Published:Updated:

கூடங்குளம் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுடைய குடும்பங்களின் தற்போதைய நிலை என்ன? #VikatanExclusive

கூடங்குளம் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுடைய குடும்பங்களின் தற்போதைய நிலை என்ன? #VikatanExclusive
கூடங்குளம் போராட்டத்தில் உயிர்நீத்தவர்களுடைய குடும்பங்களின் தற்போதைய நிலை என்ன? #VikatanExclusive

``அப்பா இந்த மக்களுக்காக உசுர விட்டாங்க. நாங்களும் இந்த மக்களுக்காகத்தான் எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக்கிட்டு வாழறோம். ஆனா, இந்த அரசாங்கம் இன்னும் அணு உலையை நிரந்தரமா மூடவேயில்லே”

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

"இப்போ நினைச்சாலும் கண்ணுக்குள்ள நெருப்பு எரியுதுங்க. ஆறு வருஷம் உருண்டோடிச்சு. எங்க மக்களுக்காகவும் நிம்மதியான வாழ்வாதாரத்துக்காகவும் நான் இழந்தது அந்த ஆண்டவராலும் திருப்பிக்கொடுக்க முடியாதது. எத்தனை ஆயிரம் கோடி கொடுத்தாலும் திரும்பக் கிடைக்காத அம்மா என்கிற சொத்து. கடலுக்கு நடுவில இருந்தாலும், கரைக்குத் திரும்பினாலும் அம்மா நினைப்பு நீங்காமலே இருக்கு'' எனக் கண்ணீருடன் தொடங்குகிறார் மிச்சேல் சேவியர் லாம்பர்ட்.

கூடங்குளத்தில் அணு உலைப் போராட்டம் நடந்து இன்றுடன் சரியாக 6 ஆண்டுகள் ஆகின்றன. போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் பல்வேறு துயரங்களைச் சந்தித்தனர். அணு உலை மற்றும் அணுக்கழிவுகளால் தங்கள் சந்ததியினர் புதையுண்டு போவதை தடுக்கப் போராடியவர்களில், அந்தோணி ராஜ், சகாயம், ராஜசேகர் மற்றும் ரோஸ்லின் ஆகியோர் தங்கள் மூச்சையும் தியாகம் செய்தனர்.

"அந்தப் போராட்டத்தில் இறந்துபோன 4 பேரில் என் அம்மா மட்டும்தான் பொம்பளை. அப்போ நான் மும்பையில வேலை பார்த்துட்டிருந்தேன். எப்போதுமே போராட்டப் பந்தலிலிருந்துதான் அம்மா எனக்கு போன் பண்ணும். அங்க போகும்போதெல்லாம் என் அண்ணன் பிள்ளைகளையும் அழைச்சுட்டுப் போயிடுமாம். அன்னைக்கும் அப்படித்தான் புள்ளைங்களைத் தூக்கிட்டுப் போயிருக்கு. போராட்டம் பெரிய அளவுல நடக்கப்போகுதுன்னு தெரிஞ்சும் பிள்ளைகளைத் தூக்கிட்டுப் போனதுதான் அம்மா செஞ்ச தப்பு. ஓரளவுக்கு அமைதி வழியில் போயிட்டிருந்த போராட்டம், கலவரமா ஆச்சு. எல்லோரும் கிடைச்ச இடத்துக்குத் தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடியிருக்காங்க. அம்மா குழந்தைகளை வெச்சிருந்ததால வேகமா ஓடமுடியலை. போலீஸ் புடிச்சு வெச்சு அடிச்சிருக்கு. அம்மாவோடு போனவங்க எப்படியோ புள்ளைகளை மட்டும் தூக்கிட்டு வந்துட்டாங்க. கலவரம் முடிஞ்சதும் அண்ணன், தங்கச்சி, தம்பி என ஆளாளுக்கு ஒரு மூலையில் அம்மாவைத் தேடியிருக்காங்க. விஷயம் தெரிஞ்சு நானும் காலையிலயே ஊருக்கு வந்துட்டேன். அன்னைக்கு நைட் நியூஸ்ல, அம்மாவை போலீஸ் கைது பண்ணி அழைச்சுட்டுப் போறதைப் பார்த்தோம். 3 மாசம் ஜெயில். அங்கே போலீஸ் என்ன பண்ணினாங்களோ தெரியலை, அம்மா ரொம்ப வீக் ஆகிட்டாங்க. போராடி வெளியில கொண்டுவந்தோம். மதுரை கோர்ட்டுல ஒரு மாசத்துக்குக் கையெழுத்துப் போடணும். அதிலேயே உடம்பு சரியில்லாம ஆகி ஆஸ்பத்திரியில சேர்த்தோம். ஆனாலும், பலனில்ல. துடிதுடிச்சு இறந்துட்டாங்க” என விசும்புகிறார் மிச்சேல் சேவியர்.

சிறு வயதிலேயே தந்தையை இழந்த குடும்பத்தை, ரோஸ்லின்தான் கூலி வேலை செய்து காப்பாற்றியிருக்கிறார். ``ஒரு வேளை கஞ்சி குடிச்சாலும் பரவாயில்லை. நம்ம மக்களுக்கு ஒண்ணுன்னா உசுரைக் கொடுக்கவும் தயங்கக் கூடாது'னு அம்மா சொல்லும். கடைசியில் மக்களுக்காகவே மூச்ச நிறுத்திடுச்சு” என்றவர், மேற்கொண்டு பேசமுடியாமல் கதறுகிறார்.

இடிந்தகரையைச் சேர்ந்த தர்மத்தாய், இதே போராட்டத்தில் தந்தையை இழந்தவர். "காலையிலிருந்து வீடே அமைதியா கெடக்கு. அம்மா அப்பாவை நெனச்சு அழுதுட்டே இருந்துட்டு, இப்போதான் பீடி கம்பெனிக்குக் கிளம்பினா. திரும்பிவர நேரம் ஆவும். அதுக்குள்ள பேசிடறேன். அம்மா இருக்கும்போது பேசினா ரொம்ப வருத்தப்படும்” என்றபடியே தொடர்கிறார்.

"அப்போ எனக்கு 21 வயசு. என் மூத்த மகன் வயித்துல இருந்தான். நாங்க 5 பொம்பளைப் பிள்ளைக. அம்மா பீடி சுத்தியும், அப்பா கடலுக்கும் மரம் வெட்டும் வேலைக்கும் போய் எங்களை வளர்த்தாங்க. சின்ன வயசிலிருந்தே அணு உலைக்கு எதிரான போராட்டங்களைப் பார்த்து வளர்ந்தவங்க நாங்க. அதனால்தான், வாயும் வயிறுமா இருக்கும்போதும், தங்கச்சிகளோடும் அப்பாவோடும் போராட்டத் திடலுக்குப் போயிருவேன். அப்படித்தான் அன்னிக்கு நடந்த போராட்டத்திலும் கலந்துக்கிட்டோம். அது பெரிய கலவரமாகும்னு யாருமே எதிர்பார்க்கலை. போராட்டத் திடலிலேயே போலீஸ் அப்பாவை பயங்கரமா அடிச்சாங்க. கைது பண்ணி வேனில் ஏத்திட்டுப் போனாங்க. அப்பவே அவருக்கு உடம்பு சரியில்லாமப் போயிடுச்சு. 10 நாள் ஜெயில்ல இருந்தப்போ கிட்னி ஃபெயிலியர். சீரியஸானதும் போலீஸ்காரங்களே வீட்டுக்கு அனுப்பிவெச்சுட்டாங்க. வீட்டுக்கு வந்த ரெண்டாவது நாளே எங்களை விட்டுப் பிரிஞ்சிட்டாரு. ஒட்டுமொத்த குடும்பமே உடைஞ்சுப் போயிருந்தோம். ஆறு வருஷமாகியும் இன்னும் அந்த நினைவிலிருந்து அம்மா மீண்டுவரலை. அப்பா இருக்கும்போது எனக்கு 20 பவுன் நகை போட்டு கல்யாணம் பண்ணிவெச்சாங்க. இப்போ, ரெண்டாவது தங்கச்சிக்கு 5 பவுன்தான் போட்டோம். இன்னும் 3 தங்கச்சிகளை எப்படிக் கட்டிக்கொடுக்கப் போறோம்னு நினைச்சு அம்மா தூங்கறதே இல்லே. அப்பா இந்த மக்களுக்காக உசுர விட்டாங்க. நாங்களும் இந்த மக்களுக்காகத்தான் எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக்கிட்டு வாழறோம். ஆனா, இந்த அரசாங்கம் இன்னும் அணு உலையை நிரந்தரமா மூடவேயில்லே” எனப் பொருமுகிறார் தர்மத்தாய்.

கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அந்த 4 பேர் மட்டும் தியாகிகள் இல்லை. அவர்களின் நினைவுகளைச் சுமந்துகொண்டு இத்தனை ஆண்டுகளாக வறுமையில் வாடும் குடும்பத்தினரும் தியாகச் சுடர்களே! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு