Published:Updated:

ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்

விகடன் விமர்சனக்குழு
ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்
ஜல்லிக்கட்டு கானா, விரட்டி பிடித்து கபடி, சுட்டிகளின் முழக்கம்... மெரினா போராட்டத்தின் நேற்றிரவு நிகழ்வுகள்

சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரினா போராட்டம் இன்று வெற்றிகரமான ஐந்தாவது நாள். கொஞ்சமும் சோர்வில்லை இந்த இளைஞர்களிடம். சுட்டெரிக்கும் வெயில், கடுமையான பனி... எதுவும் இவர்களைச் சோர்வடைய செய்யவில்லை. நாளுக்கு நாள் பெருகும் உற்சாகத்துடன் தங்களது கோரிக்கைகளை முன்னிறுத்தி போராடி வருகிறார்கள். நான்காவது நாள் இரவான நேற்று இரவு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பு.

"குளிரைப் போக்கும் கபடி"

போக்குவரத்தை ஒழுங்கு செய்வது, குப்பைகளைச் சேகரிப்பது, போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு தேவையான உணவு, குடிநீரை வழங்குவது என அத்தனை வேலைகளையும் தாங்களே இழுத்து போட்டு செய்கிறார்கள் இந்த இளைஞர்கள். இன்னொரு பக்கம் சிலர் இடைவிடாமல் முழக்கங்களை முழங்கிகொண்டிருந்தனர். இவ்வளவு பரபரப்புக்கு இடையில் 'கபடி.. கபடி... எனும் குரல் கேட்க, பலரின் பார்வையும் அந்தப் பக்கம் சென்றது. அங்கே சிலர் தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டான கபடியை வியர்க்க விறுவிறுக்க ஆடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அருகே சென்று கைத் தட்டி உற்சாகப் படுத்தவும் ஆட்டம் சூடு பறந்தது. "கபடி விளையாண்டு ரொம்ப நாள் ஆகிடுச்சு. இங்கே வந்ததும் விளையாடனும் போல தோணுச்சு. அதான் விளையாட ஆரம்பிச்சுட்டோம். விளையாட ஆரம்பிச்சப்புறம் இன்னும் புத்துணர்ச்சியா இருக்கு." என்கிறார்கள் வேலூரிலிருந்து வந்திருந்த இளைஞர்கள். 

"இது ஜல்லிக்கட்டு கானா"


 

போராட்டத்தில் பேசியும், வாசகங்கள் அடங்கிய பலகைகளை பிடித்துக் கொண்டும்தான் போராட வேண்டுமா என்ன!?. சில இளைஞர்கள், இசைக்கருவிகளை வைத்துக் கொண்டு கடற்கரை மணலில் நெருப்பு மூட்டி ஜல்லிக்கட்டை வலியுறுத்தும் 'கானா' பாடல்களைப் பாடி எல்லோருக்கும் உற்சாகம் கொடுத்தார்கள். 'கானா' பாடல்கள், நடனம், நாடகம், மைம், கருத்தரங்கங்கள் என, ஒரு கல்லூரியில் நடக்கும் கல்ச்சுரல் கொண்டாட்டம் போல உற்சாகமாய் இருக்கிறது போராட்டக்களம். பாடகர் கோவன் இளைஞர்களுக்கு மத்தியில் ஜல்லிக்கட்டு ஆதரவு பாடல்களைப் பாட விண்ணைத்தொட்டது கரவொலி..!!

"இலவச மொபைல் சார்ஜ்"


 

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் இளைஞர்கள் சிலர், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு இலவச மொபைல் சார்ச் செய்யும் வசதியை கொடுத்து வருகிறார்கள். "தினமும் ஆபிஸ் முடிந்ததும் இங்கே வந்திடறோம். இங்கே போராட்டத்துக்கு வருபவர்களுக்கு முக்கிய பிரச்னையாக இருப்பது மொபைல் சார்ஜ்தான். சார்ஜ் இல்லாமல் வீட்டுக்குக் கூட தொடர்புகொள்ள முடியாமல் சிரமப்பட்டதைப் பார்த்தோம். அதனால கடந்த மூன்று நாட்களாக இலவசமா மொபைல் சார்ஜ் பண்ணி கொடுத்துட்டு இருக்கோம்." என்கிறார்கள்.      

"க்யூட் சுட்டிகளின் கொண்டாட்டம்"

ளைஞர்கள், மாணவர்கள் திரண்டிருந்தாலும் எல்லோரையும் ஈர்ப்பது குழந்தைகள்தான். பீட்டா அமைப்பை எதிர்க்கும் வாசகங்களை, கையில் பிடித்துக்கொண்டு மழலை மொழியில் ஜல்லிக்கட்டை வலியுறுத்தி முழங்கிக்கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள். அப்பாவின் தோள் மேல் அமர்ந்து கொண்டு மெரினாவை சுற்றி வரும் குழந்தைகளைப் பார்ப்பவர்கள் அவர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளாமல் நகர்வதில்லை. "பொங்கல் கொண்டாட்டம்னா என்னன்னே தெரியல இந்தக் காலத்து பசங்களுக்கு. கார்ட்டூன், வீடியோ கேம்ஸ் தாண்டி எவ்வளவோ இருக்குன்னு நாம தானே சொல்லி கொடுக்கணும். இப்படி ஒரு போராட்டம் நடக்குன்னு தெரிஞ்சதுமே நேரா பசங்களை அழைச்சுக்கிட்டு இங்கே வந்துட்டோம். இங்கே வந்ததும் அவ்வளவு ஆர்வமா கோஷம் போட ஆரம்பிச்சுட்டாங்க. எங்க பசங்களுக்கு இதுதாங்க உண்மையான கொண்டாட்டம்." என்கிறார் கோவையைச் சேர்ந்த கதிர்.

ல்லிக்கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியிருக்கும் செய்தி நேற்று வெளியானது. கடந்த மூன்று நாட்களை விடவும் நான்காம் நாள் இரவான நேற்று இளைஞர்களின் போராட்டம் கொண்டாட்ட மனநிலையுடன் இருந்தது. செவ்வாய் கிழமை காலை 8 மணியளவில் தொடங்கிய மெரினா போராட்டம், இன்னும் சில மணிநேரங்களில் 100 மணி நேரத்தைத் தொடவிருக்கிறது. ஆனால் போராடும் இளைஞர்களின் தீவிரம் ஆரம்பத்திலிருந்தே 100 சதவிகிதத்திலிருந்து கொஞ்சமும் குறையவில்லை.

உலகையே திரும்பி பார்க்க வைத்த இளைஞர்களுக்கு வாழ்த்துகள்..!!

 

- க. பாலாஜி 
படங்கள்: சொ. பாலசுப்ரமணியன்