Published:Updated:

“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”

“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”

பி.ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன் , படங்கள்: ஏ.சிதம்பரம்

“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”

பி.ஆண்டனிராஜ், இ.கார்த்திகேயன் , படங்கள்: ஏ.சிதம்பரம்

Published:Updated:
“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”
பிரீமியம் ஸ்டோரி
“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”

23 வருடங்களாகக் கனன்று கொண்டிருந்த எதிர்ப்பு, இப்போது காட்டுத்தீயாகப் பரவத் தொடங்கியிருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்கத்தை எதிர்த்து மார்ச் 24-ம் தேதி லட்சக்கணக்கில் திரண்ட மக்கள் திரளால் தூத்துக்குடியைத் தமிழகமே உற்றுக் கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. ஸ்டெர்லைட் தொழிற்சாலை மீது மக்களுக்கு ஏனிந்தக் கோபம்?

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘வேதாந்தா ரிசோர்ஸஸ்’ நிறுவனத்துக்கு ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல இடங்களில் தாமிரத்தாதுவை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு தாதுக்களிலிருந்து தாமிரத்தைப் பிரித்தெடுக்கும் உருக்காலை அமைக்க இந்தியாவில் இடம் தேடினார் வேதாந்தா நிறுவனத்தின் உரிமையாளர் அனில் அகர்வால். அவர் முதலில் சென்றது குஜராத். ஆனால் அங்கே மாநில அரசின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. அடுத்து கோவாவுக்குச் சென்றார். அங்கும் இடமில்லை. 1994-ல் மகாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் 700 கோடி மதிப்பில் ஸ்டெர்லைட் ஆலையைத் தொடங்கும் முயற்சி நடந்தது. இந்தத் திட்டத்துக்காக 200 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது.

 அப்போதைய மகாராஷ்டிர முதல்வர் சரத்பவார், ஆலைப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். அனில் தென்னிந்தியா முழுக்க அலைந்தார். கேரளா, கர்நாடகா என எங்கும் இடம் கிடைக்காத நிலையில் கடைசியில் தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடியில் ஆலை அமைத்துக்கொள்ள அனுமதி தந்தார்!

1994-ம் ஆண்டு ஸ்டெர்லைட் உருக்காலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, இரண்டு வருடங்களில் ஆலை செயல்படத் தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகச் சுற்றுச்சூழல் அமைப்புகளும் ம.தி.மு.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராடினாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

40,000 டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்ட ஆலை, தற்போது 4 லட்சம் டன் உற்பத்தி எனும் நிலையை எட்டிவிட்டது. இப்போது, கூடுதலாக இன்னும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில், விரிவாக்கப் பணிகளைச் செய்து கொண்டிருக்கிறது ஸ்டெர்லைட்.

ஆலையின் செயல்பாடுகளால் தூத்துக்குடியைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டிருக்கிறது, விவசாயம் நலிந்துவிட்டது என்று தொடர்ச்சியாக எதிர்ப்புகள் எழும்பிய நிலையில்தான் இந்த விரிவாக்க அறிவிப்பு மக்களைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது.

``ஸ்டெர்லைட் ஆலை செயல்படத் தொடங்கிய பின்னர், இந்தப் பகுதியில் நிலத்தடி நீர் விஷமாக மாறிவிட்டது. நாள்தோறும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்திவிட்டு அதனை வளாகத்தில் உள்ள குளத்தில் சேகரித்து வைக்கிறார்கள். இரவு நேரங்களில் அதைக் கடலில் கலப்பதாகவும் புகார்கள் இருக்கின்றன. மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அளித்த அறிக்கையில் தூத்துக்குடி நகரம் அதிக சுற்றுச்சூழல் பாதிப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இந்த ஆலையின் அருகிலேயே மஞ்சள்நீர் காயல் என்கிற இடத்தில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கும் குடிநீர் எடுக்கப்படுகிறது. ஆனால், தாமிர ஆலையால் அந்தப் பகுதியில் உள்ள நீர் விஷமாகிவிட்ட நிலையில், அதனைக் குடிக்கும் மக்களின் நிலைமை என்னவாக இருக்கும்?’’ என்று ஆவேசப்படுகிறார் போராட்டக் குழுவைச் சேர்ந்த பிரபு.

“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலைக்கு மிக அருகில் இருப்பவை அ.குமரெட்டியாபுரம், காயலூரணி, மீளவிட்டான் முதலான 10-க்கும் அதிகமான கிராமங்கள். இங்கிருந்து தொடங்கிய போராட்டம்தான் தூத்துக்குடி முழுமைக்கும் பரவியுள்ளது. 

 `உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்குழு’ என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.பாத்திமாபாபு, ``ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடுவதற்கு அனுமதி கேட்டால்கூட இந்த அரசு தரமறுக்கிறது. 24-ம் தேதி லட்சக்கணக்கான மக்கள் திரண்ட பொதுக்கூட்டத்தை, நீதிமன்ற உத்தரவு பெற்றே நடத்த முடிந்திருக்கிறது.

இந்த ஆலைக்கான சுற்றுச் சூழல் தாக்கம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையில் பல அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் இருக்கின்றன. ஆனால், அந்த அறிக்கையில், ஆலையின் சுற்றுப்புறப் பகுதிகளில் மக்கள் வசிக்கவில்லை என்றும் நீர்நிலைகள் எதுவும் இல்லை என்றும் உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன’’ என்று குற்றம் சாட்டுகிறார்.

ம.தி.மு.க சார்பாக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், 2010-ல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி உத்தரவிடப்பட்டது. ஆனால், 10 நாள்களில் இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது ஆலை நிர்வாகம். தடை உத்தரவைத் தள்ளுபடி செய்ததுடன், ஆலை நிர்வாகத்துக்கு 100 கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அதனைத் தொடர்ந்து வைகோ சார்பாகப் பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

2013 மார்ச் 13-ல் இந்த ஆலையிலிருந்து கந்தக-டை-ஆக்ஸைடு அதிகப்படியாக வெளியேறியதால் மரம், செடிகள், பூக்கள் கருகின. மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு சுவாசிக்கவே சிரமப்பட்டார்கள். மாவட்ட நிர்வாகமே பொதுமக்களுக்கு ஏற்பட்ட இந்த பாதிப்பை வெளிப்படையாக ஒப்புக்கொண்டதுடன், உடனடியாகச் சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்தது.

ஆலையின் கழிவுகளால் அ.குமரெட்டியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கு இரு கைகளும் உணர்ச்சியற்ற நிலைக்குச் சென்று விட்டது. “இந்த ஆலையில் பகல் நேரத்தில் குறைவான அளவும், இரவு 12 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை அதிகமான அளவும்  நச்சுப்புகையை வெளியேத்துறாங்க. இந்த நச்சுப்புகை கலந்த காற்றை சுவாசிச்சா தொண்டைப்பகுதியில் எரிச்சல் ஏற்படுது. கண்கள் சிவந்து தண்ணீராக வருது. கொஞ்ச நேரத்துல மூச்சுத்திணறலும் தலைவலியும் வந்துடுது.

எனக்கு ரெண்டு கையும் உணர்வே இல்லாமப் போயி, மூணு வருசம் ஆகுது. சாப்பாடுகூட எடுத்துச் சாப்பிட முடியாது. சாப்பிடுறது, சேலை கட்டி விடுறது என எல்லாத்துக்கும் இன்னொருத்தரோட உதவியை நாடவேண்டியிருக்கு. ஒருநாள் ரெண்டு நாள் இல்ல, 20 வருசமா இதே நிலைமையில்தான் நாங்க இருக்கோம். எங்க மேல அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை’’ என்றார் ஆற்றாமையுடன்.

 ``காற்று வரணும்னு நீங்க வீட்டில் இருக்கிற ஜன்னலை எல்லாம் திறந்து வைப்பீங்க. ஆனா, நாங்க காற்று வந்துடுமோன்னு பயந்துபோய் ஜன்னலைச் சாத்திடுவோம்” என்கிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த மாரியம்மாள்.

இது குறித்து ஸ்டெர்லைட் ஆலை தரப்பிடம் விளக்கம் கேட்க முயன்றோம். அதிகாரிகள் தரப்பில் பேசியவர்கள், ``ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி இல்லாமல் பணியைத்  தொடக்கியதாகக் குற்றம் சாட்டுகின்றனர். முறையான அனுமதி இல்லாமல் தொடங்க முடியுமா? கடந்த 2010-ம் ஆண்டே இதற்கான அனுமதி மற்றும் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.  ஆனால், 2 மாதத்துக்கு முன்புதான் விரிவாக்கப் பணியைத் தொடங்கியுள்ளோம்.

“காற்று வரக்கூடாதுன்னு ஜன்னலை மூடறோம்!”

தாமிரம் தயாரிப்பில் வெளியாகும் தண்ணீரை வெளியே திறந்து விடுவதில்லை. அந்தத் தண்ணீரை ஆலைக்குள்ளேயே மறுசுழற்சி செய்து பயன்படுத்தி வருகிறோம். ஆலையிலிருந்து வெளியாகும் சல்பரை சல்ஃபியூரிக் ஆசிட்டாகவும், பாஸ்ஃபாரிக் ஆசிட்டாகவும் மாற்றி உரத்தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருளாக  விற்பனை செய்து விடுகிறோம். அவற்றை வெளியில் விட்டால் ஆலைக்குதான் நஷ்டம்.
 
ஆலையிலிருந்து வெளியாகும்  புகையால் பாதிப்பு ஏற்படுவதாகச் சொல்கிறார்கள். புகை வெளியாகும் பகுதியில் மத்திய, மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டல அலுவலகத்துக்கு ஆன்லைன் மூலம் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது. புகையின் அளவு கூடினாலோ, விஷத்தன்மை இருந்தாலோ உடனே தெரிந்துவிடும். ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாணவர்கள், பொதுமக்கள் இந்த ஆலையைப் பார்வையிட வரலாம். அவர்களே நேரில் பார்த்து முடிவு செய்யட்டும்’’ என்கிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷிடம் பேசினோம். ``குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இந்த ஆலையால் பாதிக்கப்படுவதாக மனு அளித்திருக்கிறார்கள். இதற்காக ஓர் ஆய்வுக்குழு அமைக்கவுள்ளோம். ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். ஆலையின் விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கெனவே மத்திய மாநில அரசின் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெற்றுள்ளார்கள்’’ என்கிறார்.

மக்களின் கோபக்குரல்கள் ஒருபுறம், ‘பாதிப்புகள் இல்லை’ என்ற விளக்கங்கள் இன்னொருபுறம். எப்படியிருந்தபோதும் மக்கள் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் சூழ்நிலை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.