இந்த அறப்போராட்டம், அடுத்த நாள் (17-01-2017) காலை சுமார் இருநூறு பேரை அடாவடித்தனமாகக் கைது செய்ய, அன்றே ஜல்லிக்கட்டு தடை நீக்கக்கோரியும், கைது செய்யப்பட்ட போராட்டக்காரர்களை விடுவிக்கக்கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுகூடினார்கள். வெறும் ஆண்கள் மட்டுமல்ல... பெண்கள், சிறுவர், சிறுமியர் எனக் குடும்பம் குடும்பமாக வந்து ஆதரவு கொடுத்தனர். அது, தமிழ்நாடு முழுவதும் கொழுந்துவிட்டு பரவத் தொடங்கியது.

அப்படி மெரினாவில் கூட்டம் கூடிக்கொண்டே இருக்க, ஆங்காங்கே பல கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி வாசல்களிலேயே போராட்டத்தை முன்னெடுத்தனர். இப்படியான போராட்டத்தில், ஒரு மிகச்சிறு பகுதியை ஒருங்கிணைக்கும் குழுவில் நானும் ஒருவனாகப் பலதரப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைத்து, என் கல்லூரி வாசலில் போராடினேன். அப்போது எனக்குப் பதினெட்டு வயதுகூட நிரம்பவில்லை; கல்லூரியில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்த சமயம். போராட்டம், தீப்பிழம்பாக மெரினாவில் தீவிர நிலையை அடைய... நாமும் நம் பங்குக்கு ஏதாவது செய்ய வேண்டும் என எனக்குள் ஓர் உத்வேகம் ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. ஆனால், அதை எப்படிச் செய்வதென்று தெரியவில்லை. இருந்தாலும் போராட்டம் நடத்த வேண்டும் என்கிற நோக்கத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தேன். அப்போது யாரோ ஜல்லிக்கட்டுக்காக வாட்ஸ் அப்பில் ஆரம்பித்த குழுவில் நானும் இணைந்துகொண்டேன். அதில், ஆளாளுக்குப் பரபரப்பாக ஒரு யோசனையைச் சொல்ல ஆரம்பித்தார்கள். இதில் முழுமூச்சாக இறங்கிய சிலருடன் நான் கைகோத்துக்கொண்டேன். எங்கே போராட வேண்டும்; எந்த இடத்தில் போராட வேண்டும் என்பதைத் தீர்மானித்தோம். எந்த இடத்தில் அறப்போராட்டம் நடத்தினால், பொதுமக்களுக்கு இடைஞ்சல் ஏற்படாது என ஆராய்ந்து அதுபோன்ற இடத்தைத் தேர்வுசெய்வதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். இறுதியில், காட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வளாகத்தைத் தேர்வு செய்தோம். அது நான் படித்துகொண்டிருந்த கல்லூரி.

அங்கு பல கல்வி நிலையங்கள் இருந்தமையால், அந்தக் கல்வி நிலையங்களின் ஒவ்வொரு பிரிவினரும் தனித்தனியாக வாட்ஸ் அப்பில் குழுக்களை ஆரம்பித்து ஆளுக்கோர் இடத்தில் போராட்டம் நடத்தலாம் எனக் கருத்துகளைப் பகிர குழப்பம் அதிகரித்தது. பின்னர், ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் உள்ள சில மாணவர்களை அழைத்து இதுதான் சரியான இடம் என ஒன்றைத் தேர்வுசெய்து, சமூக வலைதளங்கள் மூலம் பரப்பினோம். காட்டாங்குளத்தூர் கல்லூரி வளாகத்தில் உள்ள அத்தனை மாணவர்களுக்கும் இந்தச் செய்தி சென்றடைந்திருக்கும் என நம்பி, திட்டமிட்டவாறு போராட்டத்தை நடத்த முடிவெடுத்தோம். பல செய்தித் தொலைக்காட்சி நிறுவனங்களைத் தொடர்புகொண்டு ஆதரவு கேட்டோம். அதில், ஒரு தொலைக்காட்சி நிறுவனம் எங்களைப் பார்த்து ஏளனமாக, “போராட்டமா, சரி ... எல்லோரும் கூடி என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் கூடினால் ஜல்லிக்கட்டு தடை நீங்கிவிடுமா” எனக் கேட்டது. ஆயினும், பல ஊடகங்கள் எங்களை ஆதரித்தன.

