Published:Updated:

நெடுஞ்சாலைகளில் நிற்கும் லாரிகள்... கொள்ளை, வழிப்பறி பீதியில் டிரைவர்கள்...! #LorryStrike

நெடுஞ்சாலைகளில் நிற்கும் லாரிகள்... கொள்ளை, வழிப்பறி பீதியில் டிரைவர்கள்...! #LorryStrike
News
நெடுஞ்சாலைகளில் நிற்கும் லாரிகள்... கொள்ளை, வழிப்பறி பீதியில் டிரைவர்கள்...! #LorryStrike

தமிழகத்திலிருந்து ஜவுளிகளுடன் புறப்பட்ட லாரிகள், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, அந்த மாநிலங்களில் தொடர்மழை பெய்துவருவதால், சரக்குகளுடன் சென்ற லாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

ந்தியா முழுவதும் சுமார் 90 லட்சம் லாரிகள், கடந்த ஏழு நாள்களாக இயக்கப்படாமல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், சரக்குப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லாரி ஸ்டிரைக் காரணமாக, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த லாரிகளில் உள்ள பொருள்கள், வழிப்பறி கொள்ளையடிக்கப்படும் என்ற பீதியில் டிரைவர்கள், தவித்துக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

`நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளை முற்றிலும் அகற்றிவிட்டு, ஒரே சுங்கக் கட்டணமாக, ஆண்டுக்கு ஒருமுறை ரூ.18,000 கோடியை அரசு பெற்றுக்கொள்ள வேண்டும்; பெட்ரோல், டீசல் விலையை மூன்று மாதத்துக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும் என்பதுடன், ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர வேண்டும், லாரி உள்ளிட்ட மோட்டார் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் ஜூலை 20-ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகள் குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் தொடங்கப்பட்ட ஸ்டிரைக், ஏழாவது நாளாகத் தொடர்ந்து நீடிக்கிறது. 

இதன் காரணமாகத் தமிழகத்தில் சுமார் நான்கரை லட்சம் லாரிகள் உட்பட இந்தியா முழுவதும் உள்ள 90 லட்சம் லாரிகள் இயக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான லாரிகள், சரக்குகளோடு நெடுஞ்சாலைகளின் நடுவழியிலும், தனியார் ஷெட்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன. அரிசி, சர்க்கரை, பருப்பு, தீப்பெட்டி போன்ற வெளிமாநிலங்களுக்குக் கொண்டுசெல்ல வேண்டிய பொருள்களுடன் ஏராளமான லாரிகள், நெடுஞ்சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தவிர, தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறிகள் போன்ற அழுகும் பொருள்களை, குறிப்பிட்ட இடங்களிலிருந்து, அருகில் உள்ள மொத்த சந்தைகளுக்குக் கொண்டுசெல்ல முடியாமல் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், கட்டுமானப் பொருள்கள், ஜவுளிகள் போன்றவையும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் தேங்கிக் கிடக்கின்றன. கட்டடப் பணிகளைத் தொடங்கியவர்கள், லாரிகள் இயக்கப்படாததால் சிமென்ட், மணல் மற்றும் கம்பிகளுக்காகக் காத்துக் கிடக்கும் நிலை உள்ளது. காய்கறிகள் வரத்தும் சந்தைகளில் குறைந்துள்ளது. மேலும், அவை தேக்கி வைக்கப்பட்டுள்ள இடங்களிலேயே காய்கறிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

தமிழகத்திலிருந்து ஜவுளிகளுடன் புறப்பட்ட லாரிகள், கர்நாடகம் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் நிறுத்தப்பட்டுள்ளன. தற்போது, அந்த மாநிலங்களில் தொடர்மழை பெய்துவருவதால், சரக்குகளுடன் சென்ற லாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. லாரிகளின் மேல்பகுதியில் போர்த்தப்பட்டிருந்த 'தார்ப்பாய்கள்' காற்றின் வேகத்தால் கிழிந்துவிட்டன. இதனால், லாரிகளின் மேல்பகுதி மூடப்படாமல் திறந்து கிடக்கின்றன. சரக்குகள் சிதறியும் மழையால் நனைந்தும் பெரும் நஷ்டத்தை உண்டாக்கியுள்ளன. அதேபோல் சரக்கு ரயில்களில் ஏற்றிச் செல்லப்பட்ட பொருள்களை, லாரிகளில் அனுப்ப முடியாததால் ரயில்வே கிடங்குகளில் ஏராளமான பொருள்கள் தேங்கிக் கிடக்கின்றன. லாரிகள் போக்குவரத்து இல்லாததால் நாமக்கல், பெங்களூரு மற்றும் சென்னை பைபாஸ் சாலைகள் கனரக வாகனங்களின் போக்குவரத்து வெகுவாகக் குறைந்து காணப்படுகின்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய லாரி உரிமையாளர்கள், ``லாரிகள் ஸ்டிரைக்கால், பொருள் நஷ்டம் ஏற்பட்டிருப்பதைப் போல டிரைவர்கள், கிளினர்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. லாரி டிரைவர்கள்தான், அவர்கள் ஏற்றிச் செல்லும் பொருள்களுக்கு பொறுப்பானவர்கள். அவர்கள் கொண்டுசெல்லும் சரக்குகளை உரிய இடத்துக்குக் கொண்டுசென்று, அவற்றை சம்பந்தப்பட்டவர்களிடம் சேர்க்கும்வரை அவர்களின் கடமை. டெலிவரி பாய்ன்ட்டில் சரக்குகளுக்கு உரிய `பில்’ தொகையை வாங்கும்வரை ஓட்டுநர்கள் மற்றும் கிளினர்களுக்குப் பொறுப்பு உண்டு. தற்போது லாரி ஸ்டிரைக்கால் அவர்களுக்கு கடுமையான சிக்கல் ஏற்படுகிறது.

