Election bannerElection banner
Published:Updated:

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே முற்றும் மோதல்!

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே முற்றும் மோதல்!
சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே முற்றும் மோதல்!

சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியருக்கும் மாணவர்களுக்கும் இடையே முற்றும் மோதல்!

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைத்தலைவர் ரவீந்திரன், கல்லூரியில் வகுப்புகளுக்கே வருவதில்லையென்றும் தனது மாணவர்களை வேண்டுமென்றே தேர்வில் தோல்வியடையச் செய்வதாகவும், மாணவர்கள்மீது சாதிச் சாயல் பூசி வருவதாகவும் அப்பல்கலைகழக  மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுபோன்ற புகார்களை முன்வைத்து அத்துறையைச் சார்ந்த மாணவர்கள் அவரை எதிர்த்து கல்லூரி வளாகத்தில் நேற்று  போராட்டத்தில் குதித்தனர். நேற்று இரவும் போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்கள் இன்றும் அங்கேயே அமர்ந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தைப்பற்றி அறிய சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு விரைந்து மாணவர்களிடமும், பேராசிரியர் ரவீந்திரனிடமும் பேசினோம்.

பேராசிரியர் ரவீந்திரனை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒருவரான மாணிக்கத்திடம் பேசியபோது, "ஒரு மாணவன் ஒரு செமெஸ்டரில் 75%  அட்டெண்டன்ஸ் இருந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும். எங்கள் பேராசிரியர் ரவீந்திரன் எங்களுக்கு ஒரே செமெஸ்டரில் இரண்டு பாடங்களை நடத்தினார். இரண்டு பாடங்களையும் சேர்த்து மொத்தம் 60 வகுப்புகள் உள்ளன. அதில் மொத்தமாகவே வெறும் ஏழே வகுப்புகள் மட்டுமே வகுப்புக்கு வந்தார் ரவீந்திரன். 'இவ்வாறு ஏன் செய்கிறீர்கள்' என்று கேட்ட மாணவர்களைத் தேர்வில் தோல்வியடையச் செய்வதாகச் சொல்லி 'நீங்களெல்லாம் எப்படி பட்டம் வாங்குகிறீர்கள் என்று நான் பார்க்கிறேன்' என்று பேசினார். இந்தச் சம்பவம் குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்தோம். இதை அறிந்த எங்கள் பேராசிரியர், எங்கள் சக மாணவர்களை வைத்தே எங்கள்மீது தாக்குதல் நடத்துகிறார். 

மேலும் பேசிய மாணிக்கம், " எங்களை நக்சலைட் என்றும் தீவிரவாதிகள் என்றும் சக மாணவர்களிடம் கூறிவருகிறார். அந்த மாணவர்களும் எங்களை 'நக்சலைட், தீவிரவாதிகள்' என்று அழைக்கின்றனர். இதுவே பெரும் மனஉளைச்சலைத் தருகிறது. அதுமட்டும் அல்லாமல் எங்கள் தேர்வுத்தாளைத் திருத்தாமலேயே எங்களை ஃபெயில் ஆக்கினார். மறுமதிப்பீட்டிற்காக எங்கள் தேர்வுத்தாளைக் கொடுங்கள் என்று கேட்டால் அப்போதுதான் எங்கள் விடைத்தாளை எடுத்து, மதிப்பெண்பட்டியலில் அவர் எங்களுக்கு அளித்த மதிப்பெண்ணுக்கு ஏற்றவாறு திருத்தினார். இதைப்பற்றி நிர்வாகத்திடம் எடுத்துக்கூறி 32 நாள்கள் ஆகிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் அவர் மீது எடுக்கப்படவில்லை. கிட்டதட்ட தற்கொலை முயற்சி வரை யோசித்துவிட்டோம். அதனால்தான் இன்று தூக்குக் கயிறுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் பேராசிரியர் வளாக இயக்குநராவும், சிண்டிகேட் உறுப்பினராகவும் இருப்பதால் தன்  அதிகாரத்தைப் பயன்படுத்தி தப்பித்துவருகிறார். இவரால் பாதிக்கப்பட்ட நாங்கள் அனைவரும் முதல் தலைமுறை பட்டாதாரிகள். எங்களுக்கான நீதி வழங்கப்படவேண்டும்" என்றார். 
 