18-01-2017 அன்று, நாங்கள் திட்டமிட்டபடியே போராட்டம் தொடங்கியது. ஆனால், அறிவித்த நேரத்துக்கு இரண்டு மணி நேரம் முன்பே போராட்டம் தொடங்கியது. ஆரம்பத்தில் எதிர்பாராத அளவுக்கு அதிகக் கூட்டம் சேர்ந்தது. கூட்டம் சேர்ந்து வெறும் ஐந்தே நிமிடங்களில் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திலிருந்து போலீஸார் குவிக்கப்பட்டனர். வர மறுத்த ஊடகங்களும் வந்து காணொலி எடுத்துச் சென்றது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம். தோராயமாக 4000 பேர் அந்த இடத்தில் குவிந்திருந்தோம்; செய்வதறியாது திகைத்தோம். கூட்டத்தைக் கட்டுப்படுத்தி ஒருவழியாக எந்தக் குழப்பமுமின்றிப் போராட்டம் நகர்ந்தது. நேரம் ஆக ஆக உண்மையான போராட்டக்காரர்கள் யார் என அடையாளம் காண முடிந்தது. பொழுது கழிக்கவந்தவர்கள் விலகினார்கள். அப்போது மாலை நான்கு மணியளவில் இசையமைப்பாளர் நடிகர் ஜி.வி.பிரகாஷ், நாங்கள் நடத்திய போராட்டக்களத்துக்கு வந்து,“ஒருநாள் போராட்டமாக இதை நிறுத்திவிடாதீர்கள், மாணவர்களே... ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கும்வரை போராட்டம் நிற்கக் கூடாது” என உத்வேகம் அளித்தார். 

ஜனவரி 18-ஆம் தேதி தொடங்கிய போராட்டம், இரவு பகல் என ஜல்லிக்கட்டுக்குத் தடை நீங்கும்வரை தொடர்ந்தது. போராட்டத்தின் மூன்றாம் நாள் இயக்குநர் தங்கர்பச்சான் வந்து எங்களுக்கு ஆதரவளித்தார். ஜனவரி 18 முதல் 23 வரை அரையும்குறையுமாய்ச் சாப்பிட்டு, கொசுக்கடியிலும் இரவு குளிரிலும் வீதியிலேயே படுத்து உறங்கினார்கள் உண்மைப் போராளிகள். அனைவருக்கும் உண்ண உணவு, குடிக்கத் தண்ணீர் என யார் உதவியையும் எதிர்பாராமல் நாங்களே அனைத்தையும் செய்துகொண்டோம். போராட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்தோம்... அது மட்டுமன்றி, வெளிநாட்டு குளிர்பானங்கள் விற்பனைக்கு எதிராகவும் களமிறங்கினோம். போராட்டம் நடக்கும் இடத்தில் குப்பை அள்ளுவதைக்கூட இழிவென நினைக்காமல் நாங்கள் போடும் குப்பைகளைத் நாங்களே சுத்தம் செய்துகொண்டோம். அந்தக் கல்லூரி வாசலின் முன்னால் நாங்கள் போராட்டம் நடத்தியிருக்காவிட்டால்கூட, ஜல்லிக்கட்டுக்கான தடை நீக்கப்பட்டிருக்கும். ஆனாலும், தமிழன் என்ற முறையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாங்களும் போராடினோம் என்பது வாழ்வில் மறக்க முடியாத ஒரு சம்பவமாகிவிட்டது.