Published:Updated:

மோட்டார் வாகனங்கள் வேலைநிறுத்தம்... என்ன காரணம்?! #Strike

மோட்டார் வாகனங்கள் வேலைநிறுத்தம்... என்ன காரணம்?! #Strike
மோட்டார் வாகனங்கள் வேலைநிறுத்தம்... என்ன காரணம்?! #Strike

இது வெறும் மோட்டார் வாகனத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான பிரச்னை மட்டுமல்ல, வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரின் பிரச்னையும்தான் என்கிறார், தமிழ்நாடு இருசக்கர வாகனப் பழுதுபார்ப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜானகிராமன். 

நாடு முழுவதும் இன்று நடந்துவரும் 24 மணி நேர மோட்டார் வாகனத் தொழில்நிறுத்தத்தால், 10 கோடி வாகனங்கள் இயக்கப்படவில்லை. காரணம், மோட்டார் வாகனச் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்த மசோதாதான்! அண்மைக்காலமாக நிகழ்ந்துவரும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துவருகிறது; அதைக் கட்டுப்படுத்துவதே புதிய சட்டத்திருத்தத்தின் முக்கிய நோக்கம் என்று மத்திய அரசு கூறுகிறது. 

முப்பதாண்டுகளுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம், 1998-ஆனது, நீண்டகாலமாகத் திருத்தப்படாமல் இருப்பதாகவும் அதன்படி புதிய திருத்தங்களைக் கொண்டுவருவது அவசியம் என்றும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதியன்று மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம்செய்யும் மசோதாவானது, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் ஆளும் கட்சிக்கு பலமில்லாத நிலையில் அந்த மசோதாவை நிறைவேற்றமுடியவில்லை. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதாதளம், இடதுசாரி கட்சிகள் உட்பட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அந்தச் சட்டத்தை எப்படியும் நிறைவேற்றியே தீருவது என மத்திய அரசு விடாப்பிடியுடன் இருந்து வருகிறது. 

இந்நிலையில் அகில இந்திய மோட்டார் போக்குவரத்து அமைப்புகள் ஒன்று திரண்டு, ஆகஸ்ட் 7 அன்று நாடு முழுவதும் ஒரு நாள் தொழில்நிறுத்தம் செய்வது என முடிவுசெய்தனர். விபத்துகளைக் குறைப்பதற்காகத்தான் புதிய மசோதா எனக் கூறப்படுவதில் உண்மை இல்லை; கோடிக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய மோட்டார் போக்குவரத்துத் தொழிலை நசிவடையச் செய்யவே இது பயன்படப்போகிறது என்கிறார்கள், மோட்டார்வாகனத் தொழிலில் உள்ளவர்கள். 

வழக்கத்தைவிட அதிக அளவில், இந்த வேலைநிறுத்தத்துக்கு இருசக்கர வாகன மெக்கானிக்குகள், ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள், லாரி ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், பெரிய பெட்டக வண்டிகளை ஓட்டுபவர்கள் எனப் பல தரப்பினரும் ஒன்றிணைந்திருப்பது, இந்தத் தொழில்நிறுத்தத்தின் முக்கியத்துவம் ஆகும். 

புதிய திருத்தம் நடைமுறைக்கு வருமானால், தனியார் நிறுவனங்கள் மூலம்தான் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்; அதில் அந்த நிறுவனம் `திருப்தியடையவேண்டும்’ எனும் விதி சேர்க்கப்பட்டுள்ளது. `திருப்தியில்லை’ எனப் பல முறை திருப்பி அனுப்பி, பலமுறை பணம் பறிக்கவே வழி ஏற்படும். கஷ்டப்பட்டு பெறப்படும் ஓட்டுநர் உரிமத்தை எளிதாகப் பறிக்கவும், தகுதிநீக்கம் செய்யவும் இம்மசோதாவில் வழிசெய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றம் ஒரு தண்டனை, பின் மீண்டும் திருந்தி வாழ்தல் என்பதுதான் இந்தியச் சட்ட நடைமுறையாகும். இதைப் புதிய திருத்தம் மறுக்கிறது” என்று தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு), மாநிலப் பொதுச் செயலாளர் சிவாஜி அதிருப்தி கருத்துத் தெரிவித்துள்ளார். 

இப்போது வாகனங்களில் பழுது ஏற்பட்டால் நமக்கு ஏற்ற மெக்கானிக்கிடம் பழுதைநீக்கக் கொடுக்கிறோம்; கையில் இருக்கும் பணத்தைப் பொறுத்து தேவையான அளவு மட்டும் சரிசெய்து வாங்கிக்கொள்கிறோம். இனி அப்படியெல்லாம் நம்முடைய பொருளாதாரநிலைக்கு ஏற்ப பழுதை நீக்கமுடியாது என்கிறார், ஏஐடியுசி ஆட்டோ சங்கத்தின் பொதுச்செயலாளர் மாரியப்பன். 

