Published:Updated:

“என் மீது செருப்பு வீசினாங்க... நானும் செருப்பு வீசினேன்!”

“என் மீது செருப்பு வீசினாங்க... நானும் செருப்பு வீசினேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“என் மீது செருப்பு வீசினாங்க... நானும் செருப்பு வீசினேன்!”

தீண்டாமைக் குற்றச்சாட்டில் தலைமை ஆசிரியர்

‘‘எங்க டீச்சர் எங்களை எப்பவும் திட்டிக்கிட்டே இருப்பாங்க. எங்களைத் தனியாப் பிரிச்சு உட்கார வைப்பாங்க... வேற சாதி மாணவர்களை மட்டும் பக்கத்துல உட்கார வெச்சு அன்பா பேசுவாங்க. அந்த மாணவர்களுக்குத் தனி தண்ணிக்குடம், எங்களுக்குத் தனி தண்ணிக்குடம்...’’ என்று முகத்தில் சோகம் படரக் கூறுகிறார் 5-ம் வகுப்பு மாணவி ஒருவர். ‘‘டீச்சர் அடிச்சதால என் கால் வீங்கிருச்சு. எங்க அம்மாகிட்டபோய் சொன்னேன். மறுநாள் எங்க அம்மா ஸ்கூலுக்கு வந்து டீச்சர்கிட்ட கேட்டாங்க. எங்க அம்மாகிட்ட டீச்சர் சண்டை போட்டாங்க. எங்க அம்மா போனப்புறம், எங்க சாதியைச் சொல்லி டீச்சர் அசிங்கமா திட்டினாங்க’’ என்று வேதனை படர்ந்த முகத்துடன் கூறுகிறார் 5-ம் வகுப்பு மாணவர் ஒருவர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இருக்கும் எழுத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அனுசுயாமீது, அந்தப் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இவ்வாறு புகார் கூறுகிறார்கள். பள்ளியில் நடந்ததைப் பிள்ளைகள் வந்து சொன்னதும், பெற்றோர்கள் சிலர் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியையிடம் கேட்டுள்ளனர். அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டதாக, வீடியோ ஒன்று வாட்ஸ்அப்பில் பரவியது. தகவலறிந்த ராமநத்தம் போலீஸார், திட்டக்குடி தாசில்தார் சத்யன், விருத்தாசலம் மாவட்டக் கல்வி அலுவலர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். தாசில்தார் சத்யன், ஆர்.டி.ஓ சந்தோஷினி சந்திரா ஆகியோரும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதையடுத்து, அனுசுயா சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார். 

“என் மீது செருப்பு வீசினாங்க... நானும் செருப்பு வீசினேன்!”

என்ன நடந்தது என்பதை அறிய எழுத்தூருக்குச் சென்றோம். பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் தாயார் ராஜேஸ்வரி, “என் மகனை அனுசுயா டீச்சர் அடிச்சதுல அவனுக்குக் கால் வீங்கிருச்சு. மகன் வந்து சொன்னதும் நான் போய் அனுசுயா டீச்சர்கிட்ட கேட்டேன். ‘அப்படித்தான் அடிப்பேன். உன்னால் என்ன செய்ய முடியும்? என் கணவர் வக்கீலா இருக்கார். எனக்கு எம்.பி., எம்.எல்.ஏ எல்லோரையும் தெரியும். என்னை ஒண்ணும் பண்ண முடியாது’னு சொன்னாங்க. அதை என் உறவினர் பிரேமாவிடம் சொன்னேன். ‘நான் வந்து கேட்கிறேன்’னு அவங்க என்னுடன் பள்ளிக்கு வந்தாங்க. எங்க ஊரைச் சேர்ந்த வெள்ளையம்மாளும் வந்தாங்க. மூணு பேரும் அனுசுயா டீச்சர்கிட்ட நியாயம் கேட்டோம்’’ என்றார்.

5-ம் வகுப்பு மாணவி ஒருவர், ‘‘எங்க ஸ்கூல்ல எஸ்.சி மாணவர்களுக்குத் தனியாவும், மற்ற சாதி மாணவர்களுக்குத் தனியாவும் தண்ணி வெச்சிருப்பாங்க. ‘எருமை... பன்னி’னு எங்களைப் பாத்து அனுசுயா டீச்சர் திட்டுவாங்க. ‘உங்களுக்கெல்லாம் கொஞ்சம்கூட அறிவே இல்லை... நீங்கள்லாம் திருந்தவே மாட்டீங்களா?’னு கேட்பாங்க. நாங்க நல்லா படிச்சாலும் எங்களைப் பாராட்ட மாட்டாங்க. வேற சாதி பசங்ககிட்ட, ‘அதுங்கள்லாம்கூட நல்லா படிக்குது பாருங்க’னு எங்களைக் காட்டி மட்டமா சொல்வாங்க...’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“என் மீது செருப்பு வீசினாங்க... நானும் செருப்பு வீசினேன்!”

அந்தப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் வனிதா, ‘‘தலைமை ஆசிரியர் அனுசுயா, இங்கு ஐந்து ஆண்டுகளாகப் பணியாற்றுகிறார். அவர் அப்படிப் பேசக்கூடியவர் இல்லை. ஆனால், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை இங்கு படிக்கும் மாணவ, மாணவிகளே சொல்கிறார்கள். அதனால், இதையெல்லாம் நம்பாமலும் இருக்க முடியவில்லை’’ என்றார்.

எழுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ‘‘கடந்த மாதம் சாதியைச் சொல்லித் தலைமை ஆசிரியை திட்டினார் என்று இரு மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். அவர்கள், தலைமை ஆசிரியரிடம் சென்று அதுபற்றி கேட்டுள்ளனர். உடனே, ‘குடித்துவிட்டுத் தகராறு செய்தனர்’ என்று போலீஸில் அனுசுயா புகார் அளித்தார். மாணவர்களுக்குப் பாடம் போதிக்கக் கூடிய ஆசிரியரே இப்படி நடந்துகொள்வது மிகவும் வருத்தமாக உள்ளது’’ என்றார். 

“என் மீது செருப்பு வீசினாங்க... நானும் செருப்பு வீசினேன்!”

தலைமை ஆசிரியர் அனுசுயாவிடம் விளக்கம் கேட்டோம். ‘‘என்மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். நான் சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை. மாணவர்களைத் தனியாக உட்கார வைக்கவில்லை. தனியாகக் குடிநீர் வைக்கவும் இல்லை. இந்தப் பள்ளியில் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் ஆசிரியர் ஒருவரை, அவர் சரியாகப் பாடம் நடத்துவதில்லை என்று கண்டித்தேன். எங்கள் இருவருக்குமான பிரச்னையில், அவர்தான் இவர்களைத் தூண்டி விட்டுள்ளார். ஆகஸ்ட் 4-ம் தேதி, 50-க்கும் மேற்பட்டோர் என்னிடம் தகராறு செய்தனர். ஜூலை 31-ம் தேதி, மூன்று பெண்கள் என்னை அடித்து, அசிங்கமாகத் திட்டி, என்மீது செருப்பை வீசினார்கள். என்மீது விழுந்த செருப்பை எடுத்து நானும் வீசினேன்’’ என்றார்.

தீண்டாமைக் கொடுமை ஒரு பெரும் குற்றம். அதுவும் குழந்தைகளிடம் அதைக் காண்பிப்பதை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

- ஜி.சதாசிவம்
படங்கள்: எஸ்.தேவராஜன்