Published:Updated:

``700 மீட்டர்ல இருந்து குண்டு பாய்ஞ்சது.. இப்போ என் கால் இல்லை!" 21 வயது இளைஞன்

``700 மீட்டர்ல இருந்து குண்டு பாய்ஞ்சது.. இப்போ என் கால் இல்லை!" 21 வயது இளைஞன்
``700 மீட்டர்ல இருந்து குண்டு பாய்ஞ்சது.. இப்போ என் கால் இல்லை!" 21 வயது இளைஞன்

``700 மீட்டர்ல இருந்து குண்டு பாய்ஞ்சது.. இப்போ என் கால் இல்லை!" 21 வயது இளைஞன்

மே 22-ம் தேதி தூத்துக்குடி படுகொலை நாள். துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் இறந்ததாகவும், 105 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல் வெளியானது. ஈவு இரக்கமற்று மக்கள்மீது தொடுக்கப்பட்ட அந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டது 118 பேர் அல்ல... 118 குடும்பங்கள்... துப்பாக்கிச்சூடு நடந்து முடிந்து இன்றோடு 20 நாள்கள் ஆகிவிட்டன. ஃபிபா உலகக்கோப்பை வருகிறது , பிக்பாஸ் சீசன் 2 வரப்போகிறது, இன்னும் சிறிது நாள்களில் துப்பாக்கிச்சூடு நடந்தது என்பதையே நாம் மறந்து விடும் நிலையும் வரும். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன? 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் குண்டடிப்பட்ட 21 வயதான பிரின்ஸ்டன் என்ற இளைஞரின் கால் அகற்றப்பட்டுள்ளது. அத்தோடு அவரின் குடும்ப எதிர்காலமும் கேள்விக்குறியாகியிருக்கிறது. அவரைத் தொடர்புகொண்டு பேசியபோது:-       
 
``நான்  போராட்டத்தில் கலந்துகொள்ளவே இல்லை. போராட்டம் நடந்த அன்று எந்த பஸ்களும் ஓடாததாலேயே நண்பனுடன் பைக்கில் கிளம்பினேன். அன்று எனக்கு இரண்டாவது ஷிஃப்ட் வேலை. அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே செல்லும்பொதே 3-ம் மைல் பாலத்தில் போலீஸ் இருப்பதைப் பார்த்துவிட்டேன். 'டேய் வண்டிய திருப்பிடு போய்டலாம்' என்று சொன்னபோது, 'போலீஸ் போறாங்களான்னு பாப்போம்' என்று சொன்னான். 

 
திடீரென்று நாங்கள் நின்றிருந்த பக்கம் சுட ஆரம்பித்தார்கள். நானும் என் நண்பனும் ஓட ஆரம்பித்தோம். அவனின் காலில் குண்டு உரசிச் சென்றது. திடீரென ஒரு குண்டு என் காலில் பாய்ந்ததில் அதிகளவில் ரத்தம் கொட்டியது. நாங்கள் இருந்த இடத்துக்கும் போலீஸுக்கும் கிட்டத்தட்ட 700 மீட்டர் தூரம் இருக்கும், அவ்வளவு தொலைவில் இருந்து சுட்டிருக்கிறார்கள். என் காலில்தான் குண்டு பாய்ந்திருக்கிறது என்று என்னால் நம்பவே முடியவில்லை. அவர்கள் சுட்டதும் என் காலில் உணர்ச்சியே இல்லை, உயிர் பிழைத்தால் போதுமென்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு எதிரே இருந்த மண்டப தூணில் சாய்ந்துகொண்டேன். ரத்தப்போக்கு அதிகமானது, என்னுடன் வந்த நண்பனிடம் போன் மூலம் இந்த விவரத்தைச் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சுயநினைவு இழந்து மயங்கிவிட்டேன். 


பின்னர், என்னை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவனையில் கொண்டு சேர்த்தான் நண்பன். ரத்தக்குழாயில் அடிபட்டதால் சிறப்பு நிபுணர்கள் மதுரையிலிருந்து வர இரவு 9:30 மணி ஆகிவிட்டது. குண்டை அகற்றிவிட்டால் உணர்ச்சி திரும்பிவிடும் என்றார்கள். அறுவை சிகிச்சை செய்த பிறகு, 'கால் நரம்பெல்லாம் செத்துவிட்டன. காலை நிச்சயம் அகற்றிவிடவேண்டும்' என்று மருத்துவர்கள் கூறி, என் காலை எடுத்து விட்டனர். அமைச்சர் கடம்பூர் ராஜு என்னை சந்தித்தபோது 'நிச்சயம் அரசு வேலை ஏற்பாடு செய்து தருகிறேன் தம்பி. செயற்கை கால் பொருத்தவும் அரசு சார்பில் உதவுகிறேன்' என்று கூறினார். மே 22க்குப் பிறகு என்னை மூன்று முறை நேரில் சந்தித்தபோதும் இதைக் கூறினார். ஆனால், நாள்கள் ஆக ஆக உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. வீட்டுக்கு ஒரே பையன் நான், அப்பா சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டுவார், அம்மா வீட்டை பார்த்துக்கொள்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு தான் என்னை படிக்க வைத்தனர். மெக்கானிக்கல் துறையில் டிப்ளமோ படித்திருக்கிறேன். குடும்ப வறுமை காரணமாக உடனே வேலைக்குப் போய்விட்டேன். இத்தனைக் காலமாக எங்களுக்காக உழைத்த என் அப்பா இப்போது மறுபடியும் ஓட ஆரம்பிச்சுருக்கார். ஒரு கால் இல்லாத எனக்கு யார் வேலைக் கொடுப்பாங்க? யார் பொண்ணு கொடுப்பாங்க? ஒரு நாள் வேலைக்குப் போக நினைத்ததால் என் குடும்பம் 20 வருடம் பின்னால் போய்விட்டது. ஒரு அரசு வேலை கிடைத்தால் கூட போதும், நான் உழைத்து என் குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்" என்கிறார் கண்ணீருடன்.

அடுத்த கட்டுரைக்கு