லாரிகளில் சரக்குகள் இருப்பதால் டிரைவர்கள் லாரிகளை நிறுத்திவிட்டு வேறு எங்கும் செல்ல முடியாதநிலை உள்ளது. லாரியிலேயே ஓட்டுநர்களும் உதவியாளர்களும் தங்கியுள்ளனர். லாரியில் உள்ள சரக்குகளை அவர்கள் மாறி, மாறி காவல் காக்க வேண்டியுள்ளது. 'லாங் ரூட்டில்' போய்த் திரும்பும்வரை, அவர்களின் செலவுக்குக் கொடுத்து அனுப்பும் பணத்தையும் பாதுகாத்து, லாரியில் உள்ள பொருள்களையும் பாதுகாப்பதுடன், மழையில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். 

கேரள எல்லையில் லாரி கிளீனர் அடித்துக்கொல்லப்பட்டது, தருமபுரியில் டிரைவர் பெருமாள், நெல்லூரிலிருந்து கேரளாவுக்கு அரிசி ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநர் சின்னா, குஜராத்தில் சேலம் வந்த ராஜ்குமார், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மொய்னுதீன் என்று வரிசையாக லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்கள் தாக்குதலுக்கு ஆளாகும் சம்பவங்களும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. பல இடங்களில் லாரிகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன.

லாரிகள் நடுவழியில் நின்றுகொண்டிருப்பதால், ஓட்டுநர்கள், கிளினர்களின் பாதுகாப்பையும் தாண்டி, சரக்குகளுக்கும் பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. வழிப்பறி, கொள்ளைச் சம்பவங்களும் நடந்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. எனவே, லாரி உரிமையாளர்களை அழைத்துப் பேசி ஸ்டிரைக்குக்கு மத்திய - மாநில அரசுகள் முடிவுகட்ட வேண்டும்" என்றனர்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தென் மண்டல தலைவர் டாக்டர் ஏ.சக்திவேல், 

``தற்போதைய சந்தை நிலைமைகள் காரணமாக, டெலிவரிக்கான நிபந்தனைகளுடன்தான் பையர்கள் ( Buyers) ஆர்டர்கள் கொடுக்கின்றனர். இரண்டு அல்லது மூன்று நாள்கள் தாமதமானாலும்கூட, ஏற்றுமதியில் இந்தியாவுக்குப் போட்டி நாடுகளாகவும் குறைந்த விலையில் விரைவாக டெலிவரி செய்யக்கூடிய திறன் உள்ளவையாகவும் திகழ்கின்ற வங்கதேசம், வியட்நாம், இலங்கை போன்ற நாடுகளில் ஏதாவது ஒன்றை பையர்கள் தேர்வு செய்து, அங்கு ஆர்டர்களைக் கொடுத்துவிடுகிறார்கள். இதனால், ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.

லாரி ஸ்டிரைக் எப்போது முடிவுக்கு வரும் என்ற நிச்சயமற்ற நிலையால், பல்வேறு தொழிற்சாலைகள் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வருகின்றன. இந்தப் போராட்டம் இந்தியாவின் ஏற்றுமதி வருமானத்தை மட்டும் பாதிக்காமல், வேலையில்லா திண்டாட்டத்தையும் ஏற்படுத்திவிடும்" என்று எச்சரிக்கிறார்.

முன் எப்போதையும்விட இந்த முறை லாரி ஸ்டிரைக், எதிர்பார்த்ததைவிடவும் அதிக விளைவுகளை உண்டாக்கியுள்ளது.