Published:Updated:

`என்னுடைய வாக்கு யாருக்கும் கிடையாது!’ - சிவகாசி பட்டாசுப் போராட்டத்தில் முழக்கம்

`என்னுடைய வாக்கு யாருக்கும் கிடையாது!’ - சிவகாசி பட்டாசுப் போராட்டத்தில் முழக்கம்
`என்னுடைய வாக்கு யாருக்கும் கிடையாது!’ - சிவகாசி பட்டாசுப் போராட்டத்தில் முழக்கம்

பட்டாசு

`பட்டாசுத் தொழிலை பாதுகாப்போம்' என்ற முழக்கத்தோடு ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் ஆலை முதலாளிகள் பங்கேற்ற போராட்டம் சிவகாசியில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. பட்டாசு மற்றும் அதுசார்ந்த உப தொழில்களை நம்பி 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். பேரியம் நைட்ரேட் பயன்படுத்தக் கூடாது. பசுமைப் பட்டாசு மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவால் விருதுநகர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் 12-ம் தேதி முதல் அனைத்து ஆலைகளும் மூடப்பட்டுக் கிடக்கின்றன. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் வேலைவாய்ப்பின்றித் தவித்து வருகின்றனர். ஆலைகளைத் திறக்கக் கோரி கடந்த டிசம்பர் 21-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் மிகப்பெரும் எழுச்சியோடு நடைபெற்றது. அதுமட்டுமன்றி கறுப்புக்கொடி போராட்டம், மனிதசங்கிலி, உண்ணாவிரதம், சாலை மறியல் என தொழிலாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆலைகள் மூடப்பட்டு 100 நாள்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் உபதொழில் சார்ந்த அனைவரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்தனர். அதன்படி, மத்திய சுற்றுச்சூழல் விதியில் இருந்து பேரியம் நைட்ரேட்டுக்குத் தடை விதிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு சார்பில் சிவகாசிப - திருத்தங்கல் சாலையில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். பட்டாசுத் தொழிலை பாதுகாப்போம், பாரம்பர்யம் பாதுகாப்போம், சிவகாசியைப் பாதுகாப்போம் என்ற முழக்கங்களோடு அனைவரும் போராட்டத்தில் பங்கேற்றனர்.

பட்டாசு உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலாளர் மாரியப்பன் பேசும்போது, ``ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் அதைச் சார்ந்துள்ள சார்பு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அல்ல. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் 3 நிபந்தனைகளைதான் உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்தது. அந்த நிபந்தனைகளால் உற்பத்தி செய்ய முடியாமல் தொழில் முடங்கிப்போயுள்ளது. எனவே, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் பசுமை பட்டாசு என்பது உலகிலேயே என்ற உண்மையை தெரிவிக்க வேண்டும். சரவெடி இல்லாத கொண்டாட்டம் இல்லை. ஆனால், தடைக்கான காரணம் தெரியவில்லை. திட்டமிட்ட செயல் இது.

சிவகாசியில் உற்பத்தி செய்யாவிட்டால் தீபாவளிப் பண்டிகைக்கு சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படும். உள்நாட்டு தொழில் முற்றிலும் முடக்கப்படும். தமிழ்நாட்டில் 8 லட்சம் பேரின் வாழ்வாதாரமும் பறிபோகும். இதற்குப் பின் உள்ள சதி என்னவென்று தெரியவில்லை. காரணம் சொல்லாமல் இந்த வழக்கு ஒத்திவைக்கப்படுகிறது. தி.மு.க, பா.ம.க உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பட்டாசுத் தொழிலுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், அ.தி.மு.க எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதுவரை ஆதரவு நிலைப்பாட்டைக் காட்டி வந்த தமிழக அரசு தற்போது தனி தீர்மானம் தேவையில்லை எனக் கூறியுள்ளது. யாரும் வாக்களிக்க வேண்டாம் என நான் கூற முடியாது. ஆனால், என்னுடைய வாக்கு யாருக்கும் கிடையாது. வரும் தேர்தலில் நான் யாருக்கும் வாக்களிக்க மாட்டேன்'' எனத் தெரிவித்தார்.

சி.ஐ.டி.யு பட்டாசுத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் மகாலட்சுமி பேசும்போது, ``பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்து கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த ஊரில் இன்று ஆலைகள் மூடப்பட்டுள்ளதால் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் பெற்றோர் தவித்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஆலை வேண்டாம் என மக்கள் எதிர்க்கின்றனர். ஆனால், அந்த ஆலையைத் திறக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடுகிறது. பட்டாசுத் தொழில் வேண்டும் என மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், நீதிமன்றம் திறக்க மறுக்கிறது. அரசும் நீதிமன்றமும் மக்களுக்கு எதிராக உள்ளன.

தமிழக அரசு பட்டாசுத் தொழிலைக் காக்க சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இந்தத் தொழிலை காக்க மதம், இனம் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனத் தெரிவித்தார். தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் ஆசைத்தம்பி, சி.ஐ.டி.யு மாவட்டத் தலைவர் பி.என்.தேவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அடுத்த கட்டுரைக்கு