Published:Updated:

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: கன்னட அமைப்பினர் போராட்டத்தால் பரபரப்பு!

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: கன்னட அமைப்பினர் போராட்டத்தால் பரபரப்பு!
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: கன்னட அமைப்பினர் போராட்டத்தால் பரபரப்பு!
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு: கன்னட அமைப்பினர் போராட்டத்தால் பரபரப்பு!

மைசூரு: தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மைசூருவில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழக அரசு, மத்திய அரசுக்கு சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியது. இதையடுத்து மத்திய நீர்பாசனத்துறை, கர்நாடக அரசுக்கு நோட்ஸ் அனுப்பியது. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''தமிழக விவசாயிகள் தற்போது மிகவும் கஷ்டத்தில் உள்ளனர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 3 நாட்கள் தண்ணீர் திறந்து விடப்பட்டது. காவிரி நடுவர் மன்ற உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடவில்லை. இனி தண்ணீர் திறப்பு நிறுத்தப்படும். கர்நாடகத்தில் மழை பொய்த்ததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இங்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. இதனால் தான் தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய 198 டி.எம்.சி. தண்ணீரை கொடுக்க முடியவில்லை. கர்நாடகத்தில் நிலவும் வறட்சி, அணைகளில் தண்ணீர் இருப்பு இல்லாதது, குடிநீர் பஞ்சம் போன்ற நிலைமைகள் பற்றி அறிக்கை தயார் செய்து மத்திய நீர்ப்பாசனத்துறைக்கு கடிதம் எழுதப்படும். 28 ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் காவிரி நிர்வாக குழு கூட்டத்தில் கர்நாடகத்தின் நிலை பற்றி விளக்கப்படும்" என்றார்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவின் பேட்டியை கேட்ட விவசாயிகளும், பல்வேறு கன்னட அமைப்பினரும் மைசூரு நீர்ப்பாசனத்துறை அலுவலகம் முன்பு நேற்று மீண்டும் கூடி போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை. இதில் மேலும் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள், அலுவலக நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கேட்டை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தவர்கள், அலுவலகம் முழுவதும் உள்ள கண்ணாடிகள், மேஜைகள் ஆகியவற்றை அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் அவர்கள் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதை கண்டித்தும், உடனே தண்ணீர் திறப்பதை நிறுத்தக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் போராட்டக்காரர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல வைத்தனர்.

இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.