Published:Updated:

டெல்லி: `களமிறங்கும் 2,000 பெண்கள்; நெடுஞ்சாலை மறியல்!’ விவசாயிகள் போராட்டம் தீவிரம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம் ( AP )

டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் வரும் நாள்களில் போராட்டக் களத்தில் அவர்களுடன் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நடைபெற்றுவரும் விவசாயிகளின் `டெல்லி சலோ' போராட்டம் 20-வது நாளை எட்டியிருக்கிறது. இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் உச்சம் பெற்றுவருகிறது. ஒருபுறம், பல்வேறு தரப்பினர் தங்கள் விருதுகளைத் திருப்பியளித்தும், அரசுப் பணியை ராஜினாமா செய்தும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர். மறுபுறம், பா.ஜ.க தலைவர்கள் தொடர் போராட்டம் குறித்துப் பேசிவரும் கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திவருகின்றன. மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்குமிடையே நடைபெற்ற பல்வேறுகட்ட பேச்சுவாா்த்தைகளும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப், ஹரியானா மற்றும் அவற்றையொட்டியுள்ள கிராமங்களிலிருந்து வீட்டுக்கொரு போராளியை டெல்லிக்கு அனுப்ப கிராம மக்கள் திட்டமிட்டிருந்தனர். இந்தநிலையில், டெல்லி எல்லைகளில் போராடிவரும் விவசாயிகளின் குடும்பத்தைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட பெண்கள் வரும் நாள்களில் போராட்டக் களத்தில் அவர்களுடன் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதனால், பெண்களுக்கு வேண்டிய அத்தியாவசியத் தேவைகளுக்கும், கூடுதல் தங்கும் இடங்களுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

இந்தநிலையில், இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவிலுள்ள பஜ்னா கிராமத்தின் விவசாய சங்கத் தலைவரான ராம்பாபு கடேலியா (Rambabu Katelia) வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட்டம் நடத்தியதற்காக போலீஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

இது குறித்துத் தகவலறிந்த கிராமத்தினர் பால்டியோ காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, அவரை உடனடியாக விடுதலை செய்யக் கூறிப் போராடினர். இதற்கு போலீஸார் செவி சாய்க்காததால் பஜ்னா கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், டெல்லியை இணைக்கும் யமுனா நெடுஞ்சாலையில் வெட்டப்பட்ட மரங்களைக் கொண்டு சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, ராம்பாபு கடாலியாவை போலீஸார் விடுதலை செய்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய ராம்பாபு கடாலியா,``மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் விவசாயச் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி சர்வ்தாலீ கிசான் சங்கர்ஷ் சமிதியின் (Sarvdaleey Kisan Sangharsh Samiti) சார்பில் கடந்த ஒரு வாரமாக நூதன முறையில் போராட்டத்தை மேற்கொண்டு வந்தேன். திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் போராட்டக்களத்துக்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறு தெரிவித்தனர். அதற்கு நான் மறுப்பு தெரிவித்ததால், என்னைக் கைதுசெய்து அழைத்துச் சென்றனர்" என்று தெரிவித்தார்.

டெல்லி: டி.ஐ.ஜி ராஜினாமா... அடையாள உண்ணாவிரதம்! - வலுக்கும் விவசாயிகள் போராட்டம்!

அவரைத் தொடர்ந்து பேசிய பஜ்னா கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், விவசாய சங்கத்தின் முக்கிய நிர்வாகியுமான ராஜ்குமார் சௌகான், ``விவசாயிகளின் இந்த நாடுதழுவிய போராட்டத்தின் மூலம் அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு தொடங்கி, பல்வேறு சிக்கல்கள் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளன.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை பரீசிலித்து விரைவில் இதற்கு ஒரு நல்ல முடிவைக் கொண்டுவர வேண்டும். இல்லையெனில், இது நாட்டுக்கே பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது" என்று கூறினார்.

போராட்டம் உச்சம் தொடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் டெல்லியின் சிங்கு, மணியாாி, காஸிபூர் உள்ளிட்ட பல்வேறு எல்லைகள் முடக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன. எல்லையை ஒட்டிய பகுதிகளில் தடுப்புகளும், போலீஸாரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு