Published:Updated:

திருச்சியில் மே 8ல் மாபெரும் உண்ணாவிரதம்- விவசாய கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு

திருச்சியில் மே 8ல் மாபெரும் உண்ணாவிரதம்- விவசாய கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு
திருச்சியில் மே 8ல் மாபெரும் உண்ணாவிரதம்- விவசாய கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு

திருச்சியில் மே 8ல் மாபெரும் உண்ணாவிரதம்- விவசாய கூட்டு நடவடிக்கைக்குழு அறிவிப்பு

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு  சார்பில், திருச்சியில் வரும் 8-ம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகளின்ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்த அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளரும் இந்திய விவசாய சங்கங்களின் மாநிலத் தலைவருமான குருசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநிலத் தலைவர் விசுவநாதன், தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோர் சங்க மாநிலத் தலைவர் கோபாலகிருஷ்ணன், உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து, காவிரிப் பாசன விவசாய பாதுகாப்பு சங்க நிர்வாகி தனபாலன், கடைமடைப் பாசன விவசாய பாதுகாப்பு சங்கத் தலைவர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, அகில இந்திய கரும்பு விவசாய சங்கத் தலைவர் விருத்தகிரி மற்றும் செல்வம் உள்பட, தமிழகம் முழுவதிலும் இருந்து 40-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் உரிய அவகாசம் கொடுத்தும் மத்திய அரசு, கர்நாடக மாநில அரசுக்கு சாதகமான முடிவை எடுக்கும் வகையில் மேல்முறையீடு செய்தது என்றும், 15 ஆண்டுகளுக்கு மேல்முறையீடே கிடையாது என்று உத்தரவிட்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு மேலும் அவகாசம் வேண்டும் எனக் கேட்டு மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றது எப்படி? என விவாதிக்கப்பட்டது. இதனிடையே, உச்ச நீதிமன்றம் அளித்த காலஅவகாசம் முடிந்ததைத் தொடர்ந்து, உடனடியாக தமிழ்நாட்டுக்கு 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் எனவும், வரைவுத் திட்டத்தைத் தாக்கல்செய்ய மத்திய அரசு சொல்லும் காரணங்களை ஏற்க முடியாது என்றும் உத்தரவிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, வழக்கின் அடுத்த விசாரணையை வரும் 8-ம்  தேதிக்குத் தள்ளிவைத்தார். இதுகுறித்து விவாதித்த விவசாயிகள், 'உச்ச நீதிமன்றம் வழக்கைத் தள்ளிவைத்தது கண்டனத்துக்குரியது' எனக்  கடுமையாகப் பேசினர்.

இறுதியாக, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் குருசாமி, தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப்பாசன மாநில தலைவர் விசுவநாதன் ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், "உச்ச நீதிமன்றம் காவிரி நதிநீர் பிரச்னையில் தனது தீர்ப்பை இறுதிப்பட செயல்படுத்த இயலாத ஒரு சூழ்நிலை வெளிப்படையாகத் தெரிகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில், நாடாளுமன்றம் பெரியதா... சட்டமன்றம் பெரியதா... இல்லை, நீதித்துறை பெரியதா? என்கிற கேள்வி எழுப்பப்படுகிறபோது, இரண்டு அங்கங்களையும் நீதித்துறைதான் சரிப்படுத்த வேண்டும் எனச் சொல்லியிருக்கிறது. ஆனால், நீதித்துறையே நாடாளுமன்றத்துக்கும், நிர்வாகத்துறைக்கும் பின்போகிறது என்பதை தலைமை நீதிபதியின் தலைமையில் இருக்கிற உச்ச நீதிமன்றம் நிரூபித்துக் காட்டியுள்ளது. கீழமைப் பாசன உரிமை என்பது சர்வதேச சட்டத்தின்படியும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும் இந்தியாவில் இயற்றப்பட்டுள்ள நதிநீர் பங்கீட்டு சட்டப்படியும் நிரூபிக்கப்பட்ட ஒன்று.

காவிரி நீர் பிரச்னையில், தமிழகத்தின் உரிமையை உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் கர்நாடக அரசும் பறிப்பதை தமிழக விவசாய சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் போக்கை மக்களுக்கும் எடுத்துச் சொல்லும் வகையில், வரும் 8-ம் தேதி திருச்சியில், அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், மக்கள் அமைப்பு சார்ந்த ஒரு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திட முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு