Published:Updated:

சங்க  இலக்கியத்தில் காளையும், ஜல்லிக்கட்டும்!

சங்க  இலக்கியத்தில் காளையும், ஜல்லிக்கட்டும்!
சங்க  இலக்கியத்தில் காளையும், ஜல்லிக்கட்டும்!

சங்க  இலக்கியத்தில் காளையும், ஜல்லிக்கட்டும்!

மிருகவதை என்று கூறி ஜல்லிக்கட்டுக்கு தடை கோரும் எவருக்கும் அதன் பழமையும், பாரம்பரியமும், பண்பாடும் தெரியாது என்பது சோகம். ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் சிலருக்குக் கூட அந்த தொன்மம் தெரியாமல் இருக்கலாம். 

ஏறு தழுவுதல் என்ற தூய தமிழ்ச்சொல்லால் அழைக்கப்பட்ட இந்த விளையாட்டு, அக்காலத்தில் ஆயர்களுடைய வாழ்வியல் பண்புகளில் ஒன்றாக இருந்தது. காளையை அடக்குபவனையே மணமகனாக தேர்வு செய்யும் வழக்கமும் ஆயர்கள் மத்தியில் இருந்தது. 

சங்க இலக்கியங்களும், பழமையான திராவிடர் நாகரீகம் தொடர்பான அகழ்வுகளிலும் ஏறு தழுவுதலுக்கான அடையாளங்கள் சித்திரங்களாகவோ, சுதைப் படிமங்களாகவோ கிடைத்திருக்கின்றன. கடும் பலமுள்ள காளைகளை அடக்கும் நிகழ்வுக்கு "கொல்லேறு தழுவுதல்" என்று பெயரிடுகிறார்கள்.  சிந்துவெளி நாகரீக அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட  முத்திரை ஒன்றில், சினமுற்ற ஒ காளை, ஒரு வீரனை கொம்பால் குத்தியெறியும் சித்திரம் இடம் பெற்றிருக்கிறது. இதன் மூலம் கி.மு. 2000 வாக்கிலேயே காளையைக் கொண்ட வீர விளையாட்டுகள் நம் வாழ்வோடு கலந்திருந்தததை உணர முடியும். 

தமிழர் வாழ்வியலுக்குச் சான்றாக இருக்கும் சங்க இலக்கியங்களில் தொகை நூல்களும், ஆற்றுப்படை நூல்களும் குறிப்பிடத்தகுந்தவை. தொகைநூல்களில் ஒன்றான கலித்தொகை காளையை அடக்குவதை வீரத்தின் அடையாளமாகக் குறிப்பிடுகிறது. பெரும்பணாற்றுப்படையும் ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடுகிறது.  சிலப்பதிகாரத்திலும் குறிப்புகள் உள்ளன. 

அக்காலத்தில் மாடுகள், செல்வமாகவும், கௌரவச்  சின்னமாகவும் பார்க்கப்பட்டன. எதிரியிடம் பசுக்களை பறிகொடுப்பது மன்னனுக்கு பெருந்தோல்வியாகக் கருதப்பட்டது. அதுவே வம்புக்கிழுக்கும் யுத்த தந்திரமாகவும் இருந்தது. 

காளைகளைப் பற்றி நம் இலக்கியங்கள் பலவாறு போற்றுகின்றன. முல்லை நிலத்தில் வாழும் கம்பீரமான காளைகள், சத்தான புல் மேய்ந்து, அழகிய மேனி பெற்றிருப்பதோடு, கடும் புலியையும் விரட்டும் வலிமையும் பெற்றிருந்ததாக பாடல்கள் இருக்கின்றன.  அவ்விதமான காளைகளுக்கு கொல்லேறு என்றும், மாக்காளை என்றும் பெயர். 

இலக்கியங்களில் ஏறு தழுவுதல் பற்றியும் காளைகள் பற்றியும் ஏராளமான செய்திகள் இடம் பெற்றுள்ளன. 

"இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு

மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை

மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்

கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப

வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய

நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை" - என்று பாடுகிறது மலைபடுகடாம்.

"முல்லைநில மக்களும் தங்கள் நிலங்களில் உள்ள வலிமை வாய்ந்த எருதுகளை ஒன்றுடன் ஒன்று பொருந்தும்படியாகச் செய்து ஆரவாரம் செய்வர். இவ்வெருதுகளின் வெற்றியைத் தங்கள் வெற்றியாக எண்ணி மகிழ்வர்" என்பது இதன் பொருள்.  

"மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள். இக் முல்லையம் பூங்குழல் தான்" என்று பாடுகிறது சிலப்பதிகாரம். வளமுடைய இளைய காளையை அடக்கி, ஏறியவருக்கு உரியவள் இம் முல்லை மலரை அணிந்துள்ள மென்மையான கூந்தலையுடையவள் என ஆய்ச்சியர்கள் ஆடிப்பாடுகிறார்கள் என்பது இதன் பொருள். 

"ஓஓ! இவள் இ ‘பொருபுகல் நல்லேறு கொள்பவர் அல்லால்,

திருமா மெய் தீண்டலர் என்று, கருமமா,

எல்லாரும் கேட்ப அறைந்து, எப்பொழுதும்

சொல்லால் தரப்பட் டவள்..."- என்ற கலிப்பாடல், 

ஆயமகன் ஆயமகளை மணமுடிக்க வேண்டுமானால் கொடிய போரேற்றைத் தழுவி வெற்றி பெற வேண்டும். இல்லையேல் இவள் அழகு மேனியைத் தீண்ட இயலாது என்று குறிப்பிடுகிறது. 

ஏறு தழுவுதல் என்றிருந்த தமிழர் பண்பாட்டை ஜல்லிக்கட்டாக மாற்றியவர்கள் நாயக்க மன்னர்கள். காளைகளின் கழுத்தில் காசுகளைக் கட்டி ஓடவிட்டு அடக்கி அக்காசுகளை அவிழ்த்தெடுப்பதே ஜல்லிக்கட்டின் உள்ளடக்கம். அந்த வழியில் தான் இப்போது ஜல்லிக்கட்டுகள் நடந்து வருகின்றன.  

இலக்கியங்களிலும், வரலாற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கிற ஜல்லிக்கட்டை நவீன விலங்குகள் நல ஆர்வலர்கள் மிருக வதை என்கிறார்கள். இந்தியாவில் இருந்து தினமும் பல ஆயிரம் டன்  மாட்டிறைச்சி உலகெங்கும் அனுப்பப்படுகிறது. பல ஆயிரம் கோடிகள் புழங்கும் அந்த தொழிலில் வெறும் 8 நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதுபற்றி வாய் திறப்பதில்லை  நவீன விலங்குகள் நல ஆர்வலர்கள். 

பசுக்களில் பாலைத் துளி விடாமல் கறக்க ஹார்மோன் ஊசியும், செயற்கைக் கருத்தரிப்பும் பெரும் வன்கொடுமையாக நிகழ்ந்து வருகிறது.  அதுபற்றிப் பேசினால் காலையும் மாலையும் குடிக்க "சைவப் பால்" கிடைக்காது நவீன விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு.   

பெரும் பணக்காரர்களின் பொழுதுபோக்காக இருக்கும் குதிரைப் பந்தயத்தில் ஒவ்வொரு முறையும் குதிரைகள் செத்துச் செத்துப் பிழைக்கின்றன. குதிரையை மூர்க்கமாக்கி ஓடச் செய்ய பல கொடுஞ்செயல்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் அதை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கேரளாவில் யானைகள் இல்லாத கோயில்களே இல்லை. திருவிழா மட்டுமின்றி, காதுகுத்து, கல்யாணத்தில் எல்லாம் யானை ஊர்வலம் நடத்துகிறார்கள். அதைத் தட்டிக்கேட்ட எவருக்கும் தைரியமில்லை. 

தமிழர்களின் தொன்மங்களில் ஒன்றான, ஒரு பண்பாட்டை குலைக்க முயற்சிக்கிறார்கள். இதன் பின்னால் இருப்பது தமிழர்கள் மீதான வன்மம் தானன்றி வேறில்லை..!

-வெ.நீலகண்டன்

அடுத்த கட்டுரைக்கு