Published:Updated:

ஸ்டெர்லைட் ஆலை: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?- வைகோ அறிக்கை

 ஸ்டெர்லைட் ஆலை: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?- வைகோ அறிக்கை
ஸ்டெர்லைட் ஆலை: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?- வைகோ அறிக்கை
 ஸ்டெர்லைட் ஆலை: உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன?- வைகோ அறிக்கை

சென்னை:  ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்பது குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை எனும் நாசகார நச்சு ஆலையை அகற்ற வேண்டும் என்று நடைபெறும் தர்ம யுத்தத்தில் 2010 செப்டம்பர் 28-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் திலிப்பி தர்மாராவ் அவர்கள் அமர்வு ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தந்த தீர்ப்பை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால தடை ஆணை பெற்றது. அந்த வழக்கு கடந்த 2012 நவம்பர் 6 ஆம் தேதி வரை முப்பது அமர்வுகள் நடைபெற்று நீதிபதிகள் பட்நாயக், கோகலே அமர்வு இறுதித் தீர்ப்பை ஏப்ரல் 2 ஆம் தேதி வழங்க இருக்கிறது.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 1 ஆம் தேதி) உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில்,  மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை மார்ச் 30 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூடச் செய்துள்ளது என்பதை இந்த நீதிமன்றத்தில் அறிக்கையாகப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு நீதிபதி பட்நாயக் அவர்கள், “ஸ்டெர்லைட் குறித்த தீர்ப்பு ஹோலிப் பண்டிகை விடுமுறைக்கு முன்பே எழுதப்பட்டுவிட்டது. எனவே, இப்பொழுது இதுகுறித்த அறிக்கை எதுவும் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை,” என்றார். உடனே வைகோ நீதிபதி அவர்களிடம், “நான் நடந்ததைக் கூற விரும்புகிறேன்,” என்றார்.

##~~##
“மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில், ஸ்டெர்லைட்ஆலையிலிருந்து வெளியேறிய கந்தக டை ஆக்சைடு நச்சுப் புகையால் தூத்துக்குடி மக்கள் கடற்கரை ஓரத்திலும், பல இடங்களிலும் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிக்கு ஆளானார்கள். ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்தது. தூத்துக்குடி மாநகரின் அனைத்துக் கடைகளையும் வியாபாரிகள் மூடிவிட்டனர். மீனவர்கள் கடலில் தொழிலுக்குச் செல்லவில்லை. ஆயிரக்கணக்கானோர் போராடி கைதானோம். நானும் அதில் பங்கேற்றேன். மார்ச் 30 ஆம் தேதி அன்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மூலம் ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிவிட்டது என்பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்,” என வைகோ குறிப்பிட்டார்.
அதற்கு நீதியரசர் பட்நாயக் அவர்கள், பத்திரிகைகளில் பார்த்தோம் என்று சொன்னதோடு, “தீர்ப்பு ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது; சுற்றுச் சூழலைக் கண்காணிப்பதற்கும் அதுகுறித்து எவ்விதமான ஆணைகளைப் பிறப்பிப்பதற்கும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அனைத்து அதிகாரங்களும் உண்டு என்பதையும் நாங்கள் குறிப்பிட்டு இருக்கிறோம்,” என்றார்.