அலசல்
Published:Updated:

தென்திசை பார்க்கிறேன்!

தென்திசை பார்க்கிறேன்!
பிரீமியம் ஸ்டோரி
News
தென்திசை பார்க்கிறேன்!

ப.திருமாவேலன்

பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு எதிராக தூத்துக்குடியில் கிளம்பிய கிளர்ச்சிதான், இந்திய விடுதலைப் போராட்டத்தைக் கடந்த நூற்றாண் டில் தமிழகத்தில் விதைத்தது. வெறுமனே மாநாடு நடத்துவார்கள், கூட்டம் போடுவார்கள், ஊர் வலம் போவார்கள் என்று எகத்தாளமாக நம்பிக் கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக, அதாவது பிரிட்டிஷ் இந்திய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனிக்கு எதிராக, சுதேசி கப்பல் கம்பெனியை உருவாக்கினார் வ.உ.சி. அந்த நிறுவனத்தை முடக்குவதற்காக அரசு எடுத்த முயற்சியும் வ.உ.சி-க்கு ஆதரவாக தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் நடந்த எழுச்சியும்தான், பல்வேறு சதி வழக்குகளாகப் பதிவாகின. 1906-ம் ஆண்டின் தொடக்கத்தில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக எந்தெந்த மாவட்டங்களில் என்ன மாதிரியான போராட்டங்கள் நடக்கின்றன என்பது பற்றி மாவட்ட கலெக்டர்களிடம் சென்னை மாகாண கவர்னர் அறிக்கை கேட்டார். அப்போது, ஒரே ஒரு மாவட்டக் கலெக்டர் மட்டும்தான் வித்தியாச மான அறிக்கையைக் கொடுத்ததாக வரலாற்று ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன் தனது நூலில் (ஆஷ் கொலையும் இந்தியப் புரட்சி இயக்கமும்) பதிவு செய்துள்ளார்.

தென்திசை பார்க்கிறேன்!

1908-ம் ஆண்டு பிரிட்டிஷ் மிலிட்டரி ஆவணத்தின் தகவல்படி, ‘‘வெள்ளையர் எதிர்ப்புணர்ச்சி இருப்பதாகச் சந்தேகப்படக்கூடிய ஒரே மாவட்டம் திருநெல்வேலி மாவட்டம். அதிலும், தூத்துக்குடி நகரில்தான் இவ்வுணர்ச்சி நிலவுகிறது” என்று எழுதப்பட்டுள்ளதாக ஆ.சிவசுப்பிரமணியம் சொல்கிறார். இதோ, வரலாற்றின் பக்கங்களில் மீண்டும் தூத்துக்குடி.

ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக அல்ல, தங்களது வாழ்க்கைக்கு ஆதரவாக வீதிக்கு வந்துள்ளார்கள் மக்கள். தூத்துக்குடி, மீளவிட்டான், தெற்கு வீரபாண்டிபுரம், அ.குமார ரெட்டிபுரம், காயலூரணி ஆகிய ஊர்களில் வாழும் மக்கள், கடந்த இரண்டு மாதங்களாக காப்பரை விட வேகமான கொதிநிலையில் இருக்கிறார்கள். ‘1994-ல் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தை எதிர்த்து, 24 ஆண்டுகள் கழித்து இப்போது ஏன் போராட்டம் நடத்துகிறீர்கள்?’ என்பது போன்ற விஷமத்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் தேதி கசிந்த விஷவாயுவைவிட மோசமான கேள்வி இது. தனக்குத் தெரியவில்லையென்றால், எதுவுமே நடந்திருக்காது என்ற அதிமேதாவிகள் இவர்கள். இந்த நிறுவனம் இங்கு தொடங்கப்பட்டது முதலே எதிர்ப்பும் இருந்து வருகிறது. இன்னும் சொன்னால், இங்கு தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே இந்த நிறுவனம் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையை முதலில் குஜராத்தில் அமைக்க வேதாந்தா நிறுவனம் நினைத்தது. அங்கு எதிர்த்தார்கள். அதன்பிறகு, கோவாவில் அனுமதி கேட்டார்கள். அம்மாநில மக்கள் எதிர்த்தார்கள். மகாராஷ்டிர மாநில அரசு முதலில் அனுமதி வழங்கியது. ஸ்டெர்லைட் ஆலையும் திறக்கப்பட்டது. திட்டப்பணிகள் பாதி நடந்து கொண்டிருந்தபோது, இதன் ஆபத்தைப் புரிந்துகொண்டு மக்கள் எதிர்த்தார்கள். 1994-ல், அன்றைய மகாராஷ்டிர முதல்வர் சரத்பவார் அனுமதியை மறுத்தார். அதன்பிறகு, கேரளாவில் நுழைய முயற்சி நடந்தது. அங்கும் அனுமதி மறுப்பு. இறுதியில், திறந்தவீடான தமிழகத்துக்கு வந்துவிட்டது ஸ்டெர்லைட்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா அனுமதி தந்தார். சுற்றுச்சூழல் குறித்த புரிதலோ, இது மாதிரியான நிறுவனங்கள் பிற்காலத்தில் என்ன மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தொலைநோக்குச் சிந்தனையோ இல்லாத அந்தக் காலத்திலேயே, இதன் ஆபத்தை முதலில் உணர்ந்தவர்கள் மீனவ மக்கள். சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கறுப்புக்கொடி காட்டினார்கள். இந்த நிறுவனத்துக்குத் தாது ஏற்றி வந்த எம்.வி.ரீசா என்ற கப்பலை,  தூத்துக்குடி துறைமுகத்துக்குள் வரவிடாமல் ( 20.03.1996) மீனவ மக்கள் தடுத்தார்கள். அதன்பிறகுதான், தூத்துக்குடி நகரில் உண்ணாவிரதம் இருந்தார்கள் பொதுமக்கள். இப்படி எதிர்க்கப்பட்டதற்கு அடிப்படையான காரணம், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் என்ன சொல்லி அனுமதி பெறப்பட்டதோ, அந்த அடிப்படை யான விஷயத்தையே கடைப்பிடிக்க வில்லை என்பதால்தான்.

