அலசல்
Published:Updated:

“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா?”

“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா?”
பிரீமியம் ஸ்டோரி
News
“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா?”

கோவில்பட்டியில் கொந்தளித்த பழங்குடி மக்கள்

“எஸ்.டி-யாகப் பிறந்தது எங்கள் தவறா? எங்கள் சமுதாய மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக ஆர்.டி.ஓ செயல்படுகிறார்” என்று காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் கோவில்பட்டி ஆர்.டி.ஓ அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் அதிரடி கிளப்பியது இந்தப் போராட்டம்.

“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா?”

கல்லூரி மாணவி காயத்ரியிடம் பேசினோம். “தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படிக்கிறேன். அடுத்த மாதத்துடன் என் கல்லூரி படிப்பு முடியப்போகிறது. இப்போது வரை எனக்கு சாதிச்சான்று கிடைக்கவில்லை. எங்கள் தாத்தா, அப்பா, அம்மா எல்லாருக்குமே சாதிச் சான்றுகள் உள்ளன. ஆனால், எனக்குத் தர மறுக்கிறார்கள். கலெக்டரும், சப் கலெக்டரும் சொல்லியும்கூட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சான்று தராமல் பிடிவாதம் பிடிக்கிறார்கள். இதனால், என் கல்வித்தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிய முடியவில்லை. ரயில்வே, டி.என்.பி.எஸ்.சி என எந்த வேலைக்கும்  விண்ணப்பம் செய்ய முடியவில்லை. என் தம்பிக்கும் இதே நிலைமைதான். என்னைப் போல பல மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘என் வாழ்க்கையே உங்கள் கையிலதான் இருக்கும்மா...’ன்னு கண்ணீர்விட்டுக் கதறியும்  பிரயோஜனம் இல்லை’’ என்றார் ஆதங்கத்துடன்.

“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா?”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சக்திவேல் முருகன், ‘‘ கோவில்பட்டி ஆர்.டி.ஓ-வாக அனிதா பொறுப்பேற்று ஒரு வருடம் ஆகிறது. மனு கொடுக்க  வருபவர்களை அலட்சியப்படுத்தி விரட்டுவதே அவரது வழக்கம். சாதிச்சான்றிதழ் கோரி இரண்டு மாதங்களுக்கு முன் பேச்சு வார்த்தை நடத்தினோம்.எங்களின் பேச்சைக் கண்டுகொள்ளாமல், அவர் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருந்தார். இதைப் பத்திரிகையாளர்கள் படத்துடன் செய்தியாக வெளியிட்டனர். இவரின் கணவர் கமிஷன் பெற்றுக் கொண்டபிறகு பென்சிலால் டிக் அடித்த கோப்புகளில் மட்டும் கையெழுத்தைப் போடுவார்” என்று கொந்தளித்தார்.

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான டில்லிபாபுவிடம் பேசினோம். “ஆர்.டி.ஓ-வாக அனிதா பொறுப்பேற்றப் பிறகு கொடுக்கப்பட்ட 95 மனுக்களுக்குச் சான்றிதழ் வழங்கவில்லை. ‘நீ... பாம்பு பிடிக்கும் குலத்தொழிலை இப்போ ஏன்  செய்யல?’ என்று சொல்லி, கல்லூரி மாணவர்களை இவர்  இழிவுபடுத்துகிறார். இவர்மீது, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர உள்ளோம்” என்றார் உறுதியுடன்.

ஆர்.டி.ஓ அனிதாவிடம் கேட்டதற்கு, “சாதிச்சான்று வழங்குவது மட்டுமே என் வேலை அல்ல. மற்ற பணிகளும் உள்ளன. குடியிருக்கும் இடம், மனுதாரர் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும். அதன் பிறகுதான் சான்றிதழ்கள் வழங்க முடியும்” என்றார்.

“எஸ்.டி.யாகப் பிறந்தது எங்கள் தவறா?”

ஆட்சியர் வெங்கடேஷிடம் பேசினோம். “மனுதாரர்களுக்கு ஆவணங்களைச் சரிபார்த்து விரைவில் சாதிச் சான்றிதழ் வழங்கிடச் சொல்லியுள்ளேன்’’ என்றார்.

ஒரு சாதிச்சான்றிதழ் வாங்குவதற்கே இவ்வளவு போராட்டம் என்றால், வேலை எப்படி வாங்குவது?   

- இ.கார்த்திகேயன் 
படங்கள்: எல்.ராஜேந்திரன்