Published:Updated:

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

Published:Updated:
எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!
பிரீமியம் ஸ்டோரி
எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

‘கட் அண்டு பேஸ்ட்’ காமெடி அறிக்கை

சேலம் முதல் சென்னை வரை ரூ.10 ஆயிரம் கோடியில் அமைக்கப் படவுள்ள எட்டு வழிப் பசுமைச்சாலை குறித்த சாத்தியக்கூறு அறிக்கையில் முரண்பாடுகளுக்கும், பொய்களுக்கும், காமெடிகளுக்கும் பஞ்சமில்லை.

ஆறு மணி நேரம் பயணம் செய்து சென்றடைய வேண்டிய இடத்தை நாம் மூன்று மணி நேரத்தில் அடைந்துவிடலாம் என்று ரூ.10,000 கோடிச் செலவில் சென்னை முதல் சேலம் வரை எட்டு வழி பசுமைச்சாலை அமைக்கப்போகிறது தமிழக அரசு. ‘மூன்று மணி நேரத்தில்...’ என்பதற்கு... வீடுகள், விவசாய நிலங்கள், தோட்டங்கள் எனத் தங்களின் வசிப்பிடங்களையும் வாழ்வாதாரங்களை மக்கள் விலையாகக் கொடுக்க வேண்டியுள்ளது. இன்னொருபுறம், காடுகள் சூழ்ந்த மலைகளும் இயற்கையிடமிருந்து பறிக்கப்பட உள்ளன.

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

மக்களிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலங்கள் மற்றும் அவர்களின் மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் ஆகியவற்றுக்காக ரூ.3,002 கோடி (நிலங்களுக்கான இழப்பீடு ரூ.2,582 கோடி; வீடுகள், கடைகள், கோயில்கள் என 1,171 கட்டடங்களும் 104 சிறு கடைகளும் இடிக்கப்படுவதால் அவற்றுக்கான இழப்பீடாக ரூ.23.68 கோடி; மறுவாழ்வு மற்றும் மறுகுடிய மர்த்தலுக்காக ரூ.448 கோடி உள்பட) நிர்வாகம் உள்ளிட்ட பிற செலவுகளுக்காக ரூ.1.15 கோடி; அவசரத் தேவைகளுக்கான கூடுதல் நிதி ரூ.392 கோடி ஆகியவை ரூ.10,000 கோடியில் அடங்கும். சாலைக்காக எடுக்கப்படும் நிலங்களில் உள்ள பனை மரங்களுக்கு தலா ரூ.5,000, மா மரங்களுக்கு தலா ரூ.30,000, முதிர்ந்த தென்னை மரங்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

ஆனால், அரசின் இந்த அறிவிப்பு முற்றிலும் கண்துடைப்பு என்று அரசியல் கட்சிகள் விமர்சிக்கின்றன. பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ‘‘2016-ம் ஆண்டில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டபோது, விவசாயிகள் தங்களின் தென்னை மரங்களுக்கான இழப்பீடாக ரூ.3,000 கேட்டனர். ஆனால், அரசோ 103 ரூபாயை இழப்பீடாகக் கொடுத்தது. இவர்களா இப்போது ஒவ்வொரு தென்னை மரத்துக்கும் ரூ.50,000 தந்துவிடப் போகிறார்கள்...” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ராமதாஸின் கேள்விக்கு வலுச் சேர்ப்பது போலவே, அண்மையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி முன்னுக்குப்பின் முரணான வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார்.

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

இந்த நெடுஞ்சாலை திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையை இந்தியத் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்காக ‘ஃபீட்பேக் இன்ஃப்ரா’ என்னும் தனியார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த அறிக்கை இப்போது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இதுகுறித்து விவரிக்கும் சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன், ‘‘10,000 கோடி ரூபாய் செலவில் இந்தத் திட்டம் தேவையா அல்லது, வேறு வகையில் எளிமையாகச் செய்து முடிக்கும் சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பதையெல்லாம் ஆய்வுசெய்வதுதான் சாத்தியக்கூறு அறிக்கை. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இந்தத் திட்டம் குறித்து அறிவித்தார். அடுத்த 10 நாள்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார். உடனடியாக நில அளவைகளுக்கான பணிகள் தொடங்கப்படுகின்றன. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்துப் பேசச் சென்ற மக்களை, 50 போலீஸாரைக் கொண்டு ஆட்சியர் அலுவலக வாசலிலேயே தடுக்கிறார்கள். தெருவில் ஓடும் சாக்கடையை மூடுவதற்குக்கூட வருடக்கணக்கில் கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் அரசு, எதற்காக 10,000 கோடி ரூபாய் செலவிலான இந்தத் திட்டத்தை அவசர அவசரமாகச் செயல்படுத்துகிறது என்கிற கேள்வி இயல்பாகவே எழுகிறது. மேலும், இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் சேலத்திலிருந்து சென்னைக்கு விரைந்து பயணிக்கலாம் என்கிறார்கள். அதற்கான ஆதாரம் என்ன? எதற்காக அவ்வளவு விரைந்து போகவேண்டும்? இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களிடமும் அவர்களின் இழப்புகள் குறித்துக் கலந்தாலோசிக்க வேண்டும். ஆனால், இவை எதையும் செய்யாமலேயே மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட்டதாக, சாத்தியக்கூறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் மக்களோ, தங்களிடம் ஹெச்.ஐ.வி எய்ட்ஸ் விழிப்பு உணர்வுப் பிரசாரம்தான் அரசு சார்பாக மேற்கொள்ளப் பட்டதாகச் சொல்கிறார்கள். உச்சகட்டமாக இந்த அறிக்கையில், சீனாவில் இருக்கும் சியான் நகரத்தின் பெண்கள் மேம்பாடுக்கான திட்டத்தையெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏதோ ஒரு நாட்டின் சாலைத் திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கையைக் ‘கட் அண்டு பேஸ்ட்’ செய்திருக்கிறார்கள். நேர்மையான அரசாக இருந்தால், சீனாவின் அறிக்கையைக் காப்பி அடிக்காமல் சேலம் முதல் சென்னை வரை ஆய்வு செய்து அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும்” என்றார்.

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

இந்த அவசரத் திட்டத்தைச் செயல்படுத்து வதற்காக தினம் ஒரு கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது தமிழக அரசு. சூழலியலாளர் பியூஸ் மானுஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த வளர்மதி, நடிகர் மன்சூர் அலிகான் எனப் பலரும் கைது செய்யப்பட்டனர். தற்போது ஜாமீனில் வெளிவந்திருக்கும் பியூஸ் மானுஷ், ‘‘இந்தத் திட்டத்தினால் கல்வராயன், ஜவ்வாது, சேர்வராயன் எனப் பல மலைப் பகுதிகள் பாதிக்கப்படும். நீர் ஊற்றுகள் மற்றும் நீர் போக்குவரத்துத் தடங்கள் ஆகியவை தடங்கலுக்கு உள்ளாகும். காரியக்கோவில் அணைக்கான நீர்வரத்துப் பாதிக்கப்படும். கோமுகி அணைக்கான நீர்வரத்தும் பாதிக்கப்படும். யானை வழித்தடங்கள் பாதிக்கப்படும். இப்படிச் சூழலியல் சமன்பாட்டையே இந்தத் திட்டம் சீர்குலைப்பதாக இருக்கிறது. இந்தச் சிக்கல்கள் பற்றிய எந்த விவரமும் குறிப்பிடப்படாமல்தான், திட்டத்துக்கான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. இப்படி மலைகளைத் தகர்த்தெறிந்தால், இனி ‘உடைஞ்ச’ சேலம் என்றுதான் இதை அழைக்க வேண்டும். மேலும், அரசின் கைது நடவடிக்கைகளுக்குப் பயப்படாமல் இயற்கை வளத்தைச் சுரண்டும் இந்தத் திட்டத்தை எதிர்த்துக் தொடர்ந்து குரல் கொடுப்போம். திட்டத்தை வெளியிட்டது முதல், செயல்படுத்து வதற்கான பணிகள் வரை அனைத்திலும் சட்டவிதிகளை மீறியுள்ளது அரசாங்கம். இதற்கான இழப்பீடு தருவது குறித்த அரசின் அறிவிப்பே பெரிய தலைவலியை உருவாக்கப் போகிறது’’ என்றார்.

எட்டு வழி பசுமைச் சாலையும்... சீனப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டமும்!

சிறையில் உள்ள தனது மகளைச் சந்தித்துவிட்டு வந்த வளர்மதியின் தந்தை மாதையனிடம் பேசியபோது, ‘‘தமிழக அரசின் கைது நடவடிக்கை குறித்து என் மகள் அஞ்சவில்லை. சிறையில் வளர்மதியைப் பார்த்தபோது, ‘பொய் வழக்குகள்தானே போடுகிறார்கள்? போட்டால் போட்டுவிட்டுப் போகட்டும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன்’ என்று துணிச்சலுடன் கூறினாள். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. இதிலிருந்து மீண்டு என் மகள் வெளியே வருவாள். மீண்டும் இந்த மக்களுக்காகத் தனது போராட்டத்தைத் தொடர்வாள்’’ என்றார் பெருமையுடன்.

சாத்தியக்கூறு அறிக்கை பற்றி விவரம் கேட்க ‘ஃபீட்பேக் இன்ஃப்ரா’ நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம். பதில் சொல்ல வேண்டிய அந்த அதிகாரி 24 மணி நேரத்துக்கும் மேலாக முக்கிய மீட்டிங்கில் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

- ஐஷ்வர்யா, கே.புவனேஸ்வரி
படங்கள்: எம்.விஜயகுமார்