``சாலையோரமும் குடியிருப்புகளுக்கு அருகிலும் இருக்கின்ற மெக்கானிக்குகளிடம் வாகனங்களைப் பழுதுநீக்கக் கொடுத்துவந்தது இனிமேல் நடக்காது. எந்த வாகன நிறுவனத்திடம் வாங்கினோமோ அதே நிறுவனத்தின் சர்வீஸ் மையங்களில் மட்டுமே பழுதைநீக்கி  விடவேண்டும். அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தே ஆகவேண்டும். இனிமேல் தனியார் நிறுவனங்களிடமே லைசன்ஸ், எஃப்.சி.. போன்றவை பெறமுடியும் என ஆக்கிவிட்டால், எதற்காக அரசாங்கம் அதற்கென ஒரு வாகனப் போக்குவரத்துத் துறை (ஆர்.டி.ஓ) எல்லாம் வேண்டும்?” எனப் பொங்குகிறார், மாரியப்பன். 

இது வெறும் மோட்டார் வாகனத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான பிரச்னை மட்டுமல்ல, வாகனம் ஓட்டும் ஒவ்வொருவரின் பிரச்னையும்தான் என்கிறார், தமிழ்நாடு இருசக்கர வாகனப் பழுதுபார்ப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜானகிராமன். 

``இதுவரையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்தான் வாகனத் தகுதிச் சான்றிதழ் எஃப்.சி., லைசன்ஸ் வழங்கிவருகிறார்கள். இனி, வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும் எனக் கொண்டுவருகிறார்கள். அதாவது, அவர்களே எஃப்.சி. செய்துதருவதுதான். அவர்களின் சர்வீஸ் மையங்களில்தான் பழுதுநீக்கம் செய்யவேண்டும் எனக் கூறுவதால், சாலையோரம் இருக்கக்கூடிய, சிறிய பகுதிகளில் சுயதொழிலாகச் செய்யக்கூடிய மெக்கானிக் மையங்களை மூடிவிட்டுத்தான் போகவேண்டும்.  தமிழ்நாட்டில் மட்டும் 5 லட்சம் பேர் இதனால் நேரடியாக பாதிக்கப்படுவார்கள். இதைச் சார்ந்து இருக்கக்கூடிய பெயின்டர், வெல்டர், லேத் வேலை, டிங்கரிங் போன்ற தொழில்களைச் செய்வோர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்படும். இதைப்போலத்தான் மூன்று சக்கர, நான்கு சக்கர மெக்கானிக்குகளின் நிலைமையும் மோசமடையும். நாங்கள் சாதாரணமாக 500 ரூபாயில் செய்துதரும் வேலைகளை பல மடங்கு கூலிவைத்துதான், கட்டாயம் அவர்கள் செய்வார்கள். இதனால் வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இழப்புதான். விபத்துகளுக்குக் காரணம், சின்ன பைக்குகளில் அதிவேக எந்திரங்களை மெக்கானிக்குகள் மாற்றித்தருவதுதான் என்று கூறிவருகிறார்கள். இப்போதெல்லாம் பந்தயத்தில் போகக்கூடிய அளவுக்கு 400 சிசி, 500 சிசி பைக்குகளை எல்லாம் வாகன நிறுவனங்களே சந்தையில் விடுகின்றன. இதைப் போன்ற பல பிரச்னைகளை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, மோட்டார் வாகனத் தொழிலில் உள்ள கோடிக்கணக்கானவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில் மண் அள்ளிப்போட முயல்கிறார்கள்” என வேதனையோடு சொல்கிறார், ஜானகிராமன். 

சில ஆண்டுகளாக ஓலா, உபெர் போன்ற பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் ஏராளமான கார்கள் கொண்டுவரப்பட்டுள்ளன; சென்னையில் மட்டும் ஏறத்தாழ 50 ஆயிரம் கார்கள் அவர்களின் கீழ் இருக்கின்றன; ஒவ்வொரு வாடகையிலிருந்தும் அந்த நிறுவனங்களுக்கு மட்டும் 26% தொகை போய்ச்சேர்கிறது; இப்போதைக்குப் பயணிகளுக்குக் குறைவான கட்டணம் போலத் தெரிந்தாலும் தனித்தனி டாக்சிகள் என்பன முற்றிலும் அழிக்கப்பட்டு ஓரிரு நிறுவனங்களின் கைக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதால், எப்போதும் வாடகைக் கட்டணம் உயர்த்தப்படலாம்; யாரும் கேள்விகேட்கமுடியாது எனும் நிலைதான் உள்ளது; இதையெல்லாம் ஒழுங்குபடுத்தாத மத்திய அரசு, பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக புதிய மசோதாவைக் கொண்டுவருவது கண்டிக்கத்தக்கது என்கிறார், தமிழ்நாடு மோட்டார் வாகனச் சம்மேளன மாநிலப் பொருளாளர் வி.குப்புசாமி. 

இத்துடன், மாநில அரசுகளிடம் இருந்துவரும் போக்குவரத்து வாகனத் துறையின் கட்டுப்பாட்டையும் மத்திய அரசு இச்சட்டத் திருத்தத்தின் மூலம் கைப்பற்றமுயல்கிறது என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு