கொல்கத்தா: டிஸ்கொத்தேக்களுக்கு சென்றுவிட்டு, போராட்டத்தில் கலந்துகொள்வது பெண்களுக்கு ஃபேஷன் ஆகிவிட்டது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகனும், காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஜித் முகர்ஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இவ்வாறு கூறிய அவர், நன்றாக வர்ணம் பூசிக்கொண்டும்,பல்லைக் காட்டிக்கொண்டும் போராட்டத்தில் பங்கேற்ற அந்த பெண்கள், முதலில் டிஸ்கொத்தேகளுக்கு செல்வார்கள்.
பின்னர் டெல்லி பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொள்வார்கள். இதில் பெரும்பால பெண்கள் அடிப்படை எதார்த்தங்களுடன் தொடர்பு இல்லாதவர்கள்.
டெல்லியில் நடைபெற்ற போராட்டம் உண்மையில் எகிப்து அல்லது வேறு நாடுகளில் நடைபெற்ற (புரட்சி) போராட்டம் போன்றதல்ல.இந்தியாவில் கைகளில் மெழுகு திரி ஏந்தி பேரணியாக செல்வது டிஸ்கொத்தேக்களுக்கு செல்வது போன்று ஆகிவிட்டது.
இதையெல்லாம் நாம் நமது பள்ளி பருவத்தில் கூட செய்துள்ளோம்.நாங்களும் மாணவர்களாக இருந்துள்ளோம்.மாணவர்களின் குணாதிசயம் என்ன என்பது எனக்கு நன்றாக தெரியும்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் நல்ல வர்ணம் பூசிக்கொண்ட பல நல்ல அழகான பெண்களை என்னால் பார்க்க முடிந்தது.அவர்கள் தொலைக்காட்சிகளுக்கு பேட்டியளித்தார்கள்.அவர்கள் தங்களது பிள்ளைகளை கூட டி.வி.-யில் காட்டுவதற்கு அழைத்து வந்தனர்.
எனவே போராட்டத்தில் பங்கேற்றவர்கள் உண்மையில் மாணவிகள்தானா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.ஏனெனில் அந்த வயதில் எந்த பெண்ணுக்கு மாணவியாக இருக்க மாட்டார்" என்றார்.
இந்நிலையில் ஜனாதிபதியின் மகனின் இந்த பேச்சுக்கு மகளிர் அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து," நன்றாக வர்ணம் பூசிக்கொண்டும்,பல்லைக் காட்டிக்கொண்டும் போராட்டத்தில் பங்கேற்றனர்" என்ற வார்த்தையை திரும்ப பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
டெல்லியில் பாலியல் பலாத்காரத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மாணவ்,மாணவிகள் ஜனாதிபதி மாளிகை முன்னர் முற்றுகையிட்டதோடு, ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தனர்.ஆனால் கடைசி வரை ஜனாதிபதி அவர்களை சந்திக்கவே இல்லை.இதுவும் சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.