தென்திசை பார்க்கிறேன்!

மன்னார் வளைகுடாவில் 21 தீவுகள் உள்ளன. அவற்றைத் தேசிய கடல் பூங்காவாக தமிழக அரசு அறிவித்தது. எனவே, மன்னார் வளைகுடாவையொட்டிய 25 கிலோ மீட்டர் தூரம் என்பது பசுமை வளாகம். அதற்குள் இதுமாதிரியான நிறுவனங்களை அமைக்கக் கூடாது என்பது விதி. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை 14 கிலோ மீட்டர் தூரத்துக்குள் அமைக்கப்பட்டது. தூய சுற்றுச் சூழலுக்கான தேசிய அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பிரகாஷ், இந்த விதிமீறலை முதலில் கண்டுபிடித்தார். அவர்தான், முதன் முதலாக வழக்குப் போட்டார். இதில், வைகோ ஒரு மனுதாரராக இணைத்துக் கொண்டார். இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்ட சில மாதங்களி லேயே (1997 ஜூலை 5) நச்சுக்கசிவு கசிந்து, இந்த ஆலைக்கு அருகிலிருந்த நிறுவன ஊழியர்கள் 165 பேர் மயங்கி விழுந்தார்கள். இரண்டு ஆண்டுகள் கழித்து 11 பேர் மயங்கி விழுந்தார்கள். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீரியல் ஆய்வு நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்தது. 2010-ம் ஆண்டு, நீதியரசர் எலிப்பி தர்மாராவ் அமர்வு, ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். ஆலை இயங்க இடைக்கால அனுமதி அளித்தார்கள் நீதிபதிகள்.

ஒரு நிறுவனத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பா என்று யாரிடம் கேட்க வேண்டும்? அந்த நிறுவனத்தைச் சுற்றி வாழ்பவர்களிடம் கேட்க வேண்டும். சட்டப்புத்தகங்களிலும், கணக்கு வழக்குகளிலும், பேலன்ஸ் ஷீட்டுகளிலுமா மனித உயிர் இருக்கிறது? இந்த விவாதங்களெல்லாம் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்த போது, ஆபத்து தனது குணத்தைக் காட்டியது. 2013-ம் ஆண்டு மார்ச் 23-ம் நாள், ஆலையிலிருந்து வெளியான நச்சுவாயுக்கள் மக்களின் மூக்கை, கண்ணை, சுவாசக்குழாயை, இதயத்தை இறுதியில் உடலையே துளைத்தன. இருமல், மூச்சுத்திணறல், தலை சுற்றல் ஆகியவை சுற்றுவட்டார மக்களுக்கு ஏற்பட்டன. இதனை,  அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா நல்ல வேளையாக சீரியஸாக எடுத்துக் கொண்டார். அன்றைய தினமே நிறுவனத்தின் மின்சார இணைப்புத் துண்டிக்கப்பட்டது. அன்றைய மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் துரிதமாகச் செயல்பட்டார். ஆலை மூடப்பட்டது. ஆலையைத் திறக்க வழக்கம் போல உச்ச நீதிமன்றம் உடனடியாக உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் தொடர்பான இறுதித்தீர்ப்பின் படி, ஆலை செயல்பட எந்தத் தடையும் இல்லை என்று சொல்லிவிட்டது உச்சநீதிமன்றம்.