ஒருபுறம் பேராசிரியர் ரவீந்திரனுக்கு எதிராக இந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட தொடங்கியதும், பேராசிரியர் ரவீந்திரனுக்கு ஆதரவாக இன்னொரு மாணவர்கள் குழு போராட்டம் நடத்தத் தொடங்கியது. அக்குழுவைச் சார்ந்த  கவித்ரனிடம் பேசியபோது, "எங்கள் பல்கலைக்கழகத்தின்  ஆசிரியர் மன்ற உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும், ம.க.இ.க தூண்டுதலின் பேரிலும் இந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் துறைத் தலைவரின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்" என்று குற்றம் சாட்டினார். 

'இந்த மாணவர்கள் உங்கள்மீது குற்றம்சாட்டுகிறார்களே' எனப் போராட்டம் நடத்திய மாணவர்களிடம் கேட்டபோது, "இந்த மாணவர்கள் ஒருசிலர் பல்கலைக்கழகத்தில் சேருவதற்கு குறுக்குவழியில் உதவியவர் ரவீந்திரன். அதன் காரணமாகவே பேராசிரியர் ரவீந்திரனுக்கு இவர்கள் விசுவாசமாக உள்ளனர். அந்த ஒருசில மாணவர்கள் மற்ற மாணவர்கள் சிலரிடம் பேசி இந்த வெற்றுப் போராட்டத்தை நடத்துகிறார்கள். இந்த மாணவர்கள்தான் எங்களை தீவிரவாதிகள் என அழைத்தவர்கள். எங்களை எதிர்த்து இந்த மாணவர்களை  ஏவிவிட்டு எங்கள் கோரிக்கையையும், போராட்டத்தையும் கொச்சைப்படுத்தும் செயலில் இவர்கள் ஈடுபடுகின்றனர்" என்று பதில் அளித்தனர்.

தன் மீது மாணவர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு விளக்கம் கேட்க பேராசிரியர் ரவீந்திரனை அணுகினோம். "மாணவர்களை நக்சலைட் என்றும் தீவிரவாதிகள் என்றும் நீங்கள் கூறியதாகவும், உங்கள்மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை எதிர்த்து உங்களுக்கு ஆதரவாக மற்றொரு மாணவர்கள் கூட்டம் போராட்டம் நடத்துகிறது. இதை பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டோம்.  "ஒருகூட்டம் மாணவர்கள் கூட்டம்தான். ஆனால், மற்றோரு குழு மாணவர்களா என்றே தெரியவில்லை. இதைப்பற்றி பேச எதுவும் இல்லை." என்றார். 'வகுப்பறைக்கு வாராமல் காலம்கடத்துவதாக தங்கள்மீது புகார் உள்ளதே' என்ற கேள்விக்கு, "நான் வகுப்புக்கு வருகிறேனா இல்லையா என்று கேட்க அவர்களுக்கு அதிகாரம் இல்லை" என்றார்.


இச்சம்பவம் தொடர்பாக மேலும் பல கேள்விகள் கேட்டபோது, அனைத்துக்கும், "நோ கமென்ட்ஸ்" என்று பதிலளித்தார். அதனைத்தொடர்ந்தும் நாம் கேள்விகள் எழுப்பியபோது, ' 'நோ கமென்ட்ஸ்' என்றால் உங்களுக்கு அர்த்தம் புரியாதா? உங்களுக்குத் தகவல் வேண்டும் என்றால் துணை வேந்தரிடமும், பதிவாளரிடமும் பேசிக்கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பிவிட்டார்.

அவரைத்தொடர்ந்து அகாடமிக் டீன் குருசாமி பேசியபோது, 'இது தொடர்பாக மாணவர்களிடமும், பேராசிரியரிடமும் பேசிவருகிறோம். இதைப்பற்றி மேலும் விசாரணை நடத்தி விரைவில் ஒரு முடிவுக்கு வருவோம்", என்றார்.
 

பின்னர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஸ்ரீனிவாசனை சந்தித்துப் பேசினோம். "இது குடும்பத்தில் நடக்கும் தந்தை - மகனுக்குமான பிரச்னை போன்றதுதான். இது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். எனவே, இதுபற்றி தற்போது எதுவும் கூற முடியாது. இன்னும் ஓரிரு நாள்களில் முடிவுக்கு வந்துவிடும்" என்றார். இதைப்பற்றி துணை வேந்தரைச் சந்திக்கும் முயற்சிகளுக்கு பலன் கிட்டவில்லை. 


மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு, சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் இந்த விவகாரத்தின் பின்னணியை தீரவிசாரித்து நடவடிக்கை எடுக்க  வேண்டியது அவசியம்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு