Published:Updated:

டெல்லி போராட்டத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் மரணம்!

டெல்லி போராட்டத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் மரணம்!
டெல்லி போராட்டத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் மரணம்!
டெல்லி போராட்டத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் மரணம்!

புதுடெல்லி: டெல்லியில் மாணவி பாலியல் பலாதகாரம் செய்யப்பட்டதற்கு நியாயம்  கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது காயமடைந்த போலீஸ் கான்ஸ்டபிள்  உயிரிழந்துள்ளார்.

கடந்த ஞாயிறன்று டெல்லி இந்தியா கேட் அருகே நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை  வெடித்தது.போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது,அவர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

##~~##
இதில் சுபாஷ் சந்த் டோமர் (47) என்ற கான்ஸ்டபிள் படுகாயமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லி ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் தீவிர  சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை  பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்.
உயிரிழந்த சுபாஷ் சந்த், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர் ஆவார்.  பட்டாதாரியான அவர், டெல்லி கராவல் நகர் பகுதி காவல் நிலையத்தில் பணியாற்றி   வந்தார்.இறந்த போலீஸ்காரர் சுபாஷ் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்  செய்யப்படும்  என்று டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது.
இதனிடையே இந்தியா கேட் பகுதியில் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 9  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை முயற்சி,  பொதுச்சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு  செய்யப்பட்டது. தற்போது கான்ஸ்டபிள் பலியானதைத் தொடர்ந்து கொலை வழக்காக  மாற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தில் இதுவரை 140 பேர்  காயம் அடைந்துள்ளனர்.அவர்களில் 65 பேர் போலீஸ்காரர்கள் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஞாயிறு அன்று நடந்த போராட்டத்தில் 12 டெல்லி மாநகர  பேருந்துகளும், 12 தனியார் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கூறும் போது, "நாங்கள் அமைதியான வழியில்  ஆர்ப்பாட்டம் நடத்தினோம். போலீசார் தான் தேவையில்லாமல் தடியடி, கண்ணீர் புகை  குண்டுகளை வீசி பதட்டத்தை உருவாக்கினார்கள். வன்முறை சம்பவங்களுக்கு  போலீசாரே காரணம்'' என்று குற்றம் சாட்டினார்கள். போலீஸ் தரப்பில் கூறுகையில்,  மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி விட்டனர்.
இதனால் வன்முறையாக மாறியது என்றனர்.
இதற்கிடையே டெல்லியில் போராட்டம் நீடித்து வருவதால் டெல்லியில் ஜந்தர் மந்தர்  தவிர மற்ற அனைத்து பகுதியிலும் 144 தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியா கேட் பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டன.  போராட்டக்காரர்கள் வருவதை தடுக்க டெல்லியில் உள்ள 9 மெட்ரோ ரெயில்  நிலையங்களில் ராஜீவ் சவுக் தவிர மற்ற 8 ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்தியா கேட்டில் போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் மாணவ-  மாணவிகள்  ஜந்தர் மந்தரில் குவிந்துள்ளனர்.அந்த இடத்தைச் சுற்றிலும் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.