தென்திசை பார்க்கிறேன்!

‘‘ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு விட்டது. உச்ச நீதிமன்றமே சொன்ன பிறகு அப்பீல் எங்கே இருக்கிறது? அதனை மக்கள் ஏற்றுக்கொண்டுதானே ஆக வேண்டும்” என்று நாட்டுப்பற்று அறிவாளிகள் புதிய புத்திமதிகளை ஓதுகிறார்கள். ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது உண்மை. ஆனால், என்ன சொல்லி உத்தரவிட்டது? “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் வராது; அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளார்கள்; சுற்றுச்சூழல் மாசு அடையாது; மக்களுக்கு எந்த நோயும் வராது” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சொல்லவில்லை. இந்த நிறுவனம் இதுவரை செய்துள்ள விதிமீறல்கள் அனைத்தையும் தங்களது தீர்ப்பில் பட்டியலிட்ட நீதிபதிகள், 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தார்கள். ‘‘அதற்காக இந்த ஆலையை மூட முடியாது. ஆலையை மூடினால் இந்தியாவில் தாமிர உற்பத்தி பாதிக்கப்படும். தமிழக அரசின் வரி வருமானமும் தூத்துக்குடி துறைமுகத்தின் வருமானமும் குறையும். இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள்” என்றுதான் சொன்னது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்... இந்தியாவின் தாமிர உற்பத்திக்காக, தமிழகத்தின் வரி வருமானத்துக்காக, தூத்துக்குடி துறைமுகத்தின் நன்மைக்காகத் திறக்கப்பட்டது ஸ்டெர்லைட் ஆலை என்பதால்தான், இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிக்கு வருகிறார்கள்.

தென்திசை பார்க்கிறேன்!

டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்புதான் நினைவுக்கு வருகிறது. அரசு ஊழியராக இருப்பவர் அரசு சொத்தை வாங்கியது தவறுதான் என்று சொன்ன உச்ச நீதிமன்றம், அதற்கான பரிகாரத்தை அவரே தேடிக்கொள்ளும் வகையில், அதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்றது. அதிலிருந்து தப்பிய ஜெயலலிதா, சொத்துக்குவிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். 1997-ம் ஆண்டு, இந்த ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த பெருமாள், சங்கர் ஆகிய இருவர் பலியானார்கள். அவர்களது மரணத்துக்குக் காரணமாகப் பதியப்பட்ட வழக்கில், பொறியாளர் ஸ்டேன்லி ஜோன்ஸ்மீது தூத்துக்குடி சிப்காட் காவல்நிலையம் குற்றம் சாட்டியது. கடந்த 18 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக உள்ளார். இந்த வழக்கு, ஏப்ரல் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்திய சட்டம், நிர்வாகம், அரசு, காவல் ஆகியவை எப்படிச் செயல்படுகின்றன என்பதற்கு உதாரண புருஷராக ஸ்டேன்லி ஜோன்ஸ் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, இந்த மக்கள் யாரை நம்புவார்கள்? யாரை நம்புவது? தங்களது வாழ்க்கை சபிக்கப்பட்டதாக மாறிவிடக்கூடாது என்பதற்காக இப்போதே வீதிக்கு வந்துவிட்டார்கள்.

1996-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி இரண்டு பெண்கள் உள்பட 16 பேருடன் ஆரம்பமான ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம், இன்று பல்லாயிரக்கணக்கானவர்களின் ஆதரவுடன் நடக்கிறது. கல்லூரி மாணவர்கள் மட்டுமல்ல, பள்ளிச் சிறுவர்களுக்கும் வீதிக்கு வந்து உயிர்க்குரல் எழுப்புகிறார்கள். பாரதிதாசன் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

‘‘தென்திசை பார்க்கிறேன் என் சொல்வேன்
என் சிந்தையெல்லாம் பூரிக்குதடா!”