Published:Updated:

கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?

கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?

பட்டினியில் பட்டாசுத் தொழிலாளர்கள்... சிவகாசியில் திறக்கப்பட்ட கஞ்சித்தொட்டிகள்!

கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?

பட்டினியில் பட்டாசுத் தொழிலாளர்கள்... சிவகாசியில் திறக்கப்பட்ட கஞ்சித்தொட்டிகள்!

Published:Updated:
கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?
பிரீமியம் ஸ்டோரி
கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?

சிவகாசியில் ஒட்டுமொத்தப் பட்டாசு ஆலைகளும் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுக் கிடக்கின்றன.  ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன. இதைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டிருக்கி ன்றன. ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்களோ கைகட்டி வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

சிவகாசியில் இயங்கிவரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள், சுமார் எட்டு லட்சம் பேருக்கு வாழ்வாதாரமாக விளங்குகின்றன. இந்த நிலையில், ‘பட்டாசு தயாரிக்க பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது, பசுமைப் பட்டாசுகளையே உற்பத்தி செய்ய வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை உச்ச நீதிமன்றம் விதித்தது. தொடர்ந்து, கடந்த நவம்பர் 12-ம் தேதி முதல், பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால், இந்தத் தொழிலை மட்டுமே நம்பியிருந்த அன்றாட கூலிகளான லட்சக்கணக்கானத் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளார்கள். அவர்களின் அன்றாட  பிழைப்பே கேள்விக்குறியாகிவிட்டது. பலர் திருப்பூருக்கும் வெளி மாநிலங்களுக்கும் கூலி வேலை தேடிச் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். 

இன்னொரு பக்கம், பட்டாசு ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று போராட்டங்கள் தொடர்கின்றன. டிசம்பர் 21-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாகத் திரண்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் என்று மிகப் பெரிய போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில், பட்டாசு - தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யூ) சார்பில் இனாம் ரெட்டியபட்டி, ஆமத்தூர், கன்னிசேரி புத்தூர், ஏழாயிரம்பண்ணை உட்பட பல இடங்களில் கஞ்சித்தொட்டிகள் திறக்கப்பட்டன.

கஞ்சித் தொட்டிகள் அரசுக்கு அவமானம் இல்லையா?

சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் தேவாவிடம் பேசினோம். “தீபாவளிக்காக மூடப்பட்ட பட்டாசு ஆலைகள் நவம்பர் 13-ம் தேதி திறக்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், திறக்கப் படவில்லை. ‘பசுமைப் பட்டாசு தயாரியுங்கள்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பசுமைப் பட்டாசு என்றால் என்னவென்றே யாருக்கும் தெரியவில்லை. இதனால், பட்டாசு ஆலைகளைத் திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. ஆலைகளைத் திறக்கக் கோரி சிவகாசியில் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைப் பிரசாரமும், 11-ம் தேதி பேரணியும் நடத்தினோம். ‘வேலையில்லாத நாள்களில் தொழிலாளர்களுக்கு இழப்பீடு தர வேண்டும்’ என்று ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலரைச் சந்தித்துக் கோரிக்கை விடுத்தோம். நூறு இடங்களில் கறுப்புக்கொடிப் போராட்டமும் நடத்தினோம். எந்த நடவடிக்கையும் இல்லாததால், 21-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டம் பெரும் எழுச்சியாக இருந்தது. அப்போது ஜனவரி 2-ம் தேதிக்குள் ஆலைகளைத் திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர், பேரியம் நைட்ரேட் இல்லாத பட்டாசுகள் தயாரிக்குமாறு ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால், அதற்கு மத்திய பெட்ரோலிய மற்றும் வெடிபொருள் கட்டுப்பாடுத்துறை அனுமதி வழங்காததால் அதுவும் திறக்கப்படவில்லை.

இத்தனைப் போராட்டங்களை நடத்தியும் அரசுத் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை. வேலை இல்லாததால் பட்டாசுத் தொழிலாளர்களின் குடும்பங்கள் உணவுக்குத் தவிக்கின்றன. வாங்கியக் கடனைத் திருப்பிக் கட்டமுடியாமல் தொழிலாளர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவங்களும் நடந்துள்ளன. தொழிலாளர்களின் இந்த வலியைச் சொல்வதற்காகத்தான் ஜனவரி 19, 20 ஆகிய இரண்டு நாள்கள் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஐம்பது இடங்களில் கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டத்தை நடத்தினோம்” என்று கூறிய தேவாவிடம், “இதற்கு என்ன தீர்வை முன்வைக்கிறீர்கள்?” என்று கேட்டோம்.

“காற்றில் ஏற்படும் மாசுக்கு பேரியம் நைட்ரேட் காரணம் என்று மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. இந்தப் பிரமாணப்பத்திரத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றால் மட்டுமே, பட்டாசு உற்பத்தியைத் தொடங்க முடியும். இதற்கு மாநில அரசின் அழுத்தமும் அவசியம். ஆனால், மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை” என்றார் வேதனையுடன்.

சமீபத்தில் சாத்தூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “பட்டாசுத் தொழில் மீண்டும் தழைத்தோங்க தமிழக அரசு அனைத்து வகையிலும் துணைபுரியும். இதற்காக, தனி வழக்கறிஞர் வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடினோம். ஆனால், முழுமையானத் தீர்ப்பு கிடைக்கவில்லை. பட்டாசுத் தொழிலைக் காக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

ஆனால், இன்றுவரை அதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. கஞ்சித் தொட்டிகள் திறக்கப்படும் அளவுக்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் பட்டினியில் பரிதவிக்கின்றன என்றால், அதைத் தங்களுக்கு நேர்ந்த அவமானமாகவும், தோல்வியாகவும்தான் மத்திய, மாநில அரசுகள் கருத வேண்டும். ஆனால், யாருக்கும் உறைத்ததுபோலத் தெரியவில்லை.

- இரா.கோசிமின்,
படம் : ஆர்.எம்.முத்துராஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism