Published:Updated:

மெரினாவில் உண்மையில் நடப்பது என்ன...?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மெரினாவில் உண்மையில் நடப்பது என்ன...?
மெரினாவில் உண்மையில் நடப்பது என்ன...?

மெரினாவில் உண்மையில் நடப்பது என்ன...?

ல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மக்கள் போராட்டம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் தம் பாரம்பர்ய உரிமையை மீட்டெடுக்க சென்னை மெரினா கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். சுமார் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள், மெரினா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீவிரமடையும் போராட்டம்!

‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்திலும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆரம்பித்த போராட்டம், இன்று பல லட்ச இளைஞர்களால் மெரினா கடற்கரையில் கூடியிருக்கிறது. இது தவிர, தமிழகத்தின் பல பகுதிகளிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனாலும், பல ஊர்களிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் என அனைவரும் குடும்பம் குடும்பமாக மெரினாவை நோக்கியே படையெடுத்து வருகின்றனர். போராட்டத்தில் கலந்துகொள்ளும் மக்கள் அனைவரும் இரவு பகல் என்றுகூட பாராமல் போராடி வருகின்றனர். மெரினாவில் குழுமியிருக்கும் போராட்டக்காரர்கள் அனைவரும், ‘‘போராட்டத்தில் வெற்றிபெற்றால் மட்டுமே.. இந்த இடத்தைவிட்டு எழுவோம். இல்லையென்றால், அதுவரை இங்குதான் அமர்ந்திருப்போம். இந்தத் தடையை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நீக்க வேண்டும். இனிவரும் காலங்களில் கோக், பெப்சி, பீட்ஸா, பர்கர் போன்ற மேலைநாட்டு உணவுப்பொருட்களை சாப்பிடக் கூடாது’’ உட்பட பல கோரிக்கைகளைவைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இரண்டு அரசுகளும் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ‘‘இதை, அமைதியாகவே நடத்த அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இதை வேறுமாதிரி கொண்டு செல்ல நினைக்கின்றன என்றால், அதற்கும் தமிழர்களாகிய நாங்கள் பயப்பட மாட்டோம்’’ என்கின்றனர், தமிழினப் போராளிகள்.

அமைதியைப் பேணிகாக்கும் இளைஞர்கள்!

பொதுவாக இளைஞர்கள் ஒரு போராட்டம் நடத்தினால், அது ஒரு நாள்கூடத் தாக்குப்பிடிக்காமல் அடிதடியாக மாறும் என்ற நிலையே கடந்த பல வருடங்களாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று நாட்களாகப் பல லட்சம் இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இந்த ஜல்லிக்கட்டு போராட்டமானது அமைதியான முறையில் மட்டுமே நடந்துவருகிறது. இங்கு, எந்தவித சலசலப்பு தோன்றுவதற்கும் இளைஞர்கள் இடம்தரவில்லை. அனைவரும் ஒற்றுமையாக சகோதர, சகோதரி பாசத்தில்... தமிழன் என்ற உணர்வில் போராடி வருகின்றனர். போலீஸாருக்கும் போராட்ட இளைஞர்கள் உணவுப் பொட்டலங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கெட் பாக்கெட்கள் முதலியவற்றைக் கொடுத்து உதவி செய்து வருகின்றனர். இப்படி அமைதியான முறையில் போராடிவரும் தமிழ் இளைஞர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித பதிலும் தராமல் இருப்பது அரசியல்வாதிகளின் சுயரூபத்தைக் காட்டுவதாக இருக்கிறது.

பாதுகாப்புப் பணியில் இளைஞர்கள்!

லட்சக்கணக்கான இளைஞர்களின் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என மாநில அரசு ஆயிரக்கணக்கான போலீஸார்களை குவித்திருக்கும் நிலையில், பொதுமக்களின் எண்ணிக்கையும் அங்கு நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இந்த நிலையில் அவர்களுக்கு, முழுமையான பாதுகாப்பு வழங்கமுடியாத நிலைகூட போலீஸாருக்கு உருவாகி இருக்கிறது. அதனால் இளைஞர்களில் பலர், தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்து... பெண்கள், குழந்தைகள், வயதானோர் ஆகியோருக்கு ஓர் இயற்கை அரண்போல் பாதுகாப்புக் கொடுத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களையும் அவர்களே சரிசெய்து வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால் மக்கள் எந்தவிதத்திலும் பாதிப்படையக் கூடாது என்பதில் தீவிரமாக உள்ளனர். 

போராட்டத்தில் குவியும் குழந்தைகள்!

மெரினா போராட்டக் களத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் காண முடிகிறது. அந்தக் குழந்தைகளிடம் பேசியபோது, “ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில் நடக்க வேண்டும்; பீட்டா இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும்; எத்தனை நாட்கள் ஆனாலும் நாங்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துக்கொண்டுதான் இருப்போம்; தமிழ்நாட்டின் உரிமைக்காக நாங்கள் போராடுவோம்” என்றனர், ஆவேசத்துடன்.

போராட்டத்தின் முதுகெலும்பாக தன்னார்வலர்கள்!

பல லட்ச இளைஞர்கள், பொதுமக்கள் மேற்கொண்டுள்ள ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்துக்கு மிக அத்தியாவசியம் உணவு, தண்ணீர் மட்டுமே. இத்தனை லட்ச மக்களுக்கு எப்படிச் சாப்பாடு கிடைக்கும் என்ற எண்ணத்தில் இருந்த அனைவருக்கும், “உங்களுக்கான தேவைகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம். துணிந்து போராடுங்கள்” என்று தன்னார்வலர்கள் கூறிவருகின்றனர். வேன் மற்றும் லாரிகளின் மூலம் மெரினாவில் கூடி இருக்கும் அத்தனை மக்களுக்கும் உணவு, தண்ணீர், பழங்கள் போன்றவை கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர். ஒவ்வொருவரிடமும் அருகே சென்று, ‘‘நீங்கள் சாப்பிட்டீங்களா... போராடிக்கொண்டே சாப்பிடுங்கள். பழங்கள் சாப்பிடுங்கள்’’ என்று ஆயிரக்கணக்கான தன்னார்வலர்கள் உதவி செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் மெரினாவுக்கு அருகில் குடி இருக்கும் பல இளைஞர்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக தங்களின் வீடுகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். யாருக்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை அறிந்துகொண்டு, அதை வாங்கிக் கொண்டுவந்து கொடுக்கின்றனர். உண்மையிலேயே இந்த மாபெரும் போராட்டத்தில் தன்னார்வலர்களின் பங்கு அளப்பரியது.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மத்திய - மாநில அரசுகளின் கையில்தான் உள்ளன.

- ஜெ.அன்பரசன்
படங்கள்:எம்.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு