Published:Updated:

``ஸ்டெர்லைட் ஆலை எங்க ஊருக்கு வேண்டாம்..ப்ளீஸ்!" தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் வேண்டுகோள்!

``ஸ்டெர்லைட் ஆலை எங்க ஊருக்கு வேண்டாம்..ப்ளீஸ்!" தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் வேண்டுகோள்!
``ஸ்டெர்லைட் ஆலை எங்க ஊருக்கு வேண்டாம்..ப்ளீஸ்!" தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களின் வேண்டுகோள்!

ஸ்டெர்லைட் ஆலைக்குப் பல்வேறு தரப்புகளிலிருந்தும் எதிர்ப்பு வந்த வண்ணம் இருக்கின்றது. பசுமைத் தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க அனுமதி அளித்துள்ளது.

``ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் குறைபாடு இருப்பதாக மட்டுமே பசுமைத் தீர்ப்பாயம் கூறியுள்ளது. நாங்கள் விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆலையைச் செயல்படுத்தி வருகிறோம். இன்னும் இரண்டே மாதத்தில் ஆலையைத் திறக்கவிருக்கிறோம்'' என அதன் முதன்மைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்ததில் அதிர்ந்து போயிருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள்.

இந்த ஆலையை மூடச்சொல்லி கடுமையான போராட்டம், துப்பாக்கிச்சூடு, மக்கள் பலி என அனைத்தையும் கடந்து நிம்மதி பெருமூச்சு விட்ட தூத்துக்குடி மக்களுக்கு அடுத்த இடியாக இறங்கியிருக்கிறது பசுமைத் தீர்ப்பாயத்தின் `திறக்கலாம்' என்கிற செய்தி. ஆனாலும் விடுவதாக இல்லை மக்கள். ஆங்காங்கே போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தமாக, உடனடியாக களத்தில் குதித்திருக்கிறார்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்லூரி மாணவர்களிடம் பேசினோம்.

``எங்களுடைய ஊர்ல யாருடைய முகத்துலேயும் சந்தோஷமே இல்லங்க. அந்த ஆலையினால பல குடும்பங்கள் அழிஞ்சிருக்கு. எங்க கூட படிச்ச பொண்ணோட அப்பா கேன்சர் வந்து இறந்துட்டாரு. அவர் இறந்ததுக்கும், இந்த ஆலைக்கும் சம்பந்தமில்லைன்னு நினைச்சோம். தொடர்ந்து அந்தப் புள்ளையோட ஊர்ல நிறைய பேர் தோல் நோய், கேன்சர்னு பாதிக்கப்படுறாங்கன்னு கேள்விப்பட்டோம். அதற்கப்புறம் தான் அந்த ஆலையிலிருந்து வெளிவரக் கூடிய இரசாயனம்தான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம்னு தெரிஞ்சிகிட்டோம். அந்த ஆலையை நிரந்தரமா மூடணும்னு பல போராட்டங்கள் நடத்தினோம். எங்க கூட பொதுமக்களும் போராடினாங்க. அப்படித்தான் அன்னைக்கும் நாங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் சேர்ந்து போராட்டக் களத்துக்குப் போனோம். அங்க கூடியிருந்த மக்கள் எல்லோரும் கலெக்டர்கிட்ட மனு கொடுக்கப் போறோம்னு சொன்னாங்க. நாங்களும் அவங்கூட போனோம். எங்க கண் முன்னாடியே நிறைய புள்ளைங்களை போலீஸ்காரங்க அடிச்சாங்க. என் ஃப்ரெண்ட்டும் அடிவாங்கினா. அப்புறம் நாங்க எல்லோரும் அங்கிருந்து ஓடிட்டோம். துப்பாக்கிச் சூடு நடத்தி அதுல பதிமூணு பேரு இறந்துட்டாங்கன்னு கேள்விப்பட்டதும் எல்லோருக்கும் ஒரு மாதிரி ஆகிடுச்சு'' என்று பழைய நினைவுகளில் மூழ்கிப் போனார். மற்றொரு மாணவி தொடர்ந்தார்.

``இப்போ மறுபடி ஆலையைத் திறக்கப் போறாங்களாம்.. நாம போராடலாம்னு சொன்னா முன்னாடி வந்த மாதிரி மாணவர்கள் முன்வர மாட்டேன்றாங்க. கொஞ்ச பேர்தான் வர்றாங்க. பசங்க நிறைய பேர் வந்தாலும் பொண்ணுங்க கம்மியாதான் வர்றாங்க. இன்னும் எந்த உசுரையும் இழந்திடக் கூடாதுன்னு எல்லோர் மனசுக்குள்ளேயும் ஒரு பயம் இருக்கு. மக்கள்கிட்ட உயிர் பயத்தை ஏற்படுத்திட்டுப் போயிடுச்சு ஸ்டெர்லைட் நிர்வாகம். நாங்க ஸ்ட்ரைக் பண்ண மனு கொடுத்தாலே எங்களைச் சமாதானம் பேசி அனுப்பப் பார்க்கிறான்க போலீஸ். 

எல்லோர் வீட்டிலும் கறுப்புக் கொடி கட்டியிருக்கோம். யாரும் எதையும் மறக்கலை. ஆனா, அந்த ஆலையைத் திறக்கக் கூடாதுன்னு எல்லா மக்களும் ஆசைப்படுறாங்க. அந்த ஆலை எங்க ஊருக்கு வேண்டாமே.. ப்ளீஸ்! இத்தனை உசுரு போனதுக்கு அர்த்தமே இல்லாமப் போச்சு. அவங்க இறந்து என்ன பலன் கிடைச்சது? மறுபடி ஆலையைத் திறக்கத்தான் போறாங்க. ஊர்மக்கள் நோய் வந்து சாவத்தான் போறாங்க. அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் எங்களுக்குத் துணையா இருந்தாங்கன்னா அந்த கார்ப்பரேட் நிறுவனத்தை எங்களால் நிச்சயம் எதிர்க்க முடியும். எந்தப் பக்கமும் சப்போர்ட் இல்லாம தனியா நிற்கும்போது எங்களால் என்ன செய்ய முடியும்!'' என்றவர்களின் பேச்சில் கோபமும், இயலாமையும் ஒருசேர இருந்ததை உணர முடிந்தது!

மக்களுக்காக அரசா